அற்புதம் நிகழும்! ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா!
ஜனாதிபதி தேர்தலில் அற்புதம் நிகழும் என்றும் தனக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பி.ஏ.சங்மா கூறி உள்ளார்.
டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவரிடம், பிரணாப் முகர்ஜிக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கருதப்படும் நிலையில், ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் மட்டும்தானே நீங்கள் வெற்றி பெற முடியும்?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு பி.ஏ.சங்மா பதில் அளிக்கையில்; ஆமாம்; நீங்கள் சொல்வது சரிதான். ஜனாதிபதி தேர்தலில் அற்புதம் நிகழும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அற்புதம் நிகழ்ந்து நான் வெற்றி பெறுவேன். கடவுள் என்னுடன் இருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல் வேகமாக மாறக்கூடியது. தினசரி மாற்றங்கள் ஏற்படும்'' என்றார்.
பாரதீய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்காகவோ அல்லது ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் 25 சதவீத பழங்குடியின மக்களை கவருவதற்காகவோ ஜனாதிபதி தேர்தலில் உங்களை பயன்படுத்திக் கொள்வதாக கருதுகிறீர்களா? என்று கேட்டதற்கு; அப்படி எதுவும் இல்லை'' என்று பதில் அளித்தார்.
நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தவறான முடிவு என்றும், அது உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும் என்றும் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பி.ஏ.சங்மா பதில் அளிக்கையில்; எனக்கு 65 வயதுதான் ஆகிறது. எனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏதாவது அரசியல் கட்சியில் சேர வேண்டிய அவசியமும் இல்லை'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி உங்களை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு; அவரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு நான் கேட்டுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறதே'' என்று பி.ஏ.சங்மா பதில் அளித்தார்.