அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
அணுஉலை விபத்து இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷியாவுக்கு, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூடங்குளத்தில் நிறுவியிருக்கும் அணுஉலைகளில் விபத்துகளோ, வேறு பாதிப்புகளோ ஏற்பட்டால், நமது நாட்டு நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இழப்பீடு எதுவும் வழங்கமாட்டோம் என ரஷிய அரசு தொடக்கம் முதலே வாதிட்டு வருகிறது. ஆனால், பிரதர் மன்மோகன் சிங் இப்போதுதான், ரஷியாவுக்கு இப்படிப்பட்ட சலுகை கொடுத்தால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கேட்பார்கள். எனவே அந்தச் சலுகையைத் தர முடியாது என பேசியிருக்கிறார். இந்திய அரசு நிறுவனமான அணுமின் கழகமும், கூடங்குளத்திற்கு அணு உலை விநியோகிக்கும் ரஷிய நிறுவனமான ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனமும் 2010-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. ரஷிய நிறுவனம் நிறுவுகின்ற உலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த நிறுனத்திடம் இருந்து இழப்பீடு கோருவோம் என இந்திய அரசு வாதிட்டது. ஆனால், 2008-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று காரணம் காட்டி ரஷியா இழப்பீடு தர மறுக்கிறது. 2008-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவில் அணு உலை கட்டும்போதோ அல்லது இயங்கும் போதோ நிகழும் அனைத்து விபத்துகளுக்கும், நஷ்டங்களுக்கும் இந்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்பதாக தெரிவிக்கிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்படி மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தினால் மாசு ஏற்படுத்துவரே நஷ்டஈடு வழங்க வேண்டும். 1963-ம் ஆண்டின் வியன்னா அணு விபத்து உரிமையியல் பொறுப்படைவு சட்டத்தின் படியும் அணு உலைகள் தயாரித்து விற்கின்ற நிறுவனம், நஷ்டங்களுக்கும் பொறுப் பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, நமது நாட்டு சட்டங்களுக்கு எதிராக நமது அரசே ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும், சர்வதேச விதிகளுக்கு எதிராக ரஷிய அரசு செயல்படுவதையும் வன்மையாகக்க கண்டிக்கிறோம். தரமற்ற அணுஉலை வியாபாரத்தால் வரும் லாபமெல்லாம் எங்களுக்கு, பாதிப்பு-நஷ்டங்களெல்லாம் உங்களுக்கு என்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் ரஷிய அரசைக் கடுமையாக எதிர்க்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.