அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு
ஹசாரே குழு அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளதற்கு, சிவசேனை கட்சித் தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, தனது கட்சிப் பத்திரிக்கையான "சாம்னா'வில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியது:
அரசியல் பற்றி சில அறிவாளிகள் கூறும்போது, போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். இதில் ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
சமீபத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தேன்.
அங்கு கூடியிருந்தவர்கள் ஹசாரே குழுவிடம் இருந்து ஏதாவது நல்ல செய்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்ததைக் காண முடிந்தது. ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மட்டுமே இருந்து எதுவும் சாதிக்க முடியாது என ஹசாரே குழு உணர்ந்து, தேர்தல் வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம்.
நமது நாட்டில் மக்கள் சக்தியோடு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க ஜனநாயகம் வழிவகுக்கிறது. யோகா குரு பாபா ராம்தேவும், ஹசாரே குழுவின் அரசியல் கட்சிக்குள் இணைந்து செயல்படுவாரா அல்லது தனியாக இருந்து செயல்படுவாரா என்பது தெரியவில்லை. போஃர்பஸ் ஊழல் நடந்தபோது ஹசாரே குழு ஏன் அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளில் ஊழல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
தேர்தலின்போது கறுப்பு பணம் புழங்குவதை தடுக்காத வரை ஊழலுக்கு முடிவு என்பது கிடையாது.
நம் நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசியலை வழிநடத்திச் செல்கின்றன. பெரிய அளவில் அங்கு பணம் முதலீடு செய்யப்படுகிறது. பணம் இல்லாமல் யாரும் தேர்தலில் நின்றுவிட முடியாது.
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் கூறியதுபோல், பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடு முழுவதும் எப்படி ஹசாரே குழு பிரசாரம் செய்யப்போகிறது என்பதை விளக்க வேண்டும். இதற்கு ஹசாரே குழு பதிலளிக்க வேண்டும் என பால்தாக்கரே கூறியுள்ளார்.