ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
புதுவை கரியமாணிக்கம் புதிய காலனியை சேர்ந்தவர் பன்னீர், தனியார் பஸ் டிரைவர். இவரது மகன் கவுசிகன் (வயது 1). கவுசிகனுக்கு சில நாட்களுக்கு முன்பு தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவனுக்கு நெறி கட்டியதுடன் காய்ச்சலும் ஏற்பட்டது. எனவே பெற்றோர் இன்று (02.08.2012) காலையில் கவுசிகனை புதுவை மடுகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
டாக்டர் ஊசி போட்ட சில நிமிடங்களில் கவுசிகன் மயங்கினான். அவனது தலை தொங்கியது. இதனை கண்டு பதறிய அவனுடைய பெற்றோர் கவுசிகனை தூக்கிக் கொண்டு பதட்டத்துடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த பன்னீரின் உறவினர்கள் மற்றும் கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இறந்தது பற்றி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது கவுசிகன் இறந்ததற்கு காரணம் உடல்நலமின்மைதான். மற்றபடி தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் கூறினர். இதனால் சமாதானம் அடைந்த கவுசிகனின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இறந்த கவுசிகன் உடலுடன் ஊருக்கு திரும்பினர்.