என்ஜினீயரிங் கவுன்சிலிங்: அண்ணா பல்கலையில் சிறப்பு ஏற்பாடுகள் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து விளையாட்டு பிரிவு, தொழிற் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தப்படுகிறது. பொது கவுன்சிலிங் 13-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. விண்ணப்பித்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரம் பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். கலந்தாய்வுக்கு முன்னதான காத்திருப்பு அரங்கம், மாணவர்கள் பெற்றோர்களுக்கு விளக்க மளிக்கும் அரங்குகள் கல்விக்கடன் வழங்கும் வங்கிகளுக்கான அரங்குகள் என மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்கள் 2 மணிநேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காத்திருப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கல்லூரியில் இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 6 பெரிய திரைகள் இந்த அரங்கத்தில் அமைக்கப்படுகின்றன. இதில் காலியிட நிலவரங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் 20 பேரின் சான்றிதழ்கள் வரை சரிபார்க்கும் வசதிகள் உள்ளன. கலந்தாய்வு அரங்கத்தில் ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் கல்லூரிகளை தேர்வு செய்த பின்பு மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், தமிழ் நாட்டை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் ரூ. 1000மும் முன் தொகையாக செலுத்த வேண்டும். காசோலையாகவோ, பணமாகவோ செலுத்த வங்கி அரங்குகளும் கலந்தாய்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் சேர விருப்பும் மாணவர்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மருத்துவர்களுடன் கூடிய அரங்குகளும் இடம் பெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் அனைவருக்கும் உடல் தகுதி சான்றிதழ் கட்டாயமாகும். பிற மாணவர்கள் விரும்பினால் இங்கு உடல் தகுதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.