விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்சே
விக்கிலீக்ஸ் இணையதளம் அதிபர் ஜீலியன் அசாஞ்சே, 5 மாதத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியிட்டு உலகத்தை அதிர்ச்சியடைய செய்தவர் ஜீலியன் அசாஞ்சே. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரை தண்டிக்க முயற்சி எடுத்தது.
அச்சமயத்தில் லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் ஜீலியன் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். மார்ச் மாதத்தில் இருந்து வெளியே வராமல் இருந்த அவர், ஈக்குவடார் தூதரகத்தின் பால்கனி வழியாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் இருக்கும் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி. சரியான பாதையில் செல்லுமாறு அதிபர் ஒபாமாவை கேட்டுக்கொள்கிறேன். விக்கி லீக்ஸ்க்கு எதிரான பழிவாங்கும்போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும். எப்.பி.ஐ. உளவு அமைப்பை அமெரிக்கா கலைத்துவிட வேண்டும். எங்கள் ஊழியர்களை அமெரிக்கா தண்டிக்க முயலக்கூடாது. பத்திரிக்கையாளர்களை பழிவாங்க மாட்டோம் என அமெரிக்கா உலகிற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றார்.