Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17"கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்' என்று சொல்வார்கள். அது அர்த்தமுள்ள கோபம். "கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்பதும் ஒரு பழமொழி. இது அர்த்தமற்ற கோபம்.

நம் சுயநலத்திற்காக எழுவது அர்த்தமற்ற கோபம். நம்மைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்க்காமல் பொதுநலன் கருதி அவற்றைத் தடுக்க முனைவது அர்த்தமுள்ள கோபம்.

மகாபாரதத்தில் திரௌபதியின் கூந்தலைப்பற்றி இழுத்தபடி துரியோதனன் அரண்மனைக்குச் செல்கிறான் துச்சாதனன்.வழி நெடுக மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர கோபம் கொண்டு தடுக்கவில்லை. "கீழ்த்தரமான நடவடிக்கைகளைக் கண்டு கிளர்ந்தெழாதவர்கள் மக்களல்ல; மாக்கள்' என்கிறார் "பாஞ்சாலி சபத'த்தில் பாரதியார்.

பிறர் வருந்தும்படி கோபம்கொண்டு தண்டிப்பது தவறான செய்கைதான். ஆனால் பிறர் திருந்தும்படி கோபம்கொண்டு கண்டிப்பது தேவையான செய்கைதானே.

வாழ்க்கை என்பது இறைவன் நமக்கெல்லாம் அளித்திருக்கும் வரப்பிரசாதம். இந்த அருட்பெருங்கொடையை அனுபவிக்கத் தெரியாமல் பலர் அலமந்து நிற்கிறார்கள். சுவையான இந்த மானுட வாழ்வை அனுபவித்து ரசிக்கத் தெரியாமல் சுமையாக எண்ணி, கொண்டாடத் தெரியாமல் தனக்குத் தானே திண்டாடுகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவது, ஆவேசம் கொண்டு அடிப்பது என்பதாக சிலர் இருக்கிறார்கள். எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வது; எள்முனையளவையும் எதிர்ப்பைக் காட்டாதிருப்பது- இப்படியும் பலர் இருக்கிறார்கள். இந்த இரண்டுமே தவறான முன்னுதாரணங்கள்."முழுக்க முழுக்க சர்க்கரையாய் இருந்துவிடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். அதற்காக எட்டிக்காய்போல அமைந்துவிடாதே; உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்' என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி.

மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களோடும் அறிவுத்திறனோடும் இப்பூவுலகில் பிறந்ததே சாதித்துக் காட்டத்தானே! மனிதப் பிறப்பு ஒருமுறைதானே! இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? பெற்ற இப்பேற்றைத் தவறவிடலாமா என்று அருளாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"மனம் நிறைந்திடில் அமுதமாய் நிறைந்திடும் வையகம்' என்ற சான்றோர் வாக்குப்படி, ஏக்கத்தையும் தூக்கத்தையும் போக்கி, ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தரவல்லதொரு திருத்தலம்

தான் சங்ககிரியில் அமைந்துள்ள சோமேஸ்வரர் ஆலயம்.

இறைவன்: சோமேஸ்வர்.

இறைவி: சௌந்தரவல்லி நாயகி.

விசேஷ மூர்த்தி: சந்தோஷ சனி பகவான்.

புராணப் பெயர்: சங்கரி துர்க்கம்.

ஊர்: சங்ககிரி.

தல விருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தம்: சோமதீர்த்தம்.

தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகத் திகழும் இவ்வாலயம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஆலயம் இது.

தட்சன் தனது 27 புதல்விகளை (அசுவினி முதல் ரேவதி வரை) சந்திரனுக்கு மணம் முடித்து வைத்ததும், சந்திரன் ரோகிணியிடத்தில் மட்டும் அதிகப் பிரியமாய் இருந்ததால் மற்றவர்கள் தட்சனிடம் முறையிட, தட்சன் சந்திரனுக்கு சாபமிட்டதும் அனைவரும் அறிந்ததே!

தட்சனின் சாபத்திலிருந்து விடுபட சந்திரன் பல சிவாலய தரிசனம் செய்தான்.

அத்தகைய தலங்களுள் சந்திரன் நிறுவி வழிபட்ட ஒரு தலம்தான் சங்ககிரி சிவாலயம். சோமன் (சந்திரன்) ஈசனை வழிபட்டுப் பேறுபெற்றதால் இறைவனுக்கு சோமேஸ்வரர் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

பார்வதி தேவி, சென்ன கேசவப்பெருமாளின் ஆலோசனைப்படி சங்ககிரி மலையில் தவமிருந்ததாக ஐதீகம். துர்மரணம் என்றால் இயற்கையான மரணமல்ல. போரிலே ஒருவரையொருவர் சுட்டுக்கொல்வது, விபத்தினால் மாய்வது, சுனாமி, இடிதாக்கி மாய்வது, நீரில், நிலத்தில் கண்டம் ஏற்படுவது போன்ற செயல்களால் வருவது துர்மரணம். மரணம் என்றால் துக்கம். (து(ர்)க்கம்). இதுபோன்ற விபரீத விளைவுகள் ஏற்படாவண்ணம் நாட்டின் அமைதிக்காக பார்வதி தேவி தவமிருந்ததால் சங்கரி (பார்வதி) துர்க்கம் என ஊரின் புராணப் பெயர் உண்டாயிற்று.

உருவம், வடிவம் எனும் பூவுலகத் தோற்றங்கள் லட்சணம், சுந்தரம், சௌந்தர்யம் என ஆரியமும்; வனப்பு, பொலிவு, அழகு என தமிழும் கூறுவதற்கிணங்க, உமையாம்பிகை சௌந்தரவல்லி நாயகி என்னும் திருநாமத்துடன் காட்சி தருகிறாள். இத்தேவியை வழிபடும் பக்தர்கள் தோற்றப்பொலிவும், ஆரோக்கிய விருத்தியும், ஐஸ்வர்யமும் பெற்றுத் திகழ்வர் என்பது திண்ணம்.

தமிழகத்திலுள்ள செஞ்சி, வேலூர், திருமெய்யம், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற கோட்டைகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை சங்ககிரி. இந்த சங்ககிரி கோட்டையின் மலை உச்சியில் சென்னகேசவப் பெருமாள் கோவிலும், மலையடிவாரத்தில் அக்ரஹாரம் பகுதியில் சோமேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. முதலில் சங்ககிரி கோட்டையின் மகிமையை அறிந்துகொண்டு அடுத்து சோமேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்வோம்.

"சேலத்து வீதியழகு
தாரமங்கலத்துக் கோவிலழகு
திருச்செங்கோடு தேரழகு
சங்ககிரி கோட்டை
யழகு'

என்ற சொல்வழக்கிற்கிணங்க, சங்ககிரி கோட்டையானது அழகோ அழகுதான். இது 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் ராணுவத் துருப்பாக திப்புசுல்தானுக்கும், அதன்பிறகு ஆங்கிலேயே அரசுக்கும் பயன்படுத்தப்பட்டது. கடைசியில் கொங்குநாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரிவசூல் மையம் (ஆங்கிலேயர் ஆட்சியில்) ஆனது.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குமிடையே குன்றுகள் நிறைந்த பகுதியில் சங்கு வடிவம் கொண்டு எழிலோங்கி நிற்கும் மலைதான் சங்ககிரி. நிலப்பரப்பிலிருந்து 1,500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2,345 அடி உயரமும் கொண்டது. இங்கு பல கோட்டை வாயில் அரண்மனைகளும், கொத்தளங்கள், குளங்கள், கிடங்குகளும் உள்ளன. மலையடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்லும் வழியில்-

உளிமுக வாசல், திட்டி வாசல், கடிகார வாசல், ரண மண்டல வாசல், புதுக்கோட்டை வாசல், ரோக்கல் திட்டி வாசல், பூவல் திட்டி வாசல், இடி விழுந்தான் குண்டுவாசல், வெள்ளைக்காரன் வாசல், மைசூர் வாயிற்கதவு (மைசூர் கேட்), மோர் திட்டி வாசல், மான் சுனை, ஆளிறங்கும் குழி, தோலுரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குளம், உருட்டிவிட்டான் பாறை, தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம்,

தி டாமன்ஸ் டேனியல் வரைவிடம்...

இவைதவிர கீழிருந்து மேலேவரும் வழியில், அடிவாரத்தில் வசந்த வல்லப ராஜப்பெருமாள், மலைமீது ஏறும்போது கோட்டை முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்ர சுவாமி, கோட்டை மாரியம்மன், வரதராஜப்பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் மண்டபம், சூரிய, சந்திர லிங்கங்கள், ஆஞ்சநேயர் கோவில், சென்ன கேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன.

மலையுச்சியிலிருந்து பார்த்தால் வடக்கே கஞ்சமலை, ஒருக்காமலை, சேர்வராயன் மலை, ஜருகுமலை, போதமலை; தென்கிழக்கே கோழிக்கால் நத்தம்குன்று, கொல்லிமலைத் தொடர்கள் அழகுறக் காட்சியளிக்கும். அடிவாரத்தில் வெப்பச்சலனம் அதிகமாக இருந்தாலும் மலையுச்சியில் சில்லென்ற காற்று நம்மை இதமாகக் கட்டித்தழுவுவது அதிசயம்தான்.

அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலம் பெற்று சிறந்துவிளங்கும். அதுபோல் சங்கரி
தவமிருந்த மலையின் அடிவாரத்தில் அஸ்திவாரம்போல் பாதுகாப்பாக, பலமாக அமைந்துள்ள ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயத்திற்கு வருவோம்.

விரைவில் குடமுழுக்கு விழா காணும் நிலையில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து பலிபீடம், தீபஸ்தம்பம், நந்தீஸ்வரரை தரிசித்ததும், உள்ளே இடப்புறம் கற்பக விநாயகர் சந்நிதி, வலப்புறம் நவகிரக சந்நிதியும் உள்ளன.உள் நுழைவாயிலைக் கடந்தவுடன் கிழக்கு நோக்கி மூலவர் ஸ்ரீ சோமேஸ்வரர், தெற்கு நோக்கி நடராஜர், சிவகாமியும் அருள்புரிகின்றனர். கோஷ்டத்தில் கணபதி, யோக தட்சிணாமூர்த்தியும், நிருதிமூலையில் க்ஷேத்திர கணபதியும் உள்ளனர்.

மூலவரின் பின்பகுதியில் லிங்கோத்பவர் உள்ள இடத்தில் சென்னகேசவப்பெருமாள் உள்ளார். பிரம்மா, சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கியபடி அம்பாள் சௌந்தரவல்லி நாயகி நின்றநிலையில் தனிச் சந்நிதி கொண்டு அருட்காட்சி தருகிறாள். வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் தனிச்சந்நிதியில் அருள்கிறார். அஷ்டபுஜ துர்க்கை வடக்கு நோக்கி அருள, பைரவர், சூரியன், சந்திரன் மேற்கு நோக்கி உள்ளனர்.

பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் நவகிரக மண்டலத்திலோ அல்லது தனிச்சந்நிதியிலோ தனித்து வீற்றிருப்பார். ஆனால் இங்கு தோஷங்களை அகற்றி சந்தோஷத்தைத் தரும் வகையில் தனது துணைவியார் நீலாதேவியுடன் ஸ்ரீசந்தோஷ சனி பகவான் என்ற திருநாமத்தில் அருள்புரிவது தனிச்சிறப்பு.

சிறப்பம்சங்கள்

 சங்ககிரி மலையை வானத்திலிருந்து செங்குத்தாகப் பார்த்தால் சங்கு போன்ற வடிவமும், பக்கவாட்டில் பார்த்தால் தேர்போன்ற வடிவமும் தெரியும்.

 நடுமலையில் முஸ்லிம்கள் தொழுகின்ற மசூதி (தர்க்கா) உள்ளது.

 தமிழகத்தின் உயரமான மலைக்கோட்டையான சங்ககிரியின் உச்சியிலுள்ள சென்னகேசவப்பெருமாள் கௌண்டன்ய மகரிஷிக்கு பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்த இடமாக அறியப்படுகிறது.

 கிருஷ்ண தேவராயரின் 8-ஆவது திருமணம் வரதராஜப்பெருமாள் கோவிலில் நடைபெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

 ஜூலை 31, 1805 அன்று மாவீரன் தீரன் சின்னமலை இங்குதான் தூக்கிலிடப்பட்டார் என்பது கோட்டையின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சியில் ஒன்று.

 மழைநீர் விழும் வண்ணம் பாறையில் சூரியலிங்கம், சந்திரலிங்கம் உள்ளது.

 மாரியம்மனுக்கு அடிவாரத்தில்தான் கோவில் இருக்கும். இங்கு மலைமீது கோட்டை மாரியம்மன் அருள்வதும் சிறப்பு.

 சங்ககிரி கோட்டைக்கும், மைசூர் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்தது.

 பலிபீடத்தின்மேல் பெரிய ஆலயமணி உள்ளது.

 திருவோணம், அஸ்தம், ரோகிணி நட்சத்திரங்கள், திங்கட்கிழமை மற்றும் 2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் திங்கட்கிழமையன்று சோமேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வில்வார்ச்சனை செய்தால் சந்திர பலம் கூடும். புகழுடன் வாழ்வர்.

 பூசம், அனுஷம், உத்திரட்டாதி மற்றும் சனிக்கிழமை, 8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள், தற்சமயம் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, சனி தசை, சனிபுக்தி நடப்பவர்கள் இங்குள்ள சந்தோஷ சனி பகவானுக்கு எட்டு சனிக்கிழமைகள் எட்டு தீபம் (நல்லெண்ணெய்) ஏற்றி அர்ச்சனை செய்துவந்தால், சொல்லொணாத் துயரங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும் என்பது உறுதி.

 சிவாலயத்திற்குரிய பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, வருடத்தில் ஆறு நடராஜர் அபிஷேகம், தமிழ் மாதப் பிறப்பு, பௌர்ணமி விழாக்கள் முறையாக நடக்கின்றன. வாராவாரம் சனிதோறும் சந்தோஷ சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடுகள் நடப்பது விசேஷமான ஒன்று.

 வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அஷ்டபுஜ துர்க்கைக்கு ராகு கால வழிபாடு உண்டு.

ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட தலமாம்- ஆரோக்கிய விருத்தியுடன் சகல செல்வத்தையும் தரவல்ல சௌந்தரவல்லி நாயகி உறைகின்ற தலமாம்- தன்னம்பிக்கை, தைரியத்தைத் தரவல்ல ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்கின்ற தலமாம்- எதிரிகளை உதிரியாக்குகின்ற தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாட்டை ஏற்கின்ற தலமாம்- சோமவார வழிபாட்டில் சந்திர பலத்தைத் தருகின்ற சோமேஸ்வரர் அருளும் தலமாம் சங்ககிரியைச் சரணடைவோம். மங்குசனியைப் பொங்குசனியாக்கி சங்கடங்களைத் தீர்க்கும் நீலாதேவி உடனுறை சந்தோஷ சனிபகவானை  சனிப்பெயர்ச்சி நாளில் வழிபடுவோம். தோஷங்களகற்றி சந்தோஷமாய் வாழ்வோம்.

19-12-2017 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.01 மணியளவில் சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியடைவதால், கீழ்க்கண்ட ராசி அன்பர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்திற்குப் பரிகாரம் செய்துகொள்வது உத்தமம்.

பரிகார ராசிகள்

ரிஷபம் - அஷ்டமச்சனி.

மிதுனம் - கண்டகச்சனி.

சிம்மம் - பஞ்சமசனி.

கன்னி - அர்த்தாஷ்டமச்சனி.

விருச்சிகம் - ஏழரைச்சனி (பாதச்சனி).

தனுசு - ஏழரைச்சனி (ஜென்மச்சனி).

மகரம் - ஏழரைச்சனி (விரயச்சனி).

மீனம் - ஜீவனச்சனி.

பரிகார விவரங்களுக்கு திருக்கோவில் அலுவலகம், ஆலய அர்ச்சகரை அணுகலாம்.

அஷ்டோத்ர அர்ச்சனை, திலசூர்ண அர்ச்சனை, அபிக்ஷேக அர்ச்சனை, சஹஸ்ரநாம அர்ச்சனை, கட்டளை அர்ச்சனை, சனிப்பெயர்ச்சி யாக அர்ச்சனை என வெகு விமரிசையாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற விழாவில் மெய்யன்பர்கள் கலந்துகொண்டு சோமேஸ்வரர், சனீஸ்வரர் அருளைப்பெறலாம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு

செந்தில்நாத சிவாச்சார்யார்,
செல்: 98427 41915,
ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில்,
அக்ரஹாரம், சங்ககிரி (அஞ்சல்),
சேலம் மாவட்டம்- 637 301.
கார்த்திகேய குருக்கள், செல்: 98427 09001.
விஸ்வநாதன் ஈ.ஓ., செல்: 97893 20500.

ஈரோடு- சேலம் நெடுஞ்சாலையில் ஈரோட்டிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

பஸ் வசதி நிறைய உண்டு. "சங்ககிரி துர்க்கம்' ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலயம்.

படங்கள்: போட்டோ கருணா


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :