மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது. பார்லிமென்ட் கூட்டத் தொடரில், வறட்சி, விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
மேலும், பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, லோக்சபா சபை முன்னவரையும், காங்கிரஸ் கட்சி அறிவிக்கலாம். சபை முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாகி விட்டதால், அந்தப் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை அவை முன்னவராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் சிலர், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், ராகுல்காந்திக்கு கட்சியிலும், அரசிலும் கூடுதல் பொறுப்பு வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.