Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Logo
ஓம்
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
2018 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
உற்சவம் தரும் பயன்கள்!
 ................................................................
மூவுலக அதிபதி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
2018 ஜனவரி மாத ராசி பலன்கள்
 ................................................................
மதி வேண்டும் கருணை நிதி வேண்டும்!
 ................................................................
ஆடலரசனின் தத்துவம்!
 ................................................................
கண்ணனைக் குட்டிய கவியரசன்!
 ................................................................
அருள் பல தரும் ஆதிசக்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
உலகம் போற்றும் சூரியன்!
 ................................................................
01-01-18தைப்பூசம் 31-1-2018

"அன்னம் வை ப்ரஜாபதிஸ்தோ ஹ வை
தத்ரேதஸ் தஸ்மாதிமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி.'

பிரசன்ன உபநிடதத்தில் வரும் இந்த சுலோகத்தின்படி, உணவே படைப்புக் கடவுள் எனப் போற்றப்படுகிறது.

அதேபோன்று ஐதரேய உபநிடதத்தில்,

"ஸ ஈக்ஷதேமே நு லோகாச்ச லோகபாலாச்ச
அன்னமேப்ய: ஸ்ருஜா இதி.'

என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது "உலகங்களையும், அதில் உயிரினங்களையும் படைத்துவிட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன்' என இறைவன் நினைத்தார் என்னும் பொருளில் இந்த சுலோகம் அமைந்துள்ளது. இதன்மூலம் உயிரினங்களுக்கு உணவு எவ்வளவு அவசியம் என்பதை உணரலாம். ஏழை, எளியோருக்கு உணவு வழங்கும் நற்பணியைப் பற்றி திருக்குர்ஆன், "இறைவன்மீது பிரியம் உள்ளவர்கள் அநாதைகளுக்கு (ஏழை) உணவளிக்கிறார்கள்' என்றும், கிறிஸ்துவர்களின் வேத நூலான புனித பைபிள் (யோவான் 6:35) "வாழ்வு தரும் உணவு நானே; என்னிடம் வருபவர்களுக்கு பசியே இராது' எனவும் கூறுகிறது. "பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்' என்னும் பழமொழி பட்டினிக்கொடுமையின் பயங்கரத் தன்மையை உணர்த்துகிறது.

யாவருக்கும் பசியால் வரும் துன்பத்தையும் ஆபத்தையும் உணர்ந்து, அப்பசியைப் போக்கி உயிர்வாழச் செய்யும் செயலே ஜீவகாருண்யத்தின் முதற்படி என்பதை உணர்ந்த அருட்பிரகாசர் வள்ளலார், தினமும் சாதி, மத, மொழி, இன பாகுபாடின்றி மூன்று வேளையும் பசித்தவர்களுக்கு வயிறார அருஞ்சுவை உணவை வழங்குவதற்காக 1867-ல் சத்திய தருமச் சாலையை வடலூரில் தொடங்கினார். இந்தப் புனித பணியானது 150 ஆண்டு களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது மட்டுமின்றி, அன்று அவரால் சமைக்கும் கூடத்தில் ஏற்றப்பட்ட அடுப்பின் நெருப்பு இன்றுவரை அணையாமல் இருப்பது வியக்கத்தக்க செயலாகும்.

"பசிப்பிணி மருத்துவர்' என போற்றப் பட்ட வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங் கம் என்பதாகும். இவர் 5-10-1823-ஆம் ஆண்டு, (புரட்டாசி மாதம் 21-ஆம் நாள், சித்திரை நட்சத்திரம்) ஞாயிற்றுக்கிழமை, மாலை வேளையில் இராமையா-

சின்னம்மை தம்பதியருக்கு மகனாக, வடலூருக்கு அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தார். வேளாளர் குலத்தில் பிறந்த இராமையா ஐந்துமுறை திருமணம் செய்து, ஐந்து மனைவியருக்கும் பிள்ளைச் செல்வம் இல்லாமல் ஒருவர்பின் ஒருவராக நோயினால் இறக்க நேரிட, ஆறாவதாக பொன்னேரியைச் சேர்ந்த சின்னம்மையைத் திருமணம் செய்துகொண்டார். இராமையா அந்த ஊரில் கணக்குப் பிள்ளையாகவும், குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பணியையும் செய்துவந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன.

ஒருநாள் இராமையா இல்லத்திற்கு ஒரு சிவனடியார் மதிய வேளையில் வந்தார். தனக்கு ஏதாவது உணவு தருமாறு கேட்க, வந்த சிவனடியாரை சின்னம்மை அன்புடன் வரவேற்று விருந்தளித்து உபசரித்தார். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது அந்த சிவனடியார், "விரைவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அந்த குழந்தை பிற்காலத்தில் சத்புத்திரனாகத் திகழ்வான்' எனக்கூறி விபூதியைக் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். சிவனடியார் கொடுத்த விபூதியை தம்பதியினர் பக்தியுடன் பூசிக்கொண்டனர்.

அவர்களுக்கு ஐந்தாவது பிள்ளையாக, மாயை எனும் இருளையகற்றும் இளஞாயிறாக ஞாயிற்றுக்கிழமையன்று தோன்றினார் இராமலிங்கர். குழந்தைக்கு ஐந்து வயது நடக்கும் சமயத்தில் பெற்றோர் குழந்தையை தில்லை நடராஜர் கோவிலுக்கு அழைத்துச் செல்ல, கோவிலில் காட்டிய கற்பூர ஜோதியைக் கண்டு கலகல என சிரித்ததாம்.

தந்தை இராமையா சில காலங்களில் இறந்துவிடவே, சின்னம்மை குழந்தைகளுடன் சென்னை ஏழு கிணறு பகுதியிலுள்ள வீராசாமிப்பிள்ளை தெருவில் வசித்தார். மூத்த மகனான சபாபதி குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். அவர் சமயச் சொற்பொழிவாற்றி, அதன்மூலம் குடும்பத்தை வழிநடத்தினார். இளம்வயதிலேயே இராமலிங்கர் சென்னை கந்தகோட்டத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானிடம் அதிக பக்திகொண்டு, தன்னையறியாமல் பாமாலை சூட்டிவந்தார்.

தன் தம்பிக்கு அண்ணன் சபாபதியே முதலில் தமிழ் கற்றுக் கொடுத்தார். பின்னர் காஞ்சி மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில ஐந்தாம் வயதில் பள்ளியில் சேர்த்தார். பள்ளியில் ஆரம்பப் பாடமாக உலக நீதியான "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்' என "வேண்டாம், வேண்டாம்' என எதிர்மறைச் சொல்லைக் கொண்ட பாடத்தைச் சொல்லித் தந்தது இளம்பாலகனுக்குப் பிடிக்கவில்லை. எனவே நேர்மறையாக "வேண்டும் வேண்டும்' என இறைவனிடம் வேண்டும் வண்ணம்-

"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்...'

என கந்தகோட்டம் முருகனை வேண்டும்படி அவர் பாடிய பாடலைக் கேட்டு, மகாவித்துவானான தமிழாசிரியரே வியந்தார். காரணம், இலக்கண, இலக்கியத்தில் பயிற்சி பெற்றவர்போல் இளம்வயதிலேயே பாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பள்ளிக்குச் செல்ல விருப்பமின்றி கந்தகோட்டத்திலேயே நாட்களைக் கழித்தார் இராமலிங்கர். இதையறிந்த அண்ணன் சபாபதி வருந்தினார். வீட்டில் தங்கவும் சாப்பிடவும் தற்காலிகத் தடை விதித்தார். ஆனால் இராமலிங்கரின் அண்ணியாருக்கு இது வேதனையைத் தந்தது. தன் கணவருக்குத் தெரியாமல் இராமலிங்கருக்கு உணவு கொடுத்து வந்தார். தந்தை இராமையாவின் நினைவு நாளன்று உறவினர்கள் எல்லாரும் உணவுண்ணும்போது, தன் தம்பி மட்டும் சாப்பிடவில்லையே என வருந்திய சபாபதி, இனி வீட்டிலேயே தம்பி தங்கட்டும் எனக் கூறிவிட்டார். வீட்டின் மாடியில் தனியறையில் தங்கி முருகப்பெருமானை வழிபடுவது, நிலைக்கண்ணாடிமுன்பு விளக்கேற்றி வைத்து அதன்முன்பு தியானம் செய்வது என இருந்தார் இராமலிங்கர். தன் அண்ணன் சபாபதியின் சமயச் சொற்பொழிவுக்கு உதவி செய்யும் பணியையும் செய்துவந்தார்.ஒருமுறை சென்னை மண்ணடியைச் (முத்தியாலுப்பேட்டை) சேர்ந்த சோமு செட்டியார் என்ற பிரமுகரின் இல்லத்தில் தொடர் சொற்பொழிவாற்றி வந்த சபாபதிக்கு ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் போக, தனக்கு பதிலாக தம்பி இராமலிங்கத்தை அனுப்பிவைத்தார் சபாபதி. அவ்வாறே சென்று உரை நிகழ்த்தினார் இராமலிங்கர்.

திருஞான சம்பந்தர் பற்றி ஒன்பது வயது பாலகனான இராமலிங்கர் பேசுவதைக் கண்டு அங்கு வந்திருந்த அனைவரும் அதிசயித்தனர்.

இதுவே இராமலிங்கர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. மெல்லமெல்ல இராமலிங் கரின் பெருமையை வீட்டிலிருப்பவர்களும், ஊராரும் அறியத் தொடங்கினர். சென்னை திருவொற்றியூர் சென்று தியாகராஜரையும், வடிவுடையம்மனையும் வழிபட்டு, அங்கேயே பல மணிநேரம் தியானத்தில் இருப்பார் இராமலிங்கர்.

ஒருசமயம் சென்னை வீராசாமி தெருவிலிருக்கும் துலுக்காணத்தம்மன் கோவில் திருவிழாவுக்கு இராமலிங்கரை அழைக்க, அதையேற்று அங்கு சென்றார். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பலியிட ஆடு, கோழி போன்றவை அங்கிருந்தன. அதைக்கண்டு மனம் கலங்கியவர் அவர்களுக்கு எடுத்துக்கூறி, உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் துலுக்காணத்தம்மன்மீது ஐந்து பாடல்களைப் பாடினார்.

ஒருநாள் நீண்ட நேரம் திருவொற்றியூரில் தியானத்தில் ஈடுபட்ட இராமலிங்க அடிகளார் பின்னிரவில் வீட்டிற்கு வந்தார். அந்த சமயத்தில் வீட்டிலிருப்பவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததால் அவர்களை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் படுத்தார். இருப்பினும் பசி என்னும் நெருப்பு அவரை வாட்டியது. அந்த மயக்கத்தில் தூங்கிக்கொண்டு இருந்தவருக்கு ஒற்றியூர் வடிவுடையம்மனே அவரது அண்ணியின் உருவில் வந்து உணவளித்தார். இதையறியாமல் உணவுண்ட பின்னர் மீண்டும் தூங்கிய  இராமலிங்க அடிகளாரை அவரது அண்ணியார் எழுப்பி, உணவுண்ண உள்ளே வருமாறு கூறினார்.

""இப்பொழுதுதான் எனக்கு உணவு கொடுத்தீர்கள்'' என இராமலிங்கர் சொல்ல, அண்ணியார் திடுக்கிட்டார். தான் சாப்பிட்டு கை அலம்பிய இடத்தையும், கீழே சிந்திய சாப்பாட்டுப் பருக்கையையும் காண்பிக்க,

அண்ணியார் வியந்து, தான் உணவளிக்கவில்லை என்று கூற, அண்ணியார் வடிவில் உணவு தந்தது வடிவுடையம்மனே என உணர்ந்து மனம் கசிந்த அடிகளார்,

"தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே'

என ஆறாம் திருமுறையில் பாடினார். ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய இறைவி இவருக்கு திருவமுது ஊட்டினார்.

இராமலிங்க அடிகளார் எப்பொழுதும் வெள்ளைநிற ஆடையுடன், தலைக்கு முக்காடு போட்டுக்கொண்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து எளிய தோற்றத்தில் அமைதியே வடிவாக இருப்பார். அருள்ஞானியான அடிகளார் பரம்பொருளான மெய்யறிவைத் தேடியும், ஆன்ம விளக்கம் பெறவும், மன அமைதி நாடியும் சென்னை நகரிலிருந்து தனது அன்பர்களுடன் 1858-ஆம் ஆண்டு புறப்பட்டு, கருங்குழி என்னுமிடத்தில் வேங்கட ரெட்டியார் மாளிகையில் தங்கினார். அங்கு பகலில் அன்பர்களுடன் உரையாடுவது, சொற்பொழிவாற்றுவது என இருந்துவிட்டு இரவில் அருட்பா எழுதுவார்.

ஒரு நாள் இரவு இராமலிங்க அடிகளார் ஆழ்ந்து எழுதிக்கொண்டிருந்தபோது விளக்கின் ஒளி எண்ணெய் இன்றி மங்கியது.

அவர் அருகிலிருந்த மண் கலயத்தில் எண்ணெய் இருப்பதாக நினைத்து, குடிக்க வைத்த தண்ணீரை விளக்கில் ஊற்றிவிட்டு எழுதுவதில் மும்முரமாக இருந்தார். அருளாளரின் அருந்தவப் பயனால் தண்ணீரில் விளக்கெரிந்தது.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி எழுதிய அருட்பா பாடல்களின் ஆறு திருமுறைகளில், நான்கு திருமுறைகள் இவரது சீடரான தொழுவூர் வேலாயுதம் என்பவரின் முயற்சியில் அச்சில் வெளிவந்தது.

1865-ஆம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தை உருவாக்கினார். பிற்காலத்தில் அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கமாக மாற்றப்பட்டது. இளம் வயதிலேயே பசியின் கொடுமையை அனுபவித்ததால் பசித்தவர்களுக்கு உணவளிக்கவேண்டுமென அறிவுறுத்தினார்.

கிருஷ்ண யஜுர் வேதத்தின் முதல் காண்டத்தில் வரும் முதல் மந்திரமே, "நான் உணவுக்கு உன்னை நாடுகிறேன். நான் பலத்திற்கு உன்னை நாடுகிறேன்' என்பதாகும். "உன்னை' என்பது மனம். மனபலத்திற்கு உணவு நாடுகிறேன் என்பது இதன் கருத்து. உணவை உண்பதால் உடம்பு வளர்கிறது; காக்கப்படுகிறது. உடலுக்கு வலிமையும் மூளைக்கு (அறிவு) ஞானமும் கிடைக்கிறது.

பசியின் கொடுமை மனிதனை தவறான பாதைக்குச் செல்லத் தூண்டுகிறது. எனவே பசி இல்லாத உலகைப்படைக்க அன்னதானத்தை வலியுறுத்திய இராமலிங்க அடிகளார்-

"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்'

என உள்ளம் உருகப்பாடியது மட்டுமின்றி, அதைச்செயல்படுத்தும் வண்ணம் 23-5-1867 அன்று வடலூர் பார்வதிபுரத்தில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி, வருபவர்களுக்கு சமத்துவ சிந்தனையில் உணவளிக்க ஏற்பாடு செய்தார். உணவிற்காக உயிர்களைக் கொல்வதையும் வள்ளலார் கண்டித்தார். கொல்லாமை, புலால் (மாமிசம்) உண்ணாமையை வலியுறுத்தினார்.

"உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார்

அல்லர் அவர் புற இனத்தார்' என சாடினார். அதேபோன்று உயிர்ப்பலி என்னும் பெயரில் இறைவனுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்களை பலியிட்டு வந்ததைக் கண்டு,

"நலிதரு சிறிய தெய்வமென் றையோ
    நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிருக் குடங்கள்
    பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே'

எனப்பாடி, உயிர்ப்பலி கொடுத்தல் ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். "கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராமரமே' என தாயுமானவர் பாடிய பாடலைப் போன்றே இராமலிங்க அடிகளாரும்,

"துண்ணெக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
    தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
    கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
    வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
    எந்தை நின் திருவுளம் அறியும்'

எனப்பாடி, உயிர்க்கொலை புரிந்து ஊனுண்ணும் பழக்கத்தை அறவே விடுமாறு அன்புடன் வேண்டுகிறார். 1870-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் சித்தி வளாகத்தில் தங்கினார்.

ஒளிவழிபாட்டிற்காக 1872-ஆம் ஆண்டு சத்தியஞான சபையைத் தோற்றுவித்து, தைப்பூசத்தன்று முதல் ஒளிவழிபாட்டை நடத்தினார். அவ்வாண்டே ஒரே இரவில் 1,596 வரிகளைக் கொண்ட "அருட்பெருஞ்சோதி அகவல்' என்கிற நூலை எழுதி முடித்தார். இந்த அகவலே சன்மார்க்க சங்கத்தின் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. வடலூரில் இராமலிங்க அடிகளால் கைப்பட எழுதிய இந்த நூலை கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்துக்காத்து வருவதுமட்டுமின்றி, பூஜையும் செய்கிறார்கள். அதேபோன்று அவரால் ஏற்றப்பட்ட தீபவிளக்கு இன்னும் அணை யாமல் இருப்பது வியப்புக்குரிய விஷயமாகும்.

1874-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் தைப்பூசத் திருநாளன்று சித்தி வளாகத்தின் அறையுள் இரவு 12.00 மணிக்குச் சென்றவர் அதற்குப்பின்னர் வெளியே வரவில்லை. ஜோதியுடன் இரண்டறக்கலந்து, எல்லார் இதயத்திலும் நீக்கமற உள்ளார். மனிதன் மட்டுமின்றி "எல்லா உயிரினங்களும் இன்புற்று வாழ வேண்டும்' என்கிற பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் அறிவுறுத்திய வண்ணம் நாம் வாழ்ந்தால், உலகில் அமைதி எங்கும் நிலவும் என்பது நிச்சயம். தைப்பூசத்திருநாளில் வடலூர் ஞானசபையில் ஏழு வண்ணத்திரையை விலக்கி ஒளிவழிபாடு (ஜோதி வழிபாடு) நடத்துவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அந்நாளில் இராமலிங்க வள்ளலார் உபதேசித்த "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்னும் மந்திரத்தை ஜெபித்து, கருணை உள்ளத்தோடு இறைவனை அறியலாம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :