பெண்கள் அழகுபடுத்திக்கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்: மோடி ஆதங்கம்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உடல்நலனில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க பத்திரிகையான வால்ட் ஸ்டிரீட்டிற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
உணவுமுறை அடிப்படையில், குஜராத் சைவ உணவு முறை அடிப்படையிலான மாநிலம், அதேபோல் பொருளாதார அடிப்படையில், நடுத்தர பிரிவினர் அதிகம் வாழும் மாநிலம். மாநிலத்தில் உள்ள நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்கள், தங்கள் உடல்நலன்களில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதன்மூலம், அவர்கள் தாங்களாகவே, தங்களது உடல்நலத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.
நடுத்தர வகுப்பு குடும்பங்களிடையே, உடல் நலன் மற்றும் அழகுக்கு என ஒரு பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. பால் குடித்தால் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு தாய் அறிவுரை கூறினால், பால் குடித்தால் குண்டாகி விடுவேன், இதனால் தனது அழகு கெட்டுவிடும் என்பதால் பால் குடிக்க மாட்டேன் என்று மகள் கூறும் நிலைமையே இங்கு அதிகளவில் உள்ளதாக அவர் கூறினார்.