பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கமாட்டோம்: மார்க்சிஸ்ட்
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இடதுசாரி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய பிரகாஷ் காரத், 'நாங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியில் அங்கம் பெறவில்லை. காங்கிரசின் கட்டுப்பாட்டிலும் நாங்கள் இல்லை. எனவே அவர்கள் அறிவித்த வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க வேண்டியதில்லை’ என்றார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் நிலை குறித்து முடிவெடுப்பதற்காக அக்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ராமச்சந்திரன் பிள்ளை, ஏ.பி.பரதன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்திற்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமும் நடக்க உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதுதான் இக்கூட்டத்தில் இடம்பெறும் முக்கிய விவாதமாக இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே பிரகாஷ் காரத், பரதன் ஆகியோரிடம் பிரணாப்புக்கு ஆதரவு கோரியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 10.98 லட்சம் வாக்குகளில், சுமார் 51,000 வாக்குகள் இடதுசாரி கட்சிகளின் கையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.