ஜெயலலிதா 3-ந்தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார்
முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு 3-வது முறையாக வருகிற 3-ந் தேதி செல்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் ஸ்ரீரங்கம் பகுதியில் பல்வேறு சீரமைப்புபணிகள் செய்து வருகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் தெற்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் மேடையும், விழாவுக்கு வரும் பொது மக்கள் மற்றும் பயனாளிகள் அமர தகர கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கார் வரும் வழிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணியும், சாலைகள் செப்பனிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
சாலை ஓரங்களில் செம்மண் கொட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம்ரங்கநாதர் சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கோவிலில் உள்ளே சேஷராயர் மண்டபம் மற்றும் ராமானுஜர் சன்னதிக்கும் இடையே உள்ள அன்னதான கூடத்தில் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தை சுற்றி உள்ள நந்தவனம் பராமரிப்பு இன்றி இருந்தது. இதனை தூய்மைபடுத்தி பராமரிக்குமாறு கடந்த முறை ஸ்ரீரங்கம் வந்த முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த நந்தவனம் தற்போது தூய்மைப்படுத்தப்பட்டு புதிய மலர் செடிகள் வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
நந்தவனத்தில் உள்ள சிலைகளும் சீர்படுத்தப்பட்டு வண்ணப்பூச்சும் செய்யப்பட்டு உள்ளது. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள தரைத்தளத்தை சீரமைத்தும் இந்த பகுதியில் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்திலான கம்பி வலை வேலி அமைக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. முதல்-அமைச்சரின் வருகைக்காக ஸ்ரீரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.