ஜீப்பை தாறுமாறாக ஓட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு!
சாலைவிதிகளை மீறுவோர்களையும், மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களையும் கண்டு பிடித்து அவர்களை கைது செய்யும்படி கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி கோவையில் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக அவர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 24.06.2012 இரவு கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் போலீஸ் ஜீப் ஒன்று சென்றது. இந்த ஜீப் பாலத்தின் நடுப்பகுதியில் சென்றதும் அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த 2 வாகனங்களின் மீது மோதியது. பின்னர் பாலத்தில் சுவற்றில் மோதி நின்றது.
பாலத்தில் வந்தவர்கள் இதை பார்த்து அலறியவாறு வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கும் இங்கும் ஓடினார்கள். ஜீப்பை ஓட்டி வந்தவர் ஜீப்பை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை பொதுமக்கள் சிறிது தூரம் விரட்டி சென்றும் அவரைபிடிக்க முடியவில்லை.
இது பற்றி விசாரிக்கும்போது, போலீஸ் ஜீப்பை தாறுமாறாக ஓட்டிச்சென்றவர் கோவை உக்கடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என தெரியவந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கமிஷனர், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் குடிபோதையில் ஜீப்பை ஓட்டினாரா? என கண்டறிய அவரை பிடிக்க உத்தரவிட்டார். ஆனால் அவரோ செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை நேற்று மாலை வரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதைதொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போலீஸ் ஜீப்பை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை சஸ்பெண்டு' செய்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. அதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே இப்படி தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச்சென்றதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டினாரா? என்பதை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக தப்பி ஓடி உள்ளார். அவர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் விஸ்வநாதன் கூறினார்.