காதலி கழுத்தை அறுத்து படுகொலை! காதலன் தற்கொலை முயற்சி!
சென்னை முகப்பேரில் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, காதலன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் ரோட்டில் வேவ்ஸ் துணிக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியர்களாக முருகானந்தம் (வயது 24), பவானி (20) ஆகிய இருவர் வேலை பார்த்தனர். இருவரும் பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள். முருகானந்தம் பாடிக்குப்பம் காமராஜர்நகரைச் சேர்ந்தவர். பவானி காந்தி நகரைச் சேர்ந்தவர்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கடையில் இருவரும் ஒன்றாக வேலை பார்த்ததால், நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் கடையில் பவானியும், முருகானந்தமும் தனியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்பாராத வகையில் திடீரென்று முருகானந்தம், பவானியை தாக்க தொடங்கினார். முதலில் அவரை கீழே தள்ளினார். பின்னர் அவர் மீது ஏறி உட்கார்ந்து, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஆக்ரோஷமாக சத்தம் போட்டார். பின்னர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து பவானியின் கழுத்தை முருகானந்தம் அறுத்ததாக தெரிகிறது. பவானி மரண ஓலத்தில், என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினார். பின்னர் முருகானந்தம் தன்னைத்தானே அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.
பவானியின் கழுத்து முழுவதும் அறுந்து தொங்கியது. முருகானந்தம் கழுத்து சரியாக அறுபட வில்லை. அவரும் காயம் அடைந்தார். காதல் ஜோடியினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கடையின் சக ஊழியர் வெங்கடேசன் நினைத்துக் கொண்டு சற்று தூரத்தில் ஒதுங்கி நின்றார். ஆனால் சத்தம் கேட்டு அவர் ஓடி வருவதற்குள் இருவரும் கழுத்து அறுபட்டு விட்டனர்.
வெங்கடேசன் இருவரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பவானி பரிதாபமாக இறந்து போனார். முருகானந்தம் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன், இணை கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா, உதவி கமிஷனர் கலியதீர்த்தான், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, முருகானந்தத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். முருகானந்தம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:
எனது தந்தை பெயர் பொன்னுசாமி. பவானியின் தந்தை குமார். தாயார் லலிதா. பவானிக்கு அக்கா ஒருவரும், தம்பியும் உள்ளனர். எனக்கு ஒரு காலில் லேசான ஊனம் உள்ளது. எனது ஊனத்தை பற்றி கவலைப்படாமல் பவானி என்னை காதலித்தாள். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் பவானி என்னை விட்டு விலகிச்செல்ல ஆரம்பித்தாள். கடைக்கு வேலைக்கு வந்தால், என்னை பார்க்க நேரிடும் என்பதால், வேலையை விட்டும் நின்று விட்டாள். நான் அவளை பார்க்க முடியாமல் கடந்த 15 நாட்களாக துடித்து போய் விட்டேன். இந்த நிலையில் பவானி என்னை தூக்கி எறிந்து விட்டு, வேறொரு வாலிபருடன் பழகுவதாக அறிந்தேன்.
இதற்கிடையில் கடைக்கு ஆள்தேவை என்று பவானியை வேலைக்கு வா என்று கடை முதலாளி வற்புறுத்தினார். இதை ஏற்று பவானி மீண்டும் வேலைக்கு வந்தாள். மாலையில் கடையில் கூட்டம் குறைவாக இருந்தபோது, அவளிடம் போய் நியாயம் கேட்டேன். என்னை ஏன் காதலித்தாய். இப்போது ஏன் மோசம் செய்தாய் என்று கேட்டேன். ஆனால் அவள் என்னை நொண்டி என்று ஏளனமாக பேசியதோடு, என்னை மறந்து விடு. நீ எனக்கு ஏற்ற ஆள் இல்லை என்று கேவலமாக பேசினாள்.
எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று, கத்தியால் கழுத்தை அறுத்து விட்டேன். அவள்போன பிறகு எனக்கும் வாழ்க்கை தேவை இல்லை என்று கருதி எனது கழுத்தையும் அறுத்துக்கொண்டேன். ஆனால் நான் பிழைத்தது எனக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு முருகானந்தம் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த காதல் படுகொலை சம்பவம் முகப்பேர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.