ஒடிசா சிறுமிகளை கடத்தியவர் கைது
சென்னையில் கடந்த 16-ந் தேதி வழி தெரியாமல் தவித்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 சிறுமிகளை எழும்பூர் ரெயில்வே போலீசார் மீட்டு சிறுமிகள் இல்லத்தில் சேர்த்தனர். அவர்களுடன் சென்னைக்கு வந்த நபரை கண்டுபிடிக்க ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர். அதில் அவன் சிறுமிகளுடன் சென்னை வரை வந்து காணாமல் போன ஒடிசா மாநிலம் சுந்தரகாந்த் மாவட்டத்தை சேர்ந்த சங்கர்குமார் மாலி(வயது 29) என்பது தெரிய வந்தது. இவன் அந்த சிறுமிகளை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், அவர்கள் தூத்துக்குடி என நினைத்து எழும்பூரில் இறங்கிவிட்டதாகவும் தெரிவித்தான்.
இதை அடுத்து சங்கர்குமார்மாலி சிறுமிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்குஏற்பட்டது. இதனால் அவன் மீது வழக்கு பதிவு செய்த எழும்பூர் ரெயில்வே போலீசார் அவனை கைது செய்து எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.