ஜனாதிபதி தேர்தல்! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வீரப்பமொய்லி வேண்டுகோள்!
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்கும் முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் தொகுதி எம்.பி.யும், மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை மந்திரியுமான வீரப்பமொய்லி, (24.06.2012) சிக்பள்ளாபூரில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் என்பது நாடு சம்பந்தப்பட்டது. அது கட்சி விவகாரம் அல்ல. எனவே ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசியலை கலக்கக்கூடாது. சங்மாவை ஆதரிக்கும் அந்த கூட்டணி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஜனநாயக அமைப்பில் எதிர்ப்பை தெரிவித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது நேரம் அல்ல. தமது வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சங்மாவை ஆதரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது.
நாட்டை பற்றி தான் தேசிய ஜனநாயக கூட்டணி சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்து தவறு செய்து விடக்கூடாது. கட்சி அல்லாது தேச விவகாரம் என்பதால் இதுகுறித்து பா.ஜனதா மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு பெரும்பான்மையோரின் ஆதரவு உள்ளது. அவரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வது நமது தேசிய கடமை. அவர் 70 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று நிச்சயமாக வெற்றி பெறுவார்.
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு பதிலாக நிதி மந்திரி பதவிக்கு பொருத்தமானவரை தேர்வு செய்வது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்வார். இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.