மடியில் கனம் இருப்பதால்தான் வழக்கை கண்டு ஜெயலலிதா அஞ்சுகிறார்: கலைஞர் அறிக்கை

சட்டத்தை வளைத்து காவல்துறையை பயன்படுத்தி குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது துஷ்பிரயோகம் செய்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பது சரிதானா என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மடியில் கனம் இருப்பதால்தான் இந்த வழக்கை கண்டு ஜெயல-தா அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய சட்ட வரலாற்றிலேயே இதுவரை காணாத ஆச்சரியமாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரு வழக்கு நடைபெறுகிறதென்றால் அது நமது முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்குதான்! 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு 2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டு, அதன் பிறகும் எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் விசாரித்து பின்னர் மூன்றாவதாக தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் விளக்கத்திற்கு மேல் விளக்கம், கேள்விக்கு மேல் கேள்வி, வாய்தாவுக்கு மேல் வாய்தா என்று கேட்டே நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடித்தது என்பார்களே, அதைப்போல ஜெயல-தா தரப்பு இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதிக்கே தகுதியில்லை என்று முறையிடும் அளவுக்கு சென்றுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
சட்டத்தை வளைத்து காவல்துறையை பயன்படுத்தி குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது துஷ்பிரயோகம் செய்த ஜெயல-தா, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பது சரிதானா என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
என்னதான் இவர்கள் வழக்கை நீட்டிக்க இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டாலும் மக்களுக்கும் உலகத்திற்கும் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது எந்த அளவிற்கு வலிமையான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான ஒன்று என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எதற்காக இப்படியெல்லாம் வழக்கை இழுத்தடிக்கிறார்கள்? “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் ஏற்படும்!” இதோ ஒரு உதாரணம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் எம். மாரியப்பன் என்பவர், கோவை சிறப்பு துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) உத்தரவை எதிர்த்து கோவை முதன்மை உதவி நீதிபதி நீதிமன்றத்தில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த முறையீட்டு மனு கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அதை விரைவில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கக் கோரியிருந்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவை14 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருப்பது கவலை அளிக்கும் அம்சம். நிச்சயமாக ஜீரணிக்க முடியாதது. வழக்கு தாக்கல் செய்தவரின் வழக்குக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு - 14 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு வழக்குக்கு என்றால் - 16 ஆண்டுகளாக நடைபெறும் ஜெயலலிதா தரப்பினரின் சொத்துக்குவிப்பு வழக்குக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா? பொருந்தாதா? அனைத்துச் சட்டங்களையும் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப துஷ்பிரயோகம் செய்தவர்கள் - அவர்கள்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை இவ்வாறு இழுத்தடிக்கிறார்கள். இது சரிதானா என்பதை நாட்டு மக்களே கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.