நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை: திருமாவளவன்
வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கே.வி.குப்பத்தில் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் தங்க பொற்காசுகளை வழங்கினர்.
அப்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கில் எனது 50-வது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் தங்கம் கொடுங்கள் என கேட்டேன். நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை. அரசு ஊழியராக நான் 11 ஆண்டுகள் பணியாற்றிய காலத்திலும் வறுமையில் இருந்த எனது குடும்பத்திற்காக செலவு செய்யவில்லை. பெறுகிற சம்பளத்தை இந்த மக்களுக்காகவே பயன்படுத்தினேன்.
கட்சிக்கு தங்கம் கொடுங்கள் என கேட்கும்போது நான் முதல் நபராக கட்சிக்கு 10 பவுன் தங்கம் கொடுத்துவிட்டுதான் நீங்கள் கொடுங்கள் என கேட்கிறேன். இதுவரை கட்சிக்காக தொண்டர்கள் 3 கிலோ தங்கம் கொடுத்துள்ளார்கள். இப்போது வேலூர் மாவட்டத்தில் இந்த மேடையில் நீங்கள் கொடுத்த மொத்த தங்கம் 256 கிராம் ஆகும். ரொக்கம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம். இந்த ரொக்கம் தங்கமாக மாற்றப்பட்டு வரவு வைக்கப்படும்.
ஒரு கட்சிக்கு கொள்கை வலிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பொருளாதார வலிமையும் முக்கியம். இந்த கட்சியில் பணக்காரர்களோ, முதலாளிகளோ, தொழிலதிபர்களோ, நிலச்சுவான்தாரர்களோ இல்லை. எல்லோரும் அன்றாடம் பாடுபடும் மக்கள். எனக்கு தெரிந்த முதலாளிகள் நீங்கள் மட்டும்தான்.
இந்த கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால், உண்மையான கொள்கை வலிமையோடு இயங்க வேண்டும் என்றால் அதற்கு பொருளாதார வலிமை வேண்டும். இவ்வாறு பேசினார்.