வாக்கு வங்கி அரசியல் நடத்தவில்லை: ஞானதேசிகன்
மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள், ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழாக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பும் எஸ்.எம்.எஸ். வீடியோ தகவல்கள் அனைத்தும் வெளிநாட்டு சதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் நேரங்களில் பா.ஜனதா ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும். பின்னர் அப்படியே விட்டு விடும். இப்போது சிறுபான்மை மாணவர் கல்வி உதவி தொகையை கிளப்புகிறார்கள்.
சச்சார் கமிட்டி இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை ஆராய்ந்து வழங்கிய பரிந்துரை அடிப்படையில்தான் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்த வில்லை என்றார்.