நான் இலவசங்களே வேண்டாம் என கூறவில்லை : விஜயகாந்த் பேச்சு
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சிறைவாசி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு சிறைவாசி குடும்பங்களுக்கு நல உதவிகளை வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியபோது, ’’திருவள்ளூர் சாலை குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் வரும் வழி மிகவும் அவலநிலையில் உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. தே.மு.தி.க. சார்பில் சிறை கைதிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க காவல்துறையை தொடர்பு கொண்ட போது, அவர்கள் தவறான முகவரி அளித்து ஏமாற்றி விட்டனர்.
சிறை கைதிகளின் குடும்பங்களுக்கு இதுவரை யாரும் உதவிகளை செய்யவில்லை. தற்போது தே.மு.தி.க. தான் நலத்திட்ட உதவிகளை முதன்முறையாக விநியோகிக்கிறது. நான் இலவசங்களே வேண்டாம் என கூறவில்லை. அந்த இலவசம் வேலைவாய்ப்பை தருவதாக அமைய வேண்டும். ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி தருகின்றனர். ஆனால் அது தரமற்றதாக உள்ளது.
தற்போது உள்ள அரசு ஆடு, மாடு வழங்குகின்றனர். அனைவருக்கும் வேலைவாய்ப்பு தாருங்கள் என கூறுகின்றேன். இரண்டு கட்சிகளும் மக்களுக்காக என்ன செய்தனர்.
அரசு மருத்துவமனைகளில் பெருச்சாளி நுழைந்து குழந்தையை கடிக்கும் நிலை தான் உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு ஆதரவு தந்தால் மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நன்றாக சிந்தித்து நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.