நடுக்கடலில் தவித்த 7 மீனவர்கள் மீட்பு
புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த மீனவர் ராதாகிருஷ்ணன் (வயது 38) மற்றும் அதே குப்பத்தை சேர்ந்த மனோகர் (40), கோபால் (32), அமிர்தலிங்கம் (44), சுப்பிரமணியன் (52), முருகன்(39) மற்றும் விநாயகமூர்த்தி (36) ஆகிய 7 பேரும் வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு படகில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களது படகில் உள்ள என்ஜின் திடீரென்று பழுதடைந்தது. இதனால் படகு நடுக்கடலில் நின்று விட்டது. இவர்களுடன் மீன்பிடிக்க சென்றவர்கள் சனிக்கிழமை காலை கரை திரும்பிய நிலையில், 7 மீனவர்கள் மட்டும் கரை திரும்பாதது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலோர காவல் படையிடம் புகார் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் கடலோர படையினர் படகில் நடுக்கடலுக்கு சென்று தேடினர். அப்போது 20 கடல் மைல் தொலைவில் பழுதான படகில் மீனவர்கள் நிற்பதை கண்டுபிடித்து, அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். பழுதான படகும் கரைக்கு கொண்டு வரப்பட்டது.