அரை ஏக்கர் நிலத்துக்காக மாமனார், மாமியாரை கொலை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி வயது-55, இவரது முதல் மனைவி மணியம்மாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இரண்டாவது மனைவியான அரப்புளியம்மாள் வயது-46, என்பவருடம் தனது தோட்டத்து வீட்டில் ராமசாமி வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராமசாமியும், அரப்புளியம்மாளும் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், ராமசாமிக்கும் மற்ற மூன்றாம் நபர்கள் யாருக்கும் பிரச்சினையும் இல்லை என்று தெரிந்து ள்ளது, மேலும், கொலை நடந்த அன்று இரவு மருமகன் பெரியசாமி தனியாக ராமசாமி வீட்டுக்கு வந்தது விசாரணையில் தெரிந்தது, ஆனால், நான் வரவேயில்லை என்று மருமகன் பெரியசாமி சத்தியம் செய்துள்ளார்.
போலீசார் முறைப்படி கூப்பிட்டு விசாரணை செய்ததில், ராமசாமியையும், அரப்புளியம்மளையும் கொலை செய்தது அவர்களது மருமகன் பெரியசாமி என தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகள் ராஜேஸ்வரியின் கணவர்தான் இந்த பெரியசாமி.
இவர், தனது மனைவியுடன் அத்தியூர்புதூரில் வசிக்கின்றனர். தினமும் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு செல்கிறார். ராமசாமிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கரை ஏற்கனவே மகள் ராஜேஸ்வரிக்கு ராமசாமி கொடுத்து விட்டார்.
மேலும், அரை ஏக்கர் நிலம் தரவேண்டும் என்று ராஜேஸ்வரியும், பெரியசாமியும் கேட்டு வந்துள்ளனர். ஆனால் ராமசாமி மறுத்துவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த பெரியசாமி, இரவு ராமசாமி வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து எட்டிப்பார்த்த ராமசாமியின் தலையில் பெரியசாமி கட்டையால் ஓங்கி அடித்தார்.
அவர் அரை மயக்கத்தில் கீழே விழுந்த சத்தம் கேட்டு படுத்திருந்த அரப்புளியம்மாள் எழுந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள்ளே சென்ற பெரியசாமி தன் கொண்டு சென்றிருந்த கத்தியால் அரப்புளியம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மனைவியின் அலறல் கேட்டு தட்டுத்தடுமாறி எழுந்து வீட்டுக்குள் வந்த ராமசாமியின் கழுத்தையும் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர், வீட்டின் பின்பக்க வழியாக, கடம்பூர் பஸ் ஸ்டாப்பில் வந்து படுத்து இரவு தூங்கிய பெரியசாமி, காலையில் எழுந்து முதல் பஸ்சில் சத்தியமங்கலம் சென்று பவானி ஆற்றில் ரத்தக்கறை படிந்த ஆடைகளை கழுவி குளித்துள்ளார்.
பின்னர், தூக்கநாயகன் பாளையம் சென்று வழக்கமாக கரும்பு வெட்டும் தோட்டத்துக்கு உரிமையா ளரை பார்த்து, ஒரு இழவு விழுந்து விட்டது. இன்றைக்கு வேலைக்கு வர முடியாது என தோட்ட உரிமையாளரிடம் கூறிவிட்டு கொலை நடந்த வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு, எதுவுமே தெரியாததுபோல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று மாமனார் உடலை பார்த்து கதறி அழுது நடித்துள்ளார்.
போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். அனால, தனக்கு எதுவுமே தெரியாது என்று நடித்துள்ளார். வீட்டில் பதிந்திருந்த ரத்தக்கறை படிந்த கால் தடத்தை வைத்தும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் கொலையாளி பெரியசாமி தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்தனர். கொலை நடந்த வீட்டில் மற்றொரு கால் தடமும் பதிந்துள்ளது. அது யாருடையது என பெரியசாமியிடம் விசாரிக்கின்றனர். கொலையில் பெரியசாமியின் மனைவி ராஜேஸ்வரிக்கும் தொடர்புள்ளதா ? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.