சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்! கலைஞர் கண்டனம்!

திமுக தலைவர் கலைஞர் 16.06.2012 அன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: சின்னகுத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?
கலைஞர்: சின்னக்குத்தூசியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டுரையாளர்களுக்கான விருது வழங்கல் விழா 15.06.2012 அன்று அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தேவநேயப் பாவாணர் நூலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற திட்டமிட்டு, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென்று அந்த நிர்வாகம், அனுமதி இல்லை என்று மறுக்கவே, அறக்கடடளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அவர்கள், தமது தீர்ப்பில், ''65 ஆண்டுகளாக ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு, அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி, பத்திரிகையாளர்களின் ''என்சைக்ளோ பீடியா''வாகத் திகழ்ந்தவர் சின்னகுத்தூசி.
காமராஜர் முதல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பழகி சமூக அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதிய அவரது பெயரால் நடக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக் கூடாது'' என்று கூறி நிகழ்ச்சியை அனுமதிக்க ஆணையிட்டு, மாலை 5.15 மணி அளவில் தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தகவல் வந்தவுடன் நூலக அதிகாரிகள் அரங்கத்திற்கு ஏற்கனவே வந்திருந்த பார்வையாளர்களை வெளியேற்றி விட்டு, அரங்கத்தைப் பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார்கள். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள் நூலக வளாகத்திற்கு வெளியே கார் நிறுத்துகின்ற பகுதியில் பாதி இருட்டில் நிகழ்ச்சியை தோழர் நல்லக்கண்ணுவை வைத்து விருது வழங்கி நடத்தியிருக்கிறார்கள்.
அதில் நமது திருச்சி செல்வேந்திரன், பத்திரிகையாளர்கள் க.திருநாவுக்கரசு, நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியே ''இந்து'', ''தீக்கதிர்'' போன்ற நாளேடுகளில்தான் வந்துள்ளது.