மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
சென்னையில் வாந்தி, பேதியால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாய்களுக்கும் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில், வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு, 15க்கும் மேற்பட்ட நாய்கள், சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இவற்றுக்கு தொடர் பேதி ஏற்பட்டு உள்ளதோடு, மலத்துடன், ரத்தம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காலராவின் அறிகுறி என, கூறப்படுகிறது. இதுகுறித்து, வேப்பேரி கால்நடை மருத்துவமனை, சிகிச்சை பிரிவு இயக்குனர் பிரதாபன், ‘’மனிதர்களுக்கு வாந்தி, பேதியைத் தொடர்ந்து வரும் பாதிப்பு காலரா. நாய்களுக்கு அது போன்ற பாதிப்பு,"பார்வோ வைரஸ்' பாதிப்பு எனப்படுகிறது.
இந்த நோய் பாதித்தால், நாய்களுக்கு பேதியாகும். மலத்துடன் ரத்தம் கலந்து வரும். பெரிய நாய்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், குட்டி நாய்களை தாக்கினால், சிக்கல் தான்.
இது போன்ற பாதிப்பால், நாய்கள் மருத்துவமனை வந்துள்ளன. உரிய சிகிச்சை அளித்துள்ளோம். இது, மனிதர்களை பாதிக்காது.
நாயின் மலத்தில், வைரஸ் கிருமிகள் இருக்கும். இவை ஈ மூலம் மற்ற நாய்களுக்கும் பரவும். இதனால், இதய பாதித்து, இறப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாய்குட்டி பிறந்த, 49 நாட்களுக்குள், "பார்வோ வைரஸ்' தடுப்பூசி போட வேண்டும். அவ்வாறு போடாவிட்டால், இந்த நோய் தாக்கும். சென்னையில், நாய் வளர்ப்போர், 90 சதவீதம் நாய்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடாதோர், தங்கள் நாய்களுக்கு உடனே போட்டுக் கொள்வது அவசியம்’’என்று கூறியுள்ளார்.