மதுவிலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
மதுவிலக்கை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னையில் நாளை துவக்கி வைக்கின்றனர்.
கடந்த 2ம்தேதி, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மதுவின் பிடியில் சிக்கி, சீரழியும் இளைஞர்களை திருத்த வேண்டும். மது அடிமையிலிருந்து அவர்களை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் செயல்வடிவம் பெறும் வகையில், நாளை (27ம்தேதி) சென்னையில் இந்திய கம்யூ., கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைக்கின்றனர்.