முன் எச்சரிக்கை கைதுக்கு தடை விதிக்க முடியாது :
தி.மு.க. மனு தள்ளுபடி
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுப.தங்கவேலன் மதுரை ஐகோர்ட்டு தாக்கல் செய்துள்ள மனுவில்,
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளை போடுவது, சிறையில் அடைப்பது, குண்டர் சட்டத்தில் கைது செய்வது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து 4-ந் தேதி(நாளை) சிறை நிரப்பும் மறியல் அறப்போராட்டம் நடத்த தி.மு.க. அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக முன் எச்சரிக்கை என்ற பெயரில் தி.மு.க.வினரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபோன்ற நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். எனவே தி.மு.க.வினரை முன் எச்சரிக்கையாக கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஹெரால்டுசிங், எஸ்.கே.பட்டுராஜா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடாத நபரை முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வது சரியல்ல என்றும், அதுபோன்ற செயலில் போலீசார் ஈடுபட்டால் அது தனிப்பட்ட நபரின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும் என்றும் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சிறப்பு அரசு வக்கீல் கோவிந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அவர்கள் கூறும் போது, "தி.மு.க.வினரை பொறுத்தமட்டில் அரசு அலுவலகங்கள் முன்பு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
சிறை செல்லும் போராட்டம் என்றாலே அவர்கள் ஏதோ ஒரு குற்றச்செயலில் ஈடுபடப்போகிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவித்து விடுகிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிரச்சினையில் ஈடுபட முயற்சிப்பவர்களை முன் எச்சரிக்கையாக கைது செய்யலாம் என்று குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 151 கூறுகிறது. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் போலீசாரை தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தால் முன்ஜாமீன் தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.