Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17ஸ்ரீமடத்தின் அடுத்த யதிகளாகப் பொறுப்பேற்க வேங்கடநாதரைத் தான் தேர்ந்தெடுத்திருப்பதாக குரு சுதீந்திரர் சொல்ல, அதைக்கேட்ட வேங்கடநாதர் பேரதிர்ச்சியுற்றார்.

""ஸ்வாமி, தாங்களா என்னை... நானா... கூடாது... வேண்டாம்...'' என்று பேச்சு வாராது திணறலானார்.

""என்னப்பா, மாற்றத்தை வரவேற்றுப் பேசிவிட்டு, இப்போது ஏமாற்றத்தை எனக்களிக்கப் போகிறாயா. இதுதான் நீ குருமீது கொண்ட பக்தியா?''

""இல்லை குருவே, என்னால் இயலாது. இது நல்ல முடிவல்ல. தாங்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து.''

""நல்லதுதான். மாற்று முடிவெடுக்கும்படி  எனக்கு ஆணை பிறப்பிக்கிறாய். அப்படித்தானே... போதும். இந்த  வயோதினை நீ வஞ்சித்துவிட்டாயப்பா.''

""மன்னிக்க வேண்டும் குருவே. உங்கள் வயோதிகம் எப்படி போற்றத்தக்கதோ...

அதேபோன்று எனது இளங்குடும்பம் காப்பாற்றத்தக்கது. எனது மனைவிக்கு நான் துரோகம் செய்தவனாகிவிடுவேன். எனது குழந்தையை வஞ்சித்த பாவத்திற்கு ஆளாகிவிடுவேன்.''

""மகத்தான விஷயங்களின் பொருட்டு ஒருசில தியாகங்களுக்கு நாம்தான் முன்வரவேண்டுமப்பா. உனது குடும்பம் பற்றி உனது கவலை எனக்குப் புரிகிறது. மகனும் மனைவியும் மடத்தின் பொறுப்பு. அவர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவார்கள். மறுக்காதே வேங்கடநாதா.''

""மன்னிக்க வேண்டும் குருவே. தங்கள் கருத்தையும் கட்டளையையும் நான் மறுப்பதாக எண்ணக்கூடாது. கைத்தலம் பற்றிய மனைவிக்கு காலம் முழுக்க உடன் வருவதாக ஊரார் உற்றார் முன்னிலையில் வாக்களித்து மாங்கல்யம் அணிவித்தது இப்போது அதர்மமாக அல்லவா போய்விடும்?''

""இல்லையப்பா. எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட காலகட்டமுண்டு. இதுவரை நீ நல்லபடியாக இல்லற தர்மம் காத்தாய். அது முடிந்துவிட்டது. இனி துறவறமே உனக்கேற்றது. உலகம் உய்ய உன்னைப் போன்ற நல்ல ஞானவான்கள் காலத்தின் தேவை என்பதை நீ உணரவேண்டும்.''

""ஸ்வாமி, எனக்கும் என் மனைவிக்கும் இன்னும் இளவயதுதான் என்பது தாங்கள் அறியாததா? எனது மகனுக்கு இன்னும் உபநயனம்கூட ஆகவில்லை. அதற்காகத்தான் சரஸ்வதி இன்று தங்களிடம் அனுமதி கேட்கக்கூறி நான் வந்தேன் ஸ்வாமி.''""நான் சரஸ்வதியிடம் இதுபற்றிக் கூறி...''

""மன்னிக்க வேண்டும் குருவே. புவனகிரியிலிருந்து குடந்தைக்கு தங்களிடம் தஞ்சமடையச் செல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறிய அந்த அபலைக்கு தாங்கள் செய்கின்ற அருள் இதுதானா?''

""உண்மைதான். எனக்கு மனது வலிக்கிறது வேங்கடநாதா. இனி உன்னை வற்புறுத்த மாட்டேன்...'' என்ற யதிகள் தளர்ந்த நடையில் மெல்ல நடந்து உள் சென்றார். வேங்கடநாதரும் கனத்த மனத்துடனும், தாங்க இயலாத வேதனையுடனும் இல்லம் திரும்பினார்.

"நான் குருவின் பேச்சுக்கு மறுப்பு கூறியது அதர்மமா? இல்லறமே நல்லறம். ஜகம் ஏற்றுக்கொண்ட சிறந்த தர்மமன்றோ? தான் அதைவிட்டு சிறுதும் பிசகவில்லையே. அக்னி வலம் வந்து என்னைக் கணவனாக வரித்துக்கொண்ட பத்தினியையும், எங்களின் நல்லறத்தின் சாட்சியான லட்சுமி நாராயணனையும் நிராதரவாக்குவது மகாபாவமன்றோ. வயதான குருவை மிகுந்த வலிக்கு உட்படுத்திவிட்டேனோ... இருப்பினும் என் மனைவி, மகனை நான் எவ்வாறு பிரிய இயலும். என் சிறப்பிற்காக, எனது மேன்மைக்காக வீட்டு வேலைக்கும் அல்லவா சென்றிருக்கிறாள். குழந்தைக்கு ஒருபொழுது பால்கூட கொடுக்க இயலாத கையறு நிலையில்கூட பொறுப்பைத் தன் தோளில் சுமந்தவளை நான் நிராதரவாக எப்படி விடஇயலும்...

இதைக்கேட்டால் துடித்துப் போய்விடுவாளே.'

வீட்டிற்குச் சென்றவர் சொற்ப நேரம்கூட பேச ஒதுக்காது கண்மூடிப் படுத்துவிட்டார். கணவனின் முகவாட்டம் சரஸ்வதியை யோசிக்க வைத்தது. யதிகளிடம் என்ன பேசினார் என்பதைக்கூட தெரிவிக்காமல் படுத்துவிட்டவரைக் கண்டாள். அவரின் மூடிய விழிகள் சலனப்பட்டுக் கொண்டிருந்ததைத் தெரிந்துகொண்டாள்.

இப்போதைக்குப் பேச்சைத் தவிர்ப்பதற்காகவே கண்மூடிப் படுத்துவிட்டார் என்பதை யூகித்துக்கொண்டாள். குழந்தை லட்சுமி நாராயணனை அருகில் கிடத்திவிட்டு கூடத்திற்குச் சென்றாள்.

பிள்ளையின் பிஞ்சுக்கரம் தன்னிச்சையாக அவரது வெற்று மார்பில் பட்டது. அந்த ஸ்பரிசத்தால் அவரது தேகம் சிலிர்த்து அடங்கியது. மனதுள் ஏனோ துக்கம் பொங்கியது. இனம்தெரியாத வேதனை வயிற்றில் உருவாகி மேலெழும்பி தொண்டையடைத்தது. குழந்தையை வாஞ்சையாகத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டார். "இந்த சிசு என்ன பாவம் செய்தது. எனது மகனாகப் பிறந்ததைத் தவிர அது வேறேதும் பாவம் செய்யவில்லையே. குழந்தையினைப் பிரிந்து என்னால் இருக்க முடியாதே. எப்போது வெளியில் சென்று திரும்பினாலும் என்னைக் கண்டவுடன் ஓடோடி வந்து அப்பா என்று முகம் புதைப்பானே? இந்தப் பட்டுக்குழந்தையை விட்டு நான் பிரிவதா...' அவரது கரங்கள் அத்தளிர் சிசுவை இன்னும் சற்றே இறுக்கமாய் அணைத்தது.

பிரிவென்பது மரணத்தைவிடக் கொடியது.

பேச மறுக்கும், ஏற்க மறுக்கும், மறக்க மறுக்கும் பல விஷயங்களில் முதன்மையானது பிரிவே. பிரிவு ஒரு ரணம். நீங்காத வடு. அது எதிர்பார்த்தோ அல்லது நினைக்காதபொழுது திடீரென்று நிகழ்ந்துவிட்டாலோ அந்த அதிர்விலிருந்து மீண்டெழ பல காலமாகும். எப்போதெல்லாம் பிரிவு நினைவுகளில் இடறுகிறதோ, மனமும் அதனால் சில நொடி ஸ்தம்பித்துதான் போய்விடுகிறது. அதை அனுபவிக்காதவர்களும்கூட  பயப்படுகிற வார்த்தை பிரிவென்றால் அது மிகையில்லை.

வேங்கடநாதர் தெளிவடைய நீண்ட நாட்களாயிற்று. குரு சுதீந்திரரும் எவ்வித சலனமுமின்றி தனது அன்றாட அலுவல்களைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார். தீர்த்தப் பிரசாதமும் மந்திராட்சதையும் தருகின்ற தருணங்களில் மட்டும் குரு- சிஷ்யரின் நயன சந்திப்பு தவறாமல் நிகழ்ந்தது. எப்போதேனும் பரஸ்பர புன்னகையும் நிகழ்ந்தது. இருப்பினும் வேங்கடநாதருக்கு மனதுள் மெல்லிய பிசிறாய் துளி பயம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. திடீரென்று ஒரு நாள் மூலராமர் பூஜையினூடேயே ஸ்ரீசுதீந்திரர் மிகவும் தளர்ந்துவிட்டார். மூச்சுவிடுவது மிகவும் சிரமமாயிற்று. கைகள் நடுங்கின. கண்கள் சோர்வடைந்தன. "ராமா! ராமா! என்ன சோதனை இது. உனது பூஜையை நான் பங்கமின்றி முடிக்கவாவது சற்றேனும் பலம் கொடு' என அரற்றிக்கொண்டே சிரமப்பட்டு பூஜையை முடித்தார். மெல்ல மயக்கமுற்று பின்னால் தேகம் சரியவும், வேங்கடநாதரும் மற்றொரு மூத்த மாணவரும் சட்டென்று ஓடிச்சென்று தாங்கிக்கொள்ள, சுதீந்திரரின் பார்வை முதலில் வேங்கடநாதரையும் பிறகு மூத்த மாணவரையும் பார்த்தபடியே மயக்கத்தில் விழி மூடியது.

காற்றோட்டமான  இடத்தில் படுக்க வைக்கப்பட்ட யதிகளுக்கு ஈரமான வஸ்திரத்தினால் முகமும் உடலும் துடைக்கப்பட்டு, பனையோலை விசிறிகளால் விசிறப்பட்டு, அவருக்கு துளசி தீர்த்தம் தரப்பட்டது. அவர் மேலும் பலவீனமடைந்திருக்க, தேகத்திற்கு தெம்பு சேர்க்க மூலிகை கலந்த நீரருந்தச் செய்தனர். அவர் பார்வை படும் தொலைவில் வேங்கடநாதரும் அந்த மூத்த மாணவரும் அருகருகே நின்றுகொண்டிருக்க, யதிகள் அந்த மூத்த மாணவனை அருகழைத்தார். அவர் தன் வாய் பொத்தி குருவுக்கு சிரமம் ஏற்படாதிருக்க தனது செவியினை அவரருகே காண்பிக்க, ""அத்தியாவசியம் தெரிந்து சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீ மடத்துப்பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. அதன்பொருட்டு நீ சந்நியாசம் ஏற்க சம்மதிப்பாயா?'' என்றார் திணறலாய். சற்றே அதிர்ந்தவர் அடுத்த நொடிப்பொழுதே, ""சம்மதம் குருவே'' என்று சொல்லி நிமிர்ந்தார். அறை நிசப்தமாக இருந்ததனால் அவர்களின் சம்பாஷனை எல்லாருக்கும் தெளிவாகவே கேட்டது. சுதீந்திரரின் பார்வை வேங்கடநாதரிடம் செல்ல, அவர் மெல்ல தலைகவிழ்ந்தார்.

ஒரு நல்ல வளர்பிறையில் அந்த மூத்த மாணவர் அடுத்த யதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, "யாதவேந்திரர்' என நாமகரணம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. மடத்தின் பொறுப்பு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. படுத்த படுக்கையாகி பெருத்த சிரமத்துக்கு நடுவே இந்நிகழ்வினை குரு சுதீந்திரர் மேற்கொண்டார்.

அதற்கு வேங்கடநாதர் முன்னின்று குருவுக்குத் துணை நின்றார்.

மெல்லமெல்ல உடல் நலம் தேறி யதிகள் சற்று குணமடைந்தார். ஸ்ரீமடத்தின் நிர்வாகத்தை யாதவேந்திர தீர்த்தர் கவனித்து வந்தாலும், அவரும் குருவான  ஸ்ரீசுதீந்திரரைக் கலந்தாலோசித்த பிறகே அனைத்தும் செய்தார்.

தஞ்சை அரண்மனையிலிருந்து ராஜப்பிரதானிகள் வந்தனர். சிறந்த ராஜவைத்தியர் குரு சுதீந்திரருக்காக அழைத்து வரப்பட்டார். யதிகள் அந்த மருத்துவத்தை ஏற்க மறுத்தார். ஆனால் அனைவரும் அன்பாய் வலியுறுத்தவே- குறிப்பாக ஒருசில ஔஷதங்களை மடத்தவர்களால் பெற்றுக்கொள்ளச் செய்தார். ஆனால் எவ்வித மாற்றமுமின்றி எப்போதும்போலவே வேங்கடநாதரை முன்னுரிமை கொடுத்து பங்கெடுக்கச் செய்தார். உடல்நலம் மேலும்தேறி பூரணமாய் நடமாடத் தொடங்கிய யதிகளின் கூடவே வேங்கடநாதர் அதிகப்படி இருந்து பணிவிடை செய்தார். அக்கால சந்நியாச மரபுப்படி சந்நியாசிகள் சஞ்சாரம் செய்யவேண்டுமென்பது விதி. எனவே யாதவேந்திர தீர்த்தர் மூத்த யதிகளிடம் அனுமதி பெற்று தனது சஞ்சாரத்தை மேற்கொண்டார். பயண தூரத்தை வெகுதூரம் தீர்மானித்துக் கொண்டார்.

சரஸ்வதிக்கு வந்த செவிவழிச் செய்திப்படி தனது கணவரை யதிகள் சந்நியாசத்திற்கு வற்புறுத்தியது தெரிந்து மிகவும் பயத்துடனும் கலவரத்துடனும் இருந்தாள். புதிய தீர்த்தரை பீடத்திற்குத் தேர்ந்தெடுத்துவிட்டாலும் அவள் மனதுள் பயப்பந்து துள்ளிக்கொண்டுதான் இருந்தது. வேங்கடநாதரும் மனைவியிடம் இதுபற்றிச் சொல்லாதது வேறு அவளுக்கு பெரும் வருத்தமளிப்பதாக இருந்தது. இருப்பினும் குழந்தையுடனான அவரின் அன்பு மாறாது முன்பைவிட அதிகரித்து இருப்பதென்னவோ அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

மடத்தினுள் அனைத்து செயல்பாடுகளும் முன்பைப்போலவே இயல்பாக நகர்ந்தது.

உலக நன்மைக்காக, மக்களின் அறியாமையைப் போக்குவதற்காக மாத்வ மதத்தை நிறுவி, அதன்மூலம் வழிவழியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பீடாதிபதிகளில் சுதீந்திரர் பெரும்பேறு பெற்றவர். உலகம் போற்றும் ஸ்ரீராகவேந்திரரை நமக்குத் தந்தவர் அவர். அவர் தனக்கடுத்து ஸ்ரீராகவேந்திரரைத் தேர்ந்தெடுக்க மிகுந்த பிரயாசைப்பட்டு, அவரை சந்நியாசத்திற்கு சம்மதிக்க வைக்க பெரும்பாடு பட்டார் என்றால் அவரின் தொண்டு மகத்தானது. சில காலத்திற்குப் பிறகு ஸ்ரீசுதீந்திரரின் தேகநிலை மறுபடியும் சீர்குலைந்தது. ஒருநாள் நள்ளிரவில் அவருக்கு சுவாசம் தடைப்பட்டுத் தடைப்பட்டு, மூச்சு விடவும் பெறவும் பெருத்த சிரமப்பட்டார். "ஹே நாராயணா, இது நியாயமா? ஏனிப்படி என்னை சோதிக்கிறாய்? நூலில் ஆடும் பொம்மையாய் என்னை இப்படி ஆட்டுவிப்பதில் உனக்கு அப்படியென்ன ஆனந்தம்... பிரியமாய் உன்னைப் பூஜிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்தை நீ மறுபடியும் பறிக்கப் பார்க்கிறயா? சரி; இப்போது யாதவேந்திரரும் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆளனுப்பி தேடி வருவதற்குள் நான் இல்லாமல் போய்விடுவேனோ என்னவோ... தசரத மைந்தா, இதற்கொரு வழிகாட்டு பிரபு. என் கண்மணி ஸ்ரீராமா வழிகாட்டு' என்று துதித்துக்கொண்டே மெல்ல நித்திரையில் ஆழ்ந்தார்.

கனவில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பிரசன்னமானார். "பிரிய சுதீந்திரரே, கவலையை விடுவாயாக. உனக்கடுத்து பொறுப்புக்கு வரவேண்டிய சகல தகுதிகளையும் உடையவன் வேங்கடநாதன் மட்டுமே. எனவே நாளையே நீ அவனிடம் சந்நியாசம் பெற்று பீடத்தின் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி மறுபடியும் கூறுவாயாக.'

"பிரபோ! அவன் முடியாதென்று திடமாய் மறுத்துவிட்டானே?'

"நீ கவலையை விடுவாய். அவன் மானுடத்து மாயையில் இருக்கிறான். அந்த மாயையை அனுபவிக்க வேண்டுமென்பதே நியதி. நான் உட்பட அதற்கு விதிவிலக்கல்ல. அம்மாயையை அகலச்செய்ய சகல தெய்வச்செயல் அடுத்தடுத்து நிகழ்ந்துதான் அவன் பீடமேற்பான். அதற்கு நான் பொறுப்பு.  நீ நாளையே இப்பேச்சை மறுபடி ஆரம்பித்துவிடு.'

"தன்யனானேன் பிரபோ. நாளையே கேட்கிறேன். நாளையே கேட்கிறேன்' என்றவர் சட்டென்று கண்விழித்துக்கொண்டார். அறைமுழுக்க துளசி வாசம் வீசிற்று. அந்த வயோதிக யதிகள் வெகுவாய் மகிழ்ந்து போனார். கனவில் வந்தது இதிகாச ராமன்தான் என்ற நிஜம் அவர் மனதுக்கு இதமாய் இருந்தது. கைகூப்பி வணங்கினார். கண்களில் நீர்கசிய அவ்வுணர்வினில் ஒன்றிப்போனார்.

அதிகாலை வேங்கடநாதருக்கு யதிகளின் உடல்நிலை கூறப்பட்டு, யதிகள் அழைப்பதாக அவசரமாக வரவழைக்கப்பட்டார். சரஸ்வதி கலவரமானாள். அடுத்தென்ன நடக்குமோ என்ற நினைவில் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். அதில் நடுக்கமும் இருந்தது.

""வா வேங்கடநாதா. அருகில் வா.''

""ஸ்வாமி, தங்களுக்கு என்னவாயிற்று?'' படுத்திருந்த யதிகளின் பாதங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்ட வேங்கடநாதர், பின்னர் அவரின் கரங்களை இதமாய்ப் பற்றிக்கொண்டார். துக்கமும் அழுகையும் ஒருசேர, அந்த உணர்வை விவரிக்க முடியாதபடிக்கு இருந்தது.

""இந்தக் கிழவனைப் பார்த்து உனக்குப் பரிதாபம் தோன்றவில்லையா?''

""ஏன் ஸ்வாமி...''

""இல்லை... நான் உன்னிடம் தனியாகப் பேச வேண்டியுள்ளது.'' அறையில் இருந்தவர்கள் வெளியே சென்று நின்றுகொண்டனர். வேங்கடநாதருக்கு கன்னங்களில் நீர்வழிந்தது. தான் வலுக்கட்டாயப் படுத்தப்படுகிறோம் என்பது புரியத் தொடங்கியது. நடுங்கும் கரத்தை குரு சுதீந்திரர் சிரசில் கொடுத்து வருடினார்.

""வேங்கடநாதா. இப்போதாவது புரிந்துகொள். எனக்கு அந்திமம் நெருங்கிவிட்டது. யாதவேந்திரர் இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த குருமகா பீடத்திற்கு நீதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவசரம் மட்டுமல்ல; அவசியம் என்பதுதான் சத்தியமான உண்மையப்பா.''

""ஐயோ ஸ்வாமி... இந்த நிலையில் நான் உங்கள் மனதை காயப்படுத்திவிடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது. அந்த பாவத்தை நான் செய்யலாகாது என்று உள்மனம் சொல்கிறது. ஸ்ரீஹரி அந்த பக்குவத்தை எனக்கு அருளட்டும் குருவே.''

""அருளும் தகுதியும் உனக்கு மட்டுமே இருப்பதனால்தான் நான் உன்னிடம் கெஞ்சுகிறேனேப்பா.''
""பெரிய வார்த்தை சொல்கிறீர்களே.. நீங்கள் எனக்கு ஆணையல்லவா இடவேண்டும். ஆனாலும் என்னைத் தாங்கள் நிர்பந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.''

""நான் உன்னை நிர்பந்திக்கப் போவதில்லை வேங்கடநாதா. ஆனால் அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் ஆணையினை- அந்த இதிகாசமூர்த்தியின் ஆணையினை மறுத்துப் புறக்கணிப்பது நியாயமல்ல என்பது...''

""என்ன கூறினீர்கள். அந்த ஸ்ரீராமனின் ஆசியா... ஆணையா... எனக்கு விளங்கவில்லை.''

அவரின் கலங்கிய கண்களில் ஆச்சரியமும் முகத்தில் பிரகாசமும் கூடியது.

""ஆமப்பா. நீ நிரம்பவே ஆசிர்வதிக்கப்பட்டவன். உன்னை நினைத்து அவனிடம் இறைஞ்சினேன். அவன் இரங்கினான். உனக்கு அறிவுறுத்தப்படும் எனப் பகர்ந்தான். பின் நகர்ந்தான்.''

""எனக்கு விளங்கவில்லை ஸ்வாமி.''

""அந்த ஸ்ரீராமன் உன் மாயை விலக்கப்படும். பின் பிறரால் விளக்கப்படும் என்றான்.''

""உண்மையாகவா ஸ்வாமி.''

""ஆம் வேங்கடநாதா. ஸ்ரீமூலராமன் பரம பவித்திரத்துடன் நம் பூஜையினை ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதற்கு கனவில் அவன் சொன்னதே சிறந்த சாட்சியப்பா.''

""மன்னிக்க வேண்டும் குருவே. அதீதமான மன அழுத்தத்தில் தாங்கள் அதே எண்ணத்தில் இருந்தனால், தங்களின் எண்ணக்குவியலின் பிரம்மையாக அது இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.''

குருவிடமிருந்து பெருமூச்செழுந்தது. "ஹே ராமா, என்ன இந்த சோதனை. நீ வந்து போனது பிரம்மையா? வேங்கடநாதன் நம்ப மறுக்கிறானே... ஆ...!'

""வேங்கடநாதா, கோதண்டம் தாங்கி வந்தவன் கழுத்தில் கற்றையாக துளசி மாலை அணிந்திருந்தான். பார் பார்... இந்த அறை முழுக்கவே துளசியின் மணம். அதுவும் அவனை வேண்டி நான் கேட்ட இக்கணமே அம்மணம் பார்த்தாயா...''

ஆம்; உண்மையிலேயே நறுமணம் கமழ்ந்தது.

என்ன இது விந்தை! நொடிக்கு நொடி நறுமணம் அதிகமாகிக்கொண்டே போனது மட்டுமின்றி, அந்த நறுமணம் போர்வையாக அவ்விருவரையும் போர்த்தியது. அந்த நறுமணமே அவர்களை முகர்ந்தது. தன்னை இன்னும் திறந்தது. பின் படிப்படியாக நகர்ந்தது. வேங்கடநாதர் திக்பிரமை பிடித்து நின்றார். பின் மண்டியிட்டுத் தொழுதார். எழுந்து நின்று குருவின் பாதம் பணிந்தார்.

பின் அறையைவிட்டு மௌனமாய் வெளியேறினார். ஸ்ரீகள் அவரைத் தடுக்கவில்லை. போகட்டும் என்று அமைதி காத்தார்.

அவரின் உடலும் மனமும்கூட லேசாகிவிட்டது. வெளியில் நின்றவர்கள் உள்ளே வந்தனர்.

வேங்கடநாதர் இல்லம் செல்வதற்குள்ளாகவே சரஸ்வதிக்கு விஷயம் எட்டிவிட்டது. தளர்ந்த நடையில் வந்தமர்ந்த கணவரைக்கண்டு ஆற்றாமையில் பேசத் தொடங்கினாள்.

""தங்கள் குழந்தையும் நானும் என்ன பாவத்தை இழைத்துவிட்டோம். எங்களைக் கைவிடும் அளவுக்கு உங்களுக்கு நாங்கள் ஆகாதவர்களாகிவிட்டோமோ ஸ்வாமி?''

""அதற்குள் விஷயம் வந்துவிட்டதோ.''

""கேள்விக்கு பதிலில்லையே ஸ்வாமி.''

""இல்லை... இன்னும் தீர்மானமான முடிவில்லை சரஸ்வதி.''

""இது என்ன நியாயம்? மனைவி கேட்க உண்டு, இல்லை என்று ஏதேனும் ஒன்றைதான் பதில் தருவார்கள். தாங்கள் இரண்டும் இல்லாமல்...''

""அந்த ஏதேனும் ஒன்றில் எதை நான் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் தடுமாடுகிறேன் சரஸ்வதி.''

""ஸ்வாமி, இது தங்களுக்கே நியாயமா. மெத்த வேதம் கற்றுணர்ந்த ஞானி என்று தங்களை சிலாகிப்பது இப்படி அறம் மீறத்தானா?''

""நான் எந்த அறமும் மீறவில்லையே சரஸ்வதி.''

""இல்லறமே நல்லறம். அதுவே முதன்மையான தர்மம் என்பது தங்களுக்குத் தெரியாததா. தங்களின் குரு தடம் மாறி போதித்தாரா?''

""குருவைப் பற்றித் தவறுதலாகப் பேசலாகாது சரஸ்வதி.''

""கட்டிய மனைவியைக் கைவிட்டு, குழந்தையையும் நிராதரவாக்கு என்று வேதத்தில் ஏதேனும் மேற்கோள் காட்டினாரா ஸ்வாமி? அவர் பூஜிக்கும் ஸ்ரீராமனும் நிறைமாத கர்ப்பிணியான மனைவியைக் காட்டில் நிராதரவாக விட்டவர்தானே.

அந்த ராமனைதான் உங்களுக்கு மூச்சுக்கு மூவாயிரம் முறையேனும் உதாரணம் காட்டுபவர்தானே. கடவுளேயானாலும் கணவன் என்ற தர்மத்திலிருந்து நழுவியவர்தானே ராமன். எனக்கினி அந்த ராமனும் வேண்டாம்; உங்கள் குருவும் வேண்டாம். நானே போய் அந்த கிழவரிடம் இதுபற்றிக் கேட்காமல் விடப்போவதில்லை. இரண்டில் ஒன்று...'' என்று தொடர்ந்து பேசியவள், ஆற்றாமையால் அடுத்து தொடர முடியாமல் கேவி கேவிக் அழ ஆரம்பித்தாள். குழந்தை லட்சுமி நாராயணனும் அழுதான். அக்கம்பக்கத்து தலைகள் வாசலருதே நிழலாட, வேங்கடநாதர் உள்ளுக்குள் மௌனமாக நடந்தார்.

""இப்படி அமைதியாயிருந்து சாதிக்கலாம் என்று எண்ணம் கொண்டிருந்தீர்கள் என்றால், என் மூச்சு நின்றபின் வேண்டுமானால் நடக்கும். வாருங்கள் போவோம்'' என்றாள்.

""எங்கு...''

""உங்கள் குருவிடம் நியாயம் கேட்க..''

""பொறு. எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. நல்லதுதான் நடக்கும்.

எந்த பதட்டமும் வேண்டாம்.

அமைதியாக இரு. சட்டென்று அபிப்ராயங்களையும் முடிவுகளையும் மாற்றிக்கொண்டேயிருந்தால் அது அபத்தமாகத்தான் முடியும்.''

""அபத்தமாகவே இருக்கட்டும். வேதம் வேதம் என்று கூறினீர்கள். அந்த வேதம்கூட அபத்தம்தான். என்னை அமைதியாயிருக்கச் சொல்லி நீங்கள் உள்ளுக்குள் விபரீதமான முடிவெடுத்துவிட்டீர்கள். நினைக்கவே உடல் பதறுகின்றது. இங்குள்ளவர்கள் உங்களை மேதாவிலாசம் என்றார்களே... குடும்பத்தை நிர்கதியாக்குவதுதான் மேதாவிலாசமோ?''

""போதும் சரஸ்வதி. நீயா இப்படியெல்லாம் பேசுகிறாய். தடாகத்தின் நீரைப்போல சலனமின்றி தெளிவாய் அமைதியாய் இருந்த நீ, கடல் அலைபோன்று சீற்றம் கொள்வது தகுமா? அமைதியாக இரு.''

""இதற்குமேலாக என்னால் அமைதியாக இருக்கமுடியாது.''

""அப்படியா... எப்போது எனது வித்யா தன்மையும், கற்றுணர்ந்த வேதமும், நானியற்றிய நூல்களும் உன் விமர்சனத்துக்குட்பட்டு விட்டதோ, அப்போதே என் மனமும் உடைந்துவிட்டது. இதோ... இதோ... இந்த நூல்கள் அனைத்தையும் வீசியெறிந்து ஜலசமாதியாக்கிவிடுகிறேன்'' என்றவர், பட்டுத் துணியில் சுற்றிவைத்திருந்த- தான் ஓலைச்சுவடிகளில் வடித்திருந்த நூல்களை ஆவேசமாய் கையிலெடுத்து இல்லம்விட்டு வெளியேறினார்.

அவரது வேகநடை கண்டு சரஸ்வதிக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :