காண்டாமிருகம்- சிறுத்தை குட்டி பரிதாப பலி :
பார்வையாளர்கள் சோகம்
மைசூர் மிருக காட்சி சாலையில் 20 வயதான காண்டாமிருகமும், சிறுத்தை குட்டி ஒன்றும் பரிதாபமாக இறந்துபோனது. இதனால் பார்வையாளர்கள் சோகத்தில் கண்ணீர்விட்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உலக பிரசித்தி பெற்ற மிருக காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரிய வகை சிறுத்தை, குரங்குகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த மிருக காட்சி சாலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கர்நாடகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த மிருக காட்சி சாலையில் 20 வயதான ராணி என்ற பெண் கருப்பு காண்டாமிருகம் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென்று ராணி காண்டாமிருகம் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மிருக காட்சி சாலை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் 8 மணி நேரம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை திடீரென்று காண்டாமிருகம் பரிதாபமாக உயிரிழந்தது.
இதேப் போல் மைசூர் மிருக காட்சி சாலையில் பிருந்தா என்ற பெண் சிறுத்தையும் பராமரிக் கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த சிறுத்தை அழகாக 5 குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகளில் 3 குட்டிகள் ஏற்கனவே இறந்துபோனது. இந்த நிலையில் மற்றொரு சிறுத்தை குட்டியும் நேற்று இறந்துபோனது.
மைசூர் மிருக காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த காண்டாமிருகமும், சிறுத்தைக் குட்டியும் பலியான சம்பவம் பார்வையாளர்களை கண்ணீர் சோகத்தில் ஆழ்த்தியது. மைசூர் மிருக காட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக தான் தொடர்ந்து வன விலங்குகள் இறந்துவருவதாக பொதுமக்களும், பார்வையாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.