வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவது குறைந்துள்ளது: கர்நாடக துணை முதல்வர்
வடகிழககு மாநில மக்கள் கர்நாடகத்திலிருந்து வெளியேறுவது குறைந்துள்ளது என்று கர்நாடக துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான ஆர். அசோக் தெரிவித்தார்.
பெங்களூரில் நாகலாந்து மின்சாரத்துறை அமைச்சர் சீமா மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சோட்டாசி ஆகியோர் ஆர்.அசோக்கை அவரது இல்லத்தில் சந்தித்து வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர். அசோக் கூறியதாவது:
வடகிழக்கு மாநில மக்களுக்கு பெங்களூரில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு சிறிய தாக்குதல் சம்பவங்களை தவிர வேறு அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து தங்கள் சொந்து ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும் வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மக்களை மிரட்டியதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது.
வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது போலீஸில் பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும். குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.