புதுக்கோட்டை: விலையில்லா பொருள் கேட்டு ரேசன் கார்டை திருப்பி கொடுக்க வந்த மக்கள்
புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் முடிந்து மக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடந்தது. இதில் நலத்திட்டங்கள் கேட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள எம். குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 150 பேர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்களது ரேசன் கார்டுகளுடன் வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. எங்கள் ஊராட்சிக்கு விலையில்லா பொருள் கிடைக்கும் என்று தேர்தல் சமயத்தில் சொன்னார்கள். ஆனால் இடைத் தேர்தலை காரணம் சொல்லி கொடுக்கவில்லை. இப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம் கிடைக்கவில்லை. விலையில்லா ஆடு, மாடுகள் கொடுக்கவில்லை அதனால் எங்கள் ரேசன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி கொடுக்க வந்துள்ளோம் என்றனர். இதில் அ.தி.மு.க கரை போடப்பட்ட பல பெண்களும் வந்திருந்தனர். விரைவில் விலையில்லா ஆடு,மாடுகள் கொடுக்கப்படும் என்று ஆட்சியர் சொன்னதால் ரேசன் கார்டுகளை கொடுக்காமல் திரும்பி சென்றனர். விரைவில் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் ரேசன் கார்டு திருப்பி கொடுக்கும் போராட்டம் செய்வோம் என்று கூறி சென்றனர்.