விழுப்புரம் திருச்சிக்கு கூடுதல் ரயில்
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தார். அவர், நேற்று மாலை 6 மணிக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரத்திலிருந்து தினந்தோறும் காலை நேரத்தில் திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலை, மீண்டும் இயக்க, நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையங்களின் வளர்ச்சிப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மஞ்சுளா ரங்கராஜன் கூறினார்.