ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா, நான்கு தலைமுறைகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் முத்துக்குமார் தவுட்டு ஆலை அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு சொந்தமான, அன்னை காமாட்சியம்மன் வழிபாடு தலம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப் படும். 11வது ஆண்டாக கொண்டாடப்படும் இந்த விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு 9 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வருதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தக்குடங்களை, திருமணமாகாத வாலிபர்கள் எடுத்து வந்தனர்.
அதை தொடர்ந்து, புற்றுக்கண்ணில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, சுவாமி உருவம் செய்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தி, கிடாவெட்டி பலி கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கும், வெளி நபர்களுக்கும் அனுமதிஇல்லை.
10 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த மரபு திருவிழாவில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மட்டுமே பங்கேற்று வருகின்றனர்.