ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி
ஜப்பானில் இ கோலி பாக்டீரியா பாதித்த ஊறுகாயை சாப்பிட்டு 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முட்டை கோஸில் தயாரிக்கப்படும் ஊறுகாய், ஜப்பானில் மிகவும் பிரபல உணவாக உள்ளது. இதை சைட் டிஷ்ஷாக பயன்படுத்துகின்றனர். இந்த ஊறுகாய் ஜப்பானின் பல பகுதிகளில் அமோகமாக விற்கப்படுகிறது. வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ நகரில் இந்த ஊறுகாயை சாப்பிட்ட பலர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களாக ஊறுகாய் சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உள்ளூர் வியாபாரிகள் சிலர் ஊறுகாய் தயாரித்து பல இடங்களில் விற்றுள்ளனர். அந்த ஊறுகாய் இ கோலி பாக்டீரியாவால் கெட்டு போயுள்ளது. அதை சாப்பிட்ட சிறுவன் உள்பட 6 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.