புதுவையில் முழு அடைப்பு
புதுவையில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர் கல்விகளுக்கு பிராந்திய இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதற்கு புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவதற்காக இடஒதுக்கீடு போராட்ட எதிர்ப்பு குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். 3 நாள் முழு அடைப்பை ஒரு நாளாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்றுக் கொண்டு முழு அடைப்பை ஒருநாள் மட்டும் நடத்துவது என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். போராட்டத்துக்கு வியாபாரிகள் சங்கத்தினர், பஸ் அதிபர்கள், ஆட்டோ சங்கத்தினர், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கேட்டுள்ளோம். அவர்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.
எனவே 10.09.2012 அன்று பஸ், ஆட்டோ போன்றவை ஓடாது. கடைகளும், மூடப்படும். தொழிற்சாலைகளும் இயங்காது. இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கல்வி நிறுவனங்கள் போராட்டத்தை மீறி திறந்தால் மாணவர்கள் அவர்களாகவே வகுப்புகளை புறக்கணிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைதியான முறையில் இந்த முழு அடைப்பு நடைபெறும். புதுவை மாநில மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி அனைவரும் இதற்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.