பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் எம்.மதிவாணன் பேசும்போது கூறியதாவது:- பள்ளி, கல்லூரி வாகனங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதன்படி பள்ளி வாகனத்தில் பள்ளியின் பெயர், தொலைபேசி எண் எழுதப்பட்டு இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள், கதவுகளுக்கான உறுதியான தாழ்ப்பாள்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஓட்டுனர்கள் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஓட்டுனருடன் மற்றொரு தகுதி வாய்ந்த பொறுப்பாளர் இருக்க வேண்டும். இருக்கைகளின் கீழ் மாணவர்கள் புத்தகங்கள் வைக்க தேவையான இடம் இருக்க வேண்டும். பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனத்தில் உடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போக்குவரத்து மேலாளர் என்று ஒருவரை பணியில் அமர்த்த வேண்டும். பள்ளி வாகனத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். அந்த குறைகளை உடனே சரிசெய்ய வேண்டும். வாகன ஓட்டுனரிடம், எனக்கு எந்தவித குடிபழக்கமும் இல்லை. போதை பொருளை உபயோகிக்க மாட்டேன். ஏதாவது விபத்து நடந்தால் நானே அதற்கு முழு பொறுப்பு என்று எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கலெக்டர் எம்.மதிவாணன் பேசினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேசும்போது, வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் செல்போன் பேசினால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். ஒரே மோட்டார் சைக்கிளில் தங்களது மூன்று குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.