குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
குடிபோதையில் ரயில்வே லெவல் கிராசிங் கதவை இயக்கத் தவறிய கேட் கீப்பரை தாற்காலிக பணிநீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ரயில்வே லெவல் கிராசிங் கதவு திறக்கப்பட்ட நிலையில் ரயில்கள் கடந்ததைக் கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சிலர் கேட் கீப்பர் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, பணியில் இருந்த கேட் கீப்பர் தங்கவேல் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக ரயில்வே போலீஸாருக்கும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே நிர்வாகிகள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வரும் வரை ரயில்கள் கடக்கும் போது பொதுமக்கள் மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே நிர்வாகிகள் மாற்று ஊழியரை பணியில் அமர்த்தினர். இந்நிலையில் குடிபோதையில் பணியாற்றியது, மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக பணியாற்றியது ஆகிய காரணங்களுக்காக கேட் கீப்பர் தங்கவேலுவை தாற்காலிக பணிநீக்கம் செய்து முதன்மை பொறியாளர் மனோகரன் உத்தரவிட்டார். மேலும், தங்கவேலுவிடம் விளக்கம் கேட்டு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.