ஆதரவு திரட்ட சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி
இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 19ந் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டணி மற்றும் ஆதரவு கட்சி தலைவர்களை சந்தித்து பிரணாப் முகர்ஜியும், பி.ஏ.சங்மாவும் வாக்கு சேகரித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை (30.06.2012) சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வரும் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அங்கிருந்து புறப்படும் அவர், தி.மு.க. தலைவர் கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பின்னர், அடையாறில் உள்ள பார்க் ஷெராட்டன் ஓட்டலில், தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் அவர் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பிரணாப் முகர்ஜி வருகிறார். அங்கு, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அவர் சந்திக்கிறார். அதன்பின்னர், கட்சி தொண்டர்களையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.