யானைக் கூட்டம்: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆந்திர வனப்பகுதியிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், ஆத்தூர், தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி வந்த ஆறு யானைகள் கொண்ட இந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் பெரிய போராட்டத்துக்கு பிறகு தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஒக்கேனக்கல் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தனர்.
இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு இருந்துவிட்டு பிறகு மேச்சேரி, ஓமலூர் வழியாக ஏற்காடு மலையின் மேற்கு பகுதியில் உள்ள செட்டிசாவடி நெல்லியாகரடு பகுதிக்கு கடந்த 24.06.2012 அன்று இரவு வந்துவிட்டது.
அங்கிருந்த ஆனந்தாயி (வயது 61) என்பவரின் குடிசை வீட்டை இடித்து சேதப்படுத்திய யானைகள், அருகே உள்ள தோப்புக்குள் புகுந்து வாழை, பப்பாளி மரங்களை தின்று சேதப்படுத்தின. பின்னர், சேலத்திற்கு அருகில் உள்ள குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா வழியாக, வந்த யானைக்கூட்டம், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மலைமேல் ஏறி நடக்கத்து வங்கியது.
அதைதொடர்ந்து, ஏற்காடு மலையிலிருந்து கீழே வரும் வாகனங்களையும், சேலத்திலிருந்து மேலே செல்லும் வாகனங்களையும் நிறுத்திய அதிகாரிகள் யானைகள் சாலை வழியாக ஏற்காடு செல்லும் வரை யானைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
இரவு ஒரு மணிக்கு ஏற்காடு அண்ணா பூங்கா அருகே நடந்து சென்ற யானைகள் அங்கிருந்த ஒரு பழக்கடையின் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த, பலாப்பழங்களை உடைத்து சாப்பிட்டன.
பிறகு அங்கிருந்து சாலை வழியாக செங்காடு மற்றும் தலைச்சோலை கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள ஒரு தனியார் காபி தோட்டத்தில் ஆறு யானைகளும் நின்று கொண்டது. இதனால், தலைச்சோலை கிராமத்தை சேர்ந்த மக்கள் பீதி அடைந்தனர். கிராம மக்கள் வேட்டு வைத்து, யானைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.,.
ஏற்காட்டில் இருந்து எட்டு கி.மீ., தொலைவில் உள்ள தலைச்சோலை வாட்டர் போர்டு எஸ்டேட்டில், 25.06.2012 அன்று பகலில் முகாமிட்டிருந்த யானைகள் இன்று இரவு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று இப்போது மாரமங்கலம் என்ற கிராமத்தில் முகாமிட்டுள்ளன.
மாவட்ட வன அலுவலர் சுதீர்தராஜ் கோயில்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், யானைகளை விரட்டுவதற்காக பொதுமக்கள் யாரும் பட்டாசு கொளுத்துவது, வெடி வைப்பது, தப்பட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், இந்த ஆறு யானைகளுக்கும் மயக்க ஊசி போட்டு கட்டுப்படுத்துவது இயலாத காரியம். பகல் நேரங்களில் யானைகள் வெளியே வராது, இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் நடமாடும், இந்த யானகள் நடமாட்டம் குறித்து கோவை வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கண்காணிக்கின்றனர். ஏற்காடு மலையில் இருந்து, மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள அடர் வனத்துக்கு, யானைகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் யானைகளை அதன் போக்கிலேயே கொண்டு சென்று அரூர் வனத்தில் விட முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.