மம்தாவிடம் ஆதரவு கேட்டார் மன்மோகன் சிங்
துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் புதுடெல் லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், போன் மூலம் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டணி கட்சிகளுக்கு 18-ந் தேதி அளிக்க இருக்கும் விருந்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் தனது கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய மந்திரியுமான முகுல்ராயை கலந்து கொள்ளும்படி கூறினார்.
அதன்படி இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முகுல் ராய், தங்கள் கட்சி சார்பில் கிருஷ்ணா போஸ் (நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உறவினர்), கோபால் கிருஷ்ண காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) ஆகிய 2 பேர்களின் பெயர்களை பரிந்துரைத்ததாக தெரிகிறது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மேல்-சபை உறுப்பினர் குணால் கோஷ், ``பிரதமர் மன்மோகன் சிங், முதல் மந்திரி மம்தா பானர்ஜியை போன் மூலம் தொடர்பு கொண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீது அன்சாரிக்கு ஆதரவு கேட்டார். அதற்கு மம்தா பானர்ஜி, கட்சியின் முடிவு 2 அல்லது 3 நாட்களில் தெரியவரும் என்று கூறியுள்ளார்'' என்றார்.