ஆற்றில் வீசப்பட்ட 25 சாமி சிலைகள் மீட்பு
பழனி கொழுமம் ரோட்டில் உள்ள குதிரையாறு ஆற்று பாலத்தில் சாமி சிலைகள், படங்கள், பரிவார தெய்வங்கள் கிடந்தன. இது குறித்து வருவாய் அதிகாரி சலீம் ரோஜா கொமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் ஆற்றில் வீசப்பட்டிருந்த 4 அடி உயர பெரிய சிவலிங்கம் உள்பட 21 லிங்கங்கள், 4 அடி உயர அம்மன் சிலை உள்பட 25 சிலைகள் மற்றும் சித்தர்கள் உள்பட 26 வரைபடங்கள் நந்தி சிம்ம வாகனங்கள், பீடங்கள், கவரிங் ஆபரணங்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கற்களால் வடிக்கப்பட்டிருந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஐவர் மலையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்திருந்த சாமி சிலைகள் என்பதும், பராமரிக்க முடியாமல் ஆற்றில் வீசப்பட்டதும் தெரியவந்து உள்ளது. சாமி சிலைகள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.