தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் வழியாக புருலியாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 12.15 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் அருகே சென்றபோது திடீர் என்று ரெயில் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே டிரைவர் ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். சுமார் 2 அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் கிடந்தது. தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த அந்த இரும்பு துண்டின் மீது ரெயில் ஏறி இறங்கியதால் பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரெயில் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவண்ணாமலை மற்றும் வேலூரில் இருந்து என்ஜினீயர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இரும்பு துண்டு மீது ரெயில் ஏறி இறங்கியதில் தண்டவாளத்தின் அடியில் போடப்பட்டிருந்த கான் கிரீட் உடைந்திருந்தது. தண்டவாளத்திலும் வளைவுகள் காணப்பட்டது. அதனை ஆய்வு செய்த என்ஜினீயர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 2 அடி நீள இரும்பு தண்டவாள துண்டை மர்ம நபர்கள் தண்டவாளத்தின் குறுக்கே வைத்தது தெரிய வந்தது. ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டை வைத்து உள்ளதாக தெரிகிறது. பயங்கர சத்தம் கேட்டவுடன் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லை என்றால் ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்க வில்லை. மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.