பழங்கால நகை விற்பதாக கூறி நூதன மோசடி :
40 வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் கைது
திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையத்ததைச் சேர்ந்தவர் பீர்முகமது வயது-49, பனியன் தொழிலாளி. இவரிடம் கடந்த 2011 ஜூலை மாதம் கோபி அடுத்த ராயர்பாளையம் கொல்லன்காட்டைச் சேர்ந்த ரங்கசாமி என்கிற சின்னதம்பி வயது-50, என்பவர் தன்னிடம் பழங்காலத்தைய தங்க நகைகள் இருப்பதாகவும், தனது அவசரத் தேவைக்காக குறைந்த விலைக்கு அந்த நகையை விற்பதாகவும் கூறி தான் கொண்டு வந்திருந்த சில நகைகை காட்டியுள்ளார்.
அதனை உண்மையென நம்பிய பீர்முகமது ரூ. 1 இலட்சம் ரூபாயை சின்னத்தம்பியிடம் கொடுத்தார். ஆனால், நகையை கொடுக்காமல் சின்னத்தம்பிதப்பி விட்டார்.
2012 ஜூன் மாதம் பெருமாநல்லூர் ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் தில்லைவாணன் என்பவரிடம் இதேபோன்று ரூ.1 லட்சத்தை ரங்கசாமி நூதன முறையில் அபேஸ் செய்தார். இந்த இரண்டு வழக்குகளிலும் போலீசார் சின்னத்தம்பியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கோபி அடுத்த வாய்க்கால் மேட்டில் பழனிசாமி என்ற சலவை தொழிலளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தோடு, மோதிரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
கோபி அடுத்த மொடச்சூர் ரோட்டில் கடந்த மாதம் டி.என்.பாளையத்தைச் சேர்ந்த டாக்டர் சென்னியப்பனின் பைக்கில் சைடு பெட்டியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போனது.
கடந்த 3-ம் தேதி நம்பியூர் பேருந்து நிலையம் அருகே வங்கியில் கடன் பெற்றுத் திரும்பி எலத்தூர் ஆறுமுகம் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் பணம் அபகரிக்கப்பட்டது.
நேற்று, நம்பியூர் ஜீவா காலனி பகுதியில் முருகன் என்பவரிடம் கத்தியைக் காட்டி ரூ.750 பணம், கடிகாரத்தைப் பறித்து ஒரு நபர் தப்பி ஓடினார்.
மேற்கண்ட அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் சின்னத்தம்பி தான் ஈடுபட்டிருந்தார் என்பது சம்பவ இடங்களில் கிடைத்த தடயங்களில் அடிப்படையிலும், நகையை பறிகொடுத்தவர்கள் கூறிய அங்க அடையாளங்களிளிருந்தும் தெரியவந்தது.
அவரைப் பிடிக்க நம்பியூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று மாலை, பழனிகவுண்டன்புதூர் பகுதியில் ரங்கசாமி மறைந்திருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த சின்னத்தம்பி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ரங்கசாமிக்கு தொடர்பு உள்ளது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 ல், போலீசார் ஆஜர்படுத்தி சின்னத்தம்பியை சிறையில் அடைத்தனர்.