பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி
செயல்படாத பிரதமர் என்று மன்மோகன் சிங் குறித்து டைம் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை உண்மைக்கு புறம்பானது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து காரைக்காலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 8 ஆண்டுகளில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த தகவலின் அடிப்படையில் டைம் இதழ் அந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. அக்கட்டுரை உண்மைக்கு புறம்பானது.
2 சதவீத வளர்ச்சி இருந்த இந்தியாவில் 8 சதவீத அளவுக்கு வளரச்சியைக் கொண்டுவந்தவர் மன்மோகன் சிங். கட்டாயக் கல்வி, கட்டாய உணவு, வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் சட்டம், ஊழல் எதிர்ப்பில் தீவிரம், சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என அவர் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். இந்தியாவில் கூட்டாட்சி முறை நடந்து வருகிறது. சில விஷயங்களில்கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்பட முடியும் என்பதால் அதில் சில குளறுபடிகள் இருக்கலாம். ஆனால் அதற்காக செயல்படாத பிரதமர் என்று கூறிவிட முடியாது எனத் தெரிவித்தார்.