காடை வளர்க்க தடை : மத்திய அரசு உத்தரவை
அமல்படுத்தாத தமிழக அரசு
ஜப்பான் காடையை, பண்ணை வைத்து வளர்க்கவோ, அவற்றை கொல்லவோ, மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்து, பல மாதங்களாகியும், தமிழக வனத்துறை அமல்படுத்தாமல் உள்ளது.
இந்தியாவில், ஜப்பான் காடையை பண்ணை அமைக்க, 1997ல் கால்நடை பராமரிப்பு துறையிடமோ அல்லது வனத்துறையிடமோ அனுமதி பெறலாம் என, இந்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, இந்தியாவில் தமிழகம், கேரளா உட்பட பெரும்பாலான மாநிலங்களில், பெரும்பாலானோர், காடை பண்ணை அமைத்தனர்.
இதன் மூலம், காடையை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து, அதிக லாபம் ஈட்டி வந்தனர். வன உயரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, கடந்த, 2011, செப்டம்பரில் அரிய வகை உயிரினங்கள் பட்டியலில், காடையைச் சேர்த்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
அதில், காடைகளை வீட்டில் வளர்க்கவோ, அவற்றை கொல்லவோ, பண்ணை வைக்கவோ தடை விதித்தது. காடையை வளர்த்தாலோ, கொன்றாலோ, இச்சட்டப்படி, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்த உத்தரவு, தமிழக வனக் கோட்டங்களுக்கு அனுப்பப்படவில்லை.
இதனால், இந்த உத்தரவு பிறப்பித்து, பல மாதங்களாகியும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர், ‘’அரிய வகை உயிரின பட்டியலில், காடை சேர்க்கப்பட்டுள்ளதால், பண்ணைகளில் வளர்க்கவோ, ஓட்டல்களில் காடை உணவு வகைகளை பரிமாற, மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தடை விதித்தது.
ஆனால், தமிழகம் உட்பட சில மாநிலங்களில், மத்திய அரசு அனுப்பிய கடிதம் குறித்து, உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால், இன்று வரை அவை அமல்படுத்தபடாமல் உள்ளது. இதனால், பெரும்பாலான மாவட்ட வன பாதுகாவலர்களுக்கு இது குறித்த தகவல் தெரியவில்லை’’என்று கூறுகிறார்.