பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
திருப்பூரில் கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல்கள் வந்தன. சூதாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் திருப்பூரில் அவினாசி ரோட்டில் உள்ள திருப்பூர் கிளப்பில் நேற்று இரவு 8 மணி அளவில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சிலர் சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரத்து 420 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் கிளப்பில் காசு வைத்து சூதாடியதாகவும், போலீசை கண்டதும் தலைமறைவாகி விட்டதாகவும் கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பெஸ்ட் ராமசாமி, ‘’நான், திருப்பூர், கோவை, நீலகிரியில் உள்ள பல கிளப்பில் உறுப்பினராக உள்ளேன். நேற்று கோவையில் நடைபெற்ற கொ.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டம் முடிந்ததும் இரவு 7 மணி அளவில் திருப்பூர் திரும்பினேன். அங்குள்ள திருப்பூர் கிளப்புக்கு சாப்பிட சென்றேன். வழக்கம் போல் சிலர் சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் காசு வைத்து சூதாடவில்லை. அந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார் சூதாடியவர்களை பிடித்துக் சென்றனர்.
நான் சம்பவ இடத்தில் தான் இருந்தேன். போலீசார் என்னை பார்த்தனர். நான் சீட்டாடவில்லை என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் சூதாடியதாகவும், தலைமறைவாக உள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் கூறுவது போல் நான் தலைமறைவாகவில்லை. வீட்டில் தான் இருக்கிறேன். என் பெயரை கெடுக்க வேண்டும் என்று சதி செய்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.