Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (19:40 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (19:47 IST)


ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு
 தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான்: மு.க.ஸ்டாலின் பேச்சு
 


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் 20-1-2017-ல் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஆற்றிய உரை விவரம்:
 
’’செயல் வீரர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கும் பெரியோர்களே, கழகத்தின் துணை அமைப்புகளை கட்டிக் காத்து வருகிற கழக காவலர்களே, தோழமைக் கட்சியைச் சார்ந்திருக்கும் தோழர்களே, தொலைக்காட்சி பத்திரிகை உலக நண்பர்களே, என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
 
நெல்லை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வைரவிழா, தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட முரசொலியின் பவளவிழா, மாற்றுக் கட்சிகளில் இருந்து நம்முடைய கழகத்தின் இணையக்கூடிய விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு, உணர்ச்சியோடு, உத்வேகத்தோடு நாமெல்லாம் பெருமைப்படும் அளவில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதிலே வெற்றிக் கண்டிருக்கும் நெல்லை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய அருமை சகோதரர் சிவ. பத்மநாபன் அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் இதயப்பூர்வமான நன்றியை வாழ்த்துகளை, ஏன் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விழாவின் நோக்கத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென சொன்னால், இன்று நெல்லை மாவட்டத்தில் காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக நம்முடைய முன்னாள் அமைச்சர் தங்கவேலு அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்ற மணவிழா, அதனைத் தொடர்ந்து சுரண்டையில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலய திறப்பு விழா நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்ககூடிய, ஒரு சில கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை நான் பெற்று இருக்கிறேன்.
 
இந்த நெல்லைச் சீமையிலே நான் காலையில் இருந்து பங்கேற்ற நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் ஒன்றை நான் உறுதியோடு சொல்ல முடியும். விரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட போகிறது. அந்த மாற்றம் நாங்கள் எதிர்பார்ப்பதை விட, இதோ இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதை போல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரப் போகிறது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதை நான் சொல்லுகிற காரணத்தால், ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்காக பதவிக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது என யாரும் கருத வேண்டிய அவசியமில்லை. அறிஞர் அண்ணா அவர்கள் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்த நேரத்திலே மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஆட்சிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுடைய பிரச்சினைகளுக்காக வாதாடும் போராடும் என அறைகூவல் விடுத்து தான் இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்து இருக்கிறார்கள்.  எனவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் ஆட்சியில் இருந்திருக்கிறோம். அதேபோல் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில்  5 முறை ஆட்சியில் இருந்து இருக்கிறோம். எனவே ஆட்சிப் பெரிது அல்ல, ஆனால் ஆட்சி என்கிற கருவியை மக்கள் ஒப்படைக்கிற நேரத்தில் அந்தக் கருவியை முறையாக பயன்படுத்து நாட்டு மக்களுக்கு தொண்டு ஆற்றுகிற உணர்வை பெற்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர, ஊரை அடித்து உலையில் போடும் அதிமுக வைப் போல என்றைக்கும் இருக்க கூடாது என்பதைதான், நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
அதே அண்ணா அவர்கள் தெளிவாக சொன்னார்கள், வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியவை தான். அப்படி வருகிற நேரத்தில் வெற்றியைக் கண்டு வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்க கூடாது, அதே நேரத்தில் தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. வெற்றி தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி  இந்த நாட்டுக்கு உழைக்கும்  ஒரு உன்னத இயக்கம் தான்  திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இங்கே நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.
 
அப்படிப்பட்ட  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நெல்லை மேற்கு மாவட்ட  திராவிட முன்னேற்றக் கழகம்  சார்பில் ஒரு பொதுக்கூட்டம் என்பதோடு அல்ல மாவட்ட அளவில் நடைபெறும் மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய மூத்த பிள்ளைகளில் ஒன்றாக கருதிய முரசொலி தான் பவளவிழா கண்டிருக்கிறது. அந்தப் பவளவிழா நிகழ்ச்சியை முரசொலி அறக்கட்டளை சார்பில் நாம் அண்மையில் நடத்தினோம். அப்படி நடத்திய நேரத்தில் தமிழ்நாட்டில் பத்திரிகை ஜாம்பவான்களாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்து பத்திரிகை, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கன் கிரானிக்கிள், தினத்தந்தி, தினமலர், தினமணி போன்ற பல்வேறு பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்களை அழைத்து விழா நடத்தினோம். அதற்குப் பிறகு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழக தோழமைக் கட்சிகளை சார்ந்த அத்துனை தலைவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு விழா நடத்தினோம். அதனை நடத்துகிற நேரத்தில் பங்கேற்ற அனைவரும் கட்சியை மறந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு தலைவர் கலைஞர் அவர்களை பாராட்டி இருக்கிறார்கள், தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட முரசொலியை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அதையெல்லாம் மனதில் அடிப்படையாக வைத்து தான் இந்த விழாவிலும் அந்த தலைப்பை இணைத்து இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
 
அதேபோல் மாற்றுக் கட்சியில் இருந்து நம்முடைய தாய்க் கழகமாம்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையக்கூடிய நிகழ்ச்சி. இதற்கு என்ன காரணம், நியாயமாக சிலர் ஒரு கட்சிகளில் இருந்து விலகி இன்னொரு கட்சிக்கு செல்கிறார்கள் என்றால் யார் ஆட்சியில் இருக்கிறார்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு சென்றால் தான் நமக்கு பயன் கிடைக்கும், சலுகைகள் கிடைக்கும் என திட்டம் போட்டு கட்சிகளில் சேருவது உண்டு. ஆனால் இன்றைக்கு  திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாக தான் இருக்கிறது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாரை சாரையாக வந்து மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் வந்து இணைகிறார்கள் என்று சொன்னால், என்ன காரணம், திமுக வை காப்பாற்ற, திமுக விற்கு வலு சேர்க்க, ஏன் தங்களை காத்துக் கொள்ள வருகிறார்களா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை.
 
ஒரே காரணம் என்னவென்று கேட்டால், ஒட்டுமொத்த இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் இன்றைக்கு சாரை சாரையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டிருப்பது நெல்லையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அந்த உணர்வோடு நம்முடைய தாய்க்கழகமாம்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கும் அத்துனை நண்பர்களையும், தோழர்களையும், செயல் வீரர்களையும் உங்கள் அனைவரின் சார்பாக வரவேற்கிறேன். தனிப்பட்ட செயல் தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, நம்மை இன்றைக்கும் இயக்கி கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் உங்கள் அனைவரையும் வருக, வருக, என வரவேற்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
 
ஆனால், அதேநேரத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருக்கிறது. இது சாதாரண பேரூராட்சி தான். ஆக பேரூராட்சியில் இவ்வளவு பெரிய கூட்டம் எனச் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு எந்தளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இல்லை. பள்ளி மாணவர்களை எல்லாம் கட்டாயப்படுத்து அழைத்து வந்து இந்தக் கூட்டத்தை நாம் நடத்தவில்லை, அரசு பேருந்துகளை தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அச்சுறுத்தி மிரட்டி அழைத்து வந்து சேர்ந்த கூட்டமா இந்தக் கூட்டம்? 100 நாள் வேலை செய்து கொண்டிருக்கும் தாய்மார்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்த கூட்டமா இந்தக் கூட்டம்? உங்களுக்கெல்லாம் இவ்வளவு கூலி தரப்படும் 100 ரூபாய் 200 ரூபாய் தரப்படும் எனச் சொல்லி உங்களை யாராவது அழைத்து வந்து இருக்கிறார்களா? பிரியாணி உண்டு, பலானா பலானா உண்டு வாருங்கள் என அழைத்து வரப்பட்ட கூட்டமா இது, கிடையாது. இலட்சியத்தோடு ஒரு கொள்கை உறுதியோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, நான் நெல்லையிலே காலையில் இருந்து சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். எங்காவது ஒரு இடத்தில் கட் அவுட் உண்டா, கிடையாது. அல்லது ஆடம்பர பதாகைகள் உண்டா, கிடையாது. அல்லது ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கிறதா, கிடையாது. எதுவும் கிடையாது.  நம்முடைய இலட்சியக் கொடியான இருவண்ணக் கொடிதான் நான் பார்க்கிறேனே தவிர வேறெதும் கிடையாது. அதற்காக நான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அத்துனை பேரும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
 
நீதிமன்றம் இன்றைக்கு உத்தரவு போட்டு இருக்கலாம், இப்படி தான் விளம்பரம் இருக்க வேண்டும், இப்படி தான் பதாகைகள் இருக்க வேண்டும், யார் யார் படங்கள் இருக்க வேண்டுமென விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருக்கலாம். நான் என்றைக்கு செயல் தலைவராக பொறுப்பு ஏற்றேனோ அன்றைக்கு நான் அறிவித்தேன். இரண்டு முக்கியமான அறிவிப்பு என்னவென்று கேட்டால், எனக்கு சால்வைகளோ, பொன்னாடைகளோ அணிவிப்பதை கட்டாயமாக தவிர்த்து புத்தகங்களை தாருங்கள். ஏதோ என்னுடைய சொந்த லாபத்திற்காக அல்ல, பள்ளிகளுக்கு அனுப்ப பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி பயன்படுத்தப்படும் என அறிவித்தேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல நான் வரக்கூடிய நிகழ்ச்சி மட்டுமல்ல, கழகத் தோழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்கிற அடையாளத்திற்கு ஒரு விளம்பரத்தை வையுங்கள். வேண்டாமென்று தடுக்கவில்லை. ஆனால், ஊரெல்லாம் பேனர்களை கட்டி, பொதுமக்களுக்கு இடையூறாக, அசவுகரியத்தை ஏற்படுத்தக் கூடாது என்று தலைமைக் கழகத்தின் சார்பில் ஒரு வேண்டுகோளை விடுத்து இருந்தேன். அது ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில இடங்களில் நடக்கலாம், அதுவும் நிச்சயமாக தவிர்க்கப்படும் என்கிற உறுதியை தெரிவிக்க விரும்புகிறேன்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில்  5 முறை ஆட்சிப் பொறுப்பிலே இருந்திருக்கிறோம். அறிஞர் அண்ணா தலைமையில் 1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்று,அவருடய மறைவுக்கு பிறகு அவருடைய இதயத்தை இரவலாக பெற்றிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் சாதனைகளை எல்லாம் நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நம்முடைய சிவ. பத்மநாபன் அவர்கள் பேசும்போது சொன்னாரே, இதே மாவட்டத்தில் திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த நேரத்தில் நம்முடைய ஐ.பி அவர்கள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் இங்கே இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள், தங்கம் தென்னரசு எல்லாம் அமைச்சர்களாக இருந்த நேரத்தில் என்னென்ன வசதிகளை, சாதனைகளை, திட்டங்களை, மக்களின் கோரிக்கைகளை இந்த மாவட்டத்திலே நிறைவேற்றி தந்திருக்கிறோம் என அவர் வரிசைப்படுத்தி எடுத்துச் சொன்னார். பேசிவிட்டு எனக்கு அருகிலே வந்து அவர் அமர்ந்த போது,  அவரிடத்திலே இவ்வளவு செய்து இருக்கிறோமோ என ஆச்சர்யத்தோடு கேட்டேன். அதற்கு, நான் 10 சதவீதம் தான் அண்ணன் சொன்னேன், நேரமில்லா காரணத்தால் 90 சதவீதத்தை சொல்ல முடியவில்லை என்றார். இப்படி எத்தனையோ திட்டங்கள், நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
 
இப்பொழுது திமுகழகம் கடந்த 6 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டிருக்கிறதே தவிர, உள்ளபடியே தமிழ்நாட்டை பொறுத்த வரையில், இன்றைக்கு திமுக தான் ஆட்சியில் இருந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு மக்களிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதைத் தான் இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை திமுக கழகத்தின் சார்பில் தூர் எடுக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் விடுத்தேன். திமுகழகத்தில் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அங்கு மட்டுமல்ல எங்கெல்லாம் தூர் எடுக்க வேண்டுமென்கிற நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முறையான அனுமதியை பெற்று கழக முன்னோடிகள் ஈடுபட வேண்டுமென வேண்டுகோள் வைத்தேன். அதனை ஏற்று தமிழகம் முழுவது அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்று இன்றைக்கு தண்ணீர் தேங்கி நிற்கின்ற காட்சிகளை பார்க்கிறோம். நீர் நிலைகள் எப்படி பாதுகாக்கப்பட்டு இருக்கிறது, மக்களுக்கு எவ்வாரு பயன்பட்டு இருக்கிறது என்பதையெல்லாம் தொலைக்காட்சியிலே வெளியிடப்பட்டதை நீங்களும் பார்த்தீர்கள்.
 
ஆகவே, திமுக பதவியில் இருந்தால் தான் இந்தக் காரியங்களை ஆற்றிட வேண்டுமென்பது இல்லை, பதவியில் இல்லையென்று சொன்னாலும் மக்களைப் பற்றி கவலைப்படுகிற இயக்கம் தான் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இங்கே நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் அளித்திருக்கும் உறுதிமொழிகள், வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிட வேண்டும். அதை தலைவர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருகிற நேரத்தில் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்.
 
ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி நடக்கிறது. அது ஆட்சி அல்ல, அது ஆட்சி நடக்கிறது என்றுகூட நாம் சொல்லக்கூடாது. படுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சாதாரணமாக படுத்து இருக்கிறதா? ஐ.சி.யூ வார்டில் படுத்து இருக்கிறது. அங்கு கூட மருத்துவர்கள் திறமையாக இருந்தால் காப்பாற்றிக் கொண்டு வந்து விடலாம். ஆனால் இன்றைக்கு கோமா நிலையில் இந்த ஆட்சி படுத்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதலவர் ஜெயலலிதா இன்றைக்கு மறைந்து விட்டாலும், உயிரோடு இருந்தபோது, “ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என்றும், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவோம், மணலை கயிறாக திரிப்போம் என்றெல்லாம் எத்தனையோ உறுதிமொழிகளை தந்தார்.
 
பூரண மதுவிலக்கை நாங்கள் படிப்படியாக அமுல்படுத்துவோம் என்று சொன்னார்கள். அது நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா? அந்த முயற்சியில் ஈடுபட்டார்களா? படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறதே தவிர குறையவில்லை. உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் இருக்கக்கூடாது என்று உத்திரவிட்டது. உடனே இங்குள்ள ‘குதிரை பேர’ அரசு, நெடுஞ்சாலைகளை எல்லாம் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளாக மாற்றி, அதற்காக மக்களின் வரிப்பணத்தை எல்லாம் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறதே தவிர, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா என்றால் இல்லை.
 
மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக சட்டமன்றத்தில், “மத்திய அரசு கொண்டு வரும் அந்தச் சட்டத்தை நீங்கள் ஏற்றால், நாம் அடிமைகளாக மாறக்கூடிய நிலை ஏற்படும், அதனால் மக்களுக்கு பலவித சங்கடங்கள் உருவாகும், எனவே எந்த நிபந்தனையின் அடிப்படையில் ஏற்கிறீர்கள்?”, என்று நாங்கள் அதை எதிர்த்து கேட்ட நேரத்தில், முதலமைச்சர் மட்டுமல்ல, உணவுத்துறை அமைச்சரின் சார்பிலும், “இந்தச் சட்டத்தை அமுல்படுத்துகின்ற காரணத்தால், எந்தவித பாதிப்பும் வராது”, என்று உறுதிமொழி தந்தார்கள். ஆனால், இன்றைக்கு என்ன நிலை? சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.13.50 என்று முன்பு இருந்தது, இன்றைக்கு ரூ.25 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக உளுத்தம் பருப்பு ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை என்றும் செய்தி வருகிறது. போகின்ற போக்கினைப் பார்த்தால் ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது என்ற அபாயகரமான அறிவிப்பும் வரத்தான் போகிறது. அதையும் தாண்டி, இனி ரேஷன் கடைகளே கிடையாது என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை.
 
அதனால் தான் நாளை மறுதினம் நாம் தமிழகத்தில் உள்ள எல்லா ரேஷன் கடைகளின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளோம். ஏற்கனவே 6 ஆம் தேதியன்று அந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு, தொடர் மழை காரணமாக 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் திமுக மட்டுமல்ல, ஒத்த கருத்துடைய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து, பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
 
இதே நெல்லையில் சில நாட்களுக்கு முன்பாக மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நடத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர் என்பதை நாங்கள் என்றைக்கும் மறந்திட மாட்டோம். திமுகவினால் அவர் வளர்ந்தாரா, அவரால் கட்சி வளர்ந்ததா என்ற விமர்சனத்துக்குள் கூட நான் செல்ல மாட்டேன். ஆனால், கட்சிக்கு அவர் வலு சேர்த்தார் என்பதை மறுப்பதற்கில்லை. கொள்கையில் மாறுபாடு, லட்சியத்தில் வேறுபாடு இருந்தாலும், எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலிவுற்று அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த நேரத்தில், “நாற்பதாண்டு கால நண்பர் நலமோடு இருக்க வேண்டும்”, என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
 
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், சட்டமன்றம் நடைபெற்ற போது, பல ஊழல் புகார்களை எல்லாம் ஆதாரங்களோடு காரசாரமாக தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்து வைத்தார். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களால் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல வேண்டிய தினத்தில், ஒருநாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு, “நாளை நான் பதில் சொல்கிறேன்”, என்று சொல்லிவிட்டு காரில் வீட்டுக்குச் செல்கிறார். அப்போது, அவருடன் காரில் சென்ற அதிமுகவை சேர்ந்த ஜேபிஆர் அவர்கள் தலைவருடைய பெயரைச் சொல்லி பேசியவுடன், “அவருடைய பெயரைச் சொல்ல உனக்கு தகுதி கிடையாது, உனக்கு நான் தலைவர், எனக்குத் தலைவர் கலைஞர் தலைவர்”, என்று கூறி அங்கேயே அவரை இறக்கிவிட்டுச் சென்றார் என்பது வரலாறு.
 
காரணம், அரசியல் என்பது வேறு, நட்பு என்பது வேறு. எனவே, எம்.ஜி.ஆருக்கு விழா கொண்டாடுவதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், மக்களுடைய வரிப்பணத்தை செலவிட்டு விழா நடத்தும்போது, அரசின் திட்டங்களைச் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் பெருமைகளை பேசட்டும். ஆனால், அந்த விழாக்களில் திமுகவை விமர்சித்து, கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள், அவர்களுக்குள் அணிகளாக பிரிந்துள்ள பிரச்னைகளைப் பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது, “எங்களைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் மைனாரிட்டி ஆட்சி நடத்துவதாக சொல்கிறார், 2006-2011 வரை திமுகதான் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தது”, என்று சொல்கிறார்கள்.
 
திமுக 2006-2011 வரை மைனாரிட்டி ஆட்சியாக இருந்தது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாமக துணையோடு, 5 ஆண்டுகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மெஜாரிட்டியாக ஆட்சி நடத்திய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. ஆனால், உன் நிலைமை என்ன என்று நான் கேட்க விரும்புகிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆட்சி, நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைக்குள் நான் செல்ல விரும்பவில்லை, தீர்ப்பு எப்படி வரும் என்பது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனால் தைரியமிருந்தால், தெம்பிருந்தால் இன்றைய சூழ்நிலையில் சட்டமன்றத்தைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா?
 
ஆனால், அவர் மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்து, எம்.ஜி.ஆர். பெயரில் விழா நடத்தி அதில், “நானும், ஓபிஎஸ்ஸும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம், திகவில் இருந்து பிரிந்தபோது, திமுகவும் திகவும் பிரிந்திருந்தாலும், இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார்களே, கொள்ளையடிக்கும் அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கியா? ஆட்சியை அடகு வைத்து இருக்கிறீர்களே, இதுதான் இரட்டைக் குழல் துப்பாக்கியா? மாநில உரிமைகள் எல்லாம் ஒவ்வொன்றாக பறி போகிறதே?
 
அம்மையார் இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு விழா கோவையில் நடைபெற்றபோது, “தமிழ்நாட்டின் முதல்வராக தலைவர் கலைஞர் அவர்களும், பிரதமராக இந்திரா காந்தி அவர்களும் இருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக வாதாடி, போராடிப் பெற்று தந்தார் என்றால் அது தலைவர் கலைஞர் மட்டும் தான்”, என்று நான் பெருமையோடு எடுத்துச் சொன்னேன். உதாரணமாக ஒன்றிரண்டை சொல்வதென்றால், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளன்று தேசிய கொடியை ஏற்றுகிறார்கள் என்று சொன்னால், ஒரு காலத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களில் மாநிலத்தின் ஆளுநர்கள் தான் தேசிய கொடியேற்றுவார்கள், ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமராக இருந்த அம்மையார் இந்திரா காந்தி அவர்களிடம் வாதாடினார், முதலமைச்சருக்கு என்ன மரியாதை? நீங்கள் கவர்னருக்கு மரியாதை தாருங்கள் நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் கொடியேற்றட்டும். அதேபோல, ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தான் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த நேரத்தில், அன்றைக்கு பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஏற்றுக் கொண்டு, ஒப்புதல் தந்து, இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தலைவர், கலைஞர் தான் என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.
 
இப்படி எத்தனையோ திட்டங்கள். சேலம் உருக்காலை திட்டம். டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநில முதலமைச்சர்களும் உடகார்ந்திருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு உரிய திட்டங்களை முடிவு செய்து நிறைவேற்றப்படக் கூடிய கூட்டமாக பிரதமரின் தலைமையில் அந்த கூட்டம் நடைபெறும். தமிழக முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், “சேலத்தில் இரும்பு உருக்காலை திட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாட்டு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிழைக்க முடியும், எனவே 4 கோடி மக்களின் கோரிக்கையாக இதனை நான் வைக்கிறேன்”, என்று எடுத்துரைத்த நேரத்தில், பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள், “யோசிப்போம், கொஞ்சம் அவகாசம் வேண்டும்”, என்று சொன்னதும், தலைவர் கலைஞர் அவர்கள், “உடனே திட்டத்தை இப்போதே அனுமதிக்காவிட்டால், நீங்கள் இங்கு நிறைவேற்றும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்”, என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
 
இதைக் கேட்டதும் ஒரு பிரதமருக்கு, முதலமைச்சர் ஒருவர் இப்படி பேசுகிறாரே என்று கோபம் வர வேண்டும், ஆத்திரம் வர வேண்டும் அல்லது வருத்தமாவது வர வேண்டும். ஆனால், இந்திரா கந்தி அவர்கள் கோபப்படவில்லை, ஆத்திரப்படவில்லை, வருத்தப்படவில்லை, ஆனால், அதற்கு மாறாக என்ன சொன்னார் தெரியுமா?, “உங்களுடைய உணர்வை நான் மதிக்கிறேன். மாநிலத்துக்காக போராடக்கூடிய மனப்பக்குவத்தை நான் பாராட்டுகிறேன். எனவே, சேலம் உருக்கால திட்டம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது”, என்று அந்த கூட்டத்திலேயே அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் அறிவித்தார்களா இல்லையா? இப்படி மாநில உரிமைகளை பெற்றுதருவதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைஞருடைய தலைமையில் இருந்த நேரத்தில் நாம் நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.
 
ஆனால், இன்றைக்கு இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்படுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இன்றைக்கு தமிழ்நாட்டினுடய உரிமைகளை அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால், சட்டம்-ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழகம்தான் சிறப்பாக இருக்கிறது என்று முதலமைச்சராக இருக்கின்ற எடப்பாடியும் பேசுகிறார், துணை முதலமைச்சராக இருக்கின்ற ஓ.பி.எஸ்ஸும் பேசுகிறார். இது நடக்கக்கூடிய இடம் நெல்லை மாவட்டம். அண்மையில், இதே திருநெல்வேலி மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மாண்ட சம்பவம் நடந்ததே, இதுதான் சட்டம்-ஒழுங்கா? நான் கேட்கிறேன்.
 
ஏற்கனவே இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்று, சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சி தலைவரை நேரடியாக சந்தித்திருக்கிறார்கள். அதேபோல, போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அதை கேட்டும் கேட்காத வகையில், அதை கண்டுகொள்ளாத வகையில் அலட்சியப்படுத்திய காரணத்தால்தான் அந்த குடும்பமே தீக்குளித்து மாண்டிருக்கிறது. இதுதான் சட்டம்-ஒழுங்கா? இந்த சம்பவம் நடைபெற்றப் பிறகு, வழக்கறிஞர் செம்மணி இந்த பிரச்னையை மக்களுக்குஎடுத்துச் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற காரணத்தால், நள்ளிரவில் அவரை வீட்டிலிருந்து வெளியில் வந்து தூக்கிப் போட்டு அடித்து, அதன்பிறகு அவர்மீது பல வழக்குகள் போடப்பட்டிருக்கிறதே, நான் கேட்கிறேன், இதுதான் சட்டம்-ஒழுங்கா?
 
அதேபோல இந்த கந்துவட்டியை பற்றி ஒரு கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை, அதே கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் எத்தனையோ முறை கலைஞரை பற்றி, திமுகவை பற்றி, ஏன், எத்தனையோ அரசியல் தலைவர்கள் பற்றி கேலிச்சித்திரம் போட்டதுண்டு. ஆனால், இந்த கந்து வட்டி பிரச்னையில் அவரையும் கைது செய்து, வெளியில் இழுத்துவந்து போட்டு அடித்து உதைத்து, அவர் மீதும் வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இதுதான் சட்டம்-ஒழுங்கா? இந்த ‘குதிரை பேர’ ஆட்சியில் சட்டம்-ஒழுங்கும் இல்லை. இந்த அமைச்சர்களை பொறுத்தவரையில் எந்த ஒழுங்கும் இல்லாத வகையில் இன்றைக்கு போய்க் கொண்டிருக்கிறது.
 
நான் இன்னும் கேட்கிறேன். நம்முடைய பத்மநாபன் அவர்கள் பேசுகிறபோது சொன்னாரே, இதே நெல்லை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நாட்டில் இருக்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக இந்த மாவட்டத்தில் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கு, இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பினை ஏற்படுத்திதர வேண்டும் என்பதற்காக, கங்கைகொண்டான் பகுதியில் ஐ.டி பார்க் உருவாக்கித் தந்தோமோ, அது இன்று எந்த நிலையில் இருக்கிறது? பார்க்க முடியாத நிலையில். இருட்டில் தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அது இருக்கிறதே தவிர அதைப் பற்றி கவலைப்படக்கூடிய சூழ்நிலையில் இந்த ஆட்சி இருக்கிறதா?
 
நான் இன்னும் கேட்கிறேன். ‘ஷிண்டேல் கம்பெனி’ 100 கோடி ரூபாய் முதலீடு செய்து, எப்படியாவது இந்த பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், அதற்கு இந்த அரசு இன்னுமும் அனுமதி தர முடியாத நிலையில் ஒரு ‘குதிரை பேர’ ஆட்சியாக நடந்துக் கொண்டிருக்கிறதே தவிர வேறென்ன?
 
மத்திய அமைச்சராக இருந்த நம்முடைய மறைந்த முரசொலி மாறன் அவர்களை பற்றி நம்முடைய ஐ.பி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னாரே, நாங்குனேரி பகுதியில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக அயராது பாடுபட்டு, அதற்குரிய அனுமதியெல்லாம் பெற்றுத்தந்திருந்த சூழ்நிலையில், இப்போதிருக்கும் ஆட்சி அதை பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுகிறதா? விவசாயப் பெருங்குடி மக்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறதா? கிடையாது. தென்னை, மாங்கனி விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை. சங்கரன்கோவில் தொகுதியில் நெசவாளர்கள் குறைந்தபட்ச கூலி கூட அவர்களை சென்றடைய முடியாத வகையில் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களை பற்றி இந்த ஆட்சி கவலைப்படுகிறதா?
 
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து 5000 பேருக்கு வீடு கட்டித் தருவோம் என்று உறுதிமொழி தரப்பட்டது. ஆனால் இதுவரையில் ஒரு வீடாவது அந்த பகுதியில் கட்டித்தரப்பட்டிருக்கிறதா? இதைவிட கொடுமை, இந்த நெல்லை மாநகராட்சிக்கு ‘போலீஸ் கமிஷனர்’ ஒரு வருடமாக நியமிக்கப்படவில்லை. இந்த லட்சணத்தில். எம்.ஜி.ஆர் பெயரில் விழா நடத்தக் கூடிய முதலமைச்சர் எடப்பாடி சட்டம்-ஒழுங்கு இந்தியாவிலேயே சிறப்பு என்று கூறுகிறீர்களே, இதைவிட வெட்கம் ஏதாவது சொல்ல வேண்டும் என்ரு அவசியமா? இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி இருந்துக் கொண்டிருக்கிறது.
 
இங்கு ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அதுவும் இந்திய காவல் படயினாராலேயே இப்போது மீனவர்கள் சுடப்படுகின்றனர். இந்த செய்தி அறிந்து, பத்திரிகையாளர்கள், அந்த துறையின் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களை கேட்கிறார்கள். அதற்கு அவர் என்ன சொல்கிறார். ’அப்படியா? நான் வருத்தப்படுகிறேன்’ என்று சொன்னாரா, இல்லை. ‘விசாரணையை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன். உரிய நடவடிக்கையை எடுக்கிறேன்’ என்று சொன்னாரா, இல்லை. அதெல்லாம் தெரியாது, எங்கிருந்து குண்டு வந்தது என்று எங்களுக்கு தெரியாது என்று கேவலப்படுத்தக்கூடிய வகையில், நம்முடைய தமிழக மீனவர்களை கொச்சைப்படுத்தக்கூடிய வகையில், பொறுப்பில் இருக்கின்ற மத்திய மாஇச்சர் பேசிவிட்டு செல்கிறார் என்றால், நான் கேட்கிறேன், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏன் இன்னும் அதை பற்றி வாய் திறக்கவில்லை? வாய் திறந்தால், ஆட்சி போய்விடும். கவர்னரை பற்றி இங்கு பேசியவர்கள் சொன்னார்களே.
 
தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூருக்கு சென்று ஆய்வு நடத்துகிறார். இப்படியொரு நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. விரைவில் பாருங்கள் கோட்டைக்கும் சென்று ஆய்வு நடத்துவார். அப்படியொரு இலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. அடிபணிந்து, அடிமையாக ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்றால், இந்த கூட்டத்தில் நான் உறுதியோடு சொல்கிறேன், கலைஞருடைய பெருமைகளை, சிறப்புகளை பேசினால் மட்டும் போதாது, அவர் எந்த உணர்வோடு இந்த சமுதாயத்து உழைத்திருக்கிறாரோ, அந்த மாநில உரிமையை பெறுவதற்கு ஒரு சபதத்தை நாம் இந்த கூட்டத்தில் எடுத்தாக வேண்டும். அப்படி மாநில உரிமைகளை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்ற, நமக்கான ஆட்சி உருவாக வேண்டும்.
 
முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் ‘பிரேக்கிங் நியூஸ்’ வரும்.  முக்கிய செய்தி வரும். இப்போதெல்லாம், 24 மணிநேரமும் தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’ தான்.  அதுவும் என்னவென்றால், வருமான வரி சோதனை. அம்மையார் ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான். முதன்முறையாக, தலைமைச் செயலாராக இருந்த ராமமோகன ராவ் அவருடைய அலுவலகத்திலேயே சோதனை நடந்தது. அதன்பிறகு அதன்பிறகு கரூரில் அன்புநாதன் வீட்டில் சோதனை, மின் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை, சென்னை மேயராக இருந்த துரைசாமியின் வீட்டில் சோதனை மணல் மாஃபியா என்று சொல்லப்படும் சேகர் ரெட்டியினுடைய இல்லத்தில் சோதனை, ‘குட்கா புகழ்’ இப்போது ‘டெங்கு புகழ்’ விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, வாக்களர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று ஆவணங்கள் ஆதாரத்தோடு எடுக்கப்பட்டது.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது? நான் சொல்லவில்லை, இடைத்தேர்தலை நிறுத்துமாறு சொன்னது டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன். அப்போது என்ன காரணத்துக்காக தேர்தலை நிறுத்துகிறோம் என்று 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. அதில், 89 ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தில் இவர்கள் மேலெல்லாம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்குத் தொடுத்து விசாரண நடத்த வேண்டும், அதுவரையில் தேர்தல் நடத்தக் கூடாது என வெளிப்படையாக அறிவித்தார்கள்.  அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் வீட்டிலெல்லாம் சோதனை நடந்ததா இல்லையா?
 
இப்படி தொடர்ந்து சோதனை நடந்துக் கொண்டிருக்கிறது. அதைதொடர்ந்து இப்போது சசிகலாவின் உறவினர்கள் வீடுகளிலெல்லாம் சோதனை. மூன்று நாட்களுக்கு முன்பு, முதலைமைச்சாரக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலைதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை. இந்த சோதனைகளெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது? யார் மீதாவது வழக்குப் போடப்பட்டிருக்கிறதா? எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்களா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இந்த சோதனைகளையெல்லாம் நடத்தி மக்களுக்கு உண்மைகளை சொல்லட்டும், நாங்கள் வரவேற்கிறோம். அதை நாங்கள் தவறென்று வாதிட தயாரில்லை. ஆனால், உள்நோக்கத்தோடு சோதனை நடத்தி, அதன்மூலமாக தமிழகத்தில் காலூன்றுவதற்காக இன்றைக்கு மத்தியில் இருக்கும் பிஜேபி கருதும் என்றால், காலூன்ற அல்ல, தமிழகத்தில் கை கூட வைக்க முடியாது. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கின்ற நிலை.
 
இந்த முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், இதயெல்லாம் தடுக்கின்ற முயற்சியில் நாம் ஈடுபட வேண்டுமென்றால், மாநிலத்தில் கையாலாகாத ஒரு ஆட்சி, ஒரு ‘குதிரை பேர’ ஆட்சி  இன்றைக்கு தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது, எதை பற்றியும் கவலைப்பட முடியாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கின்ற சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டைரை ஆண்டுகளா அல்லது இரண்டே முக்கால் ஆண்டுகளா?
 
இப்போது தமிழகத்தில் மக்களுக்கு அதிமுகவை வொட, திமுக மீது தான் அதிக கோபம். என்ன கோபம் என்றால், இன்னும் இந்த ஆட்சியை கலைக்காமல், கவிழ்க்காமல் இருக்கின்றீர்களே என்ற கோபம் தான் அது. எங்கே சென்றாலும். நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் ஏறி மதுரையில் வந்து இறங்குகிற வரையில், அதில் என்னுடன் பயணம் செய்த பயணிகள் என்னிடம் கேட்டது, எப்பங்க விடிவுகாலம் வரும்? விமானத்தில் மட்டுமல்ல ரயிலில் போனாலும் இதுதான், காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்கு சென்றாலும் இதையேதான் கேட்கிறார்கள். மக்களிடத்தில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், எதுவும் நடக்கவில்லை, எனவே மீண்டும் உங்கள் ஆட்சி வர வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்கு செழிப்பான ஒரு நிலையை உருவாக்க வேண்டும், இந்த ஆட்சிக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அந்த நிலையை உருவாக்க தயாராகுங்கள், தயாராகுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :11/22/2017 10:08:11 AM
திமுக அகில இந்திய அளவில் தேர்தலில் போட்டியிடவேண்டும், அகில இந்திய அளவில் ஆட்சியைக் கைப்பற்றவேண்டும்.. அப்போதுதான் வட மாநிலங்களிலும் பரந்த வளர்ச்சியுண்டாகும். இல்லாவிடில் எல்லா வட மாநில இந்தியர்களும் தமிழ் நாட்டிற்கு வேலைதேடி வந்து குவிந்து விடுவார்கள். திமுக (திராவிடக்கட்சி) ஆண்டதால் உழைப்பவர்களுக்கு மற்ற மாநிலங்களை விட உயர்ந்த சம்பளம் தமிழ் நாட்டில் கிடைக்கிறது. காங்கிரஸ், பிஜேபி ஆண்ட மாநிலங்களைவிட உழைப்பவர்களுக்கு திராவிடக் கட்சி ஆண்ட / ஆளுகிற/ ஆளப்போகிற தமிழ்நாட்டில்தான் சம்பளமும் அதிகம், வேலைவாய்ப்பும் அதிகம். ஸ்டாலின் அவர்கள் இதைச்செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.