Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17"அடிப்படையில் அவர் இந்த மக்களின் அன்னை. (லோகமாதா). ஒரு குடும்பத்தைத் தாண்டி நாடு முழுவதையுமே தழுவிக்கொண்ட இதுபோன்ற ஓர் அன்னை வடிவத்தை நாம் இதுவரை பார்த்தது கிடையாது' என வங்கக் குயிலான மகாகவி ரவீந்திரநாத் தாகூரும், "பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் காட்டி பகவான் அவனை ஆட்கொண்டதைப் போன்று, எனக்கு பாரத மாதாவின் விஸ்வரூபத்தைக் காட்டி என்னை ஆட்கொண்டவர் சகோதரி' என தமிழகக் குயிலான மகாகவி சுப்ரமணிய பாரதியும் புகழும் வண்ணம் வாழ்ந்தவர்தான் சகோதரி நிவேதிதை (1867-1911) என்னும் மார்கரெட் எலிசபெத் நோபிள்.  (Margaret Elizabeth Noble).  வடக்கு அயர்லாந்து நாட்டில் பிறந்த கத்தோலிக்க கிறிஸ்துவப் பெண்மணி.

"அருளுக்கு நிவேதனமாய்
அன்பினுக்கோர்
கோவிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்
பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்'

என தனது குருமணியான சகோதரி நிவேதிதையைப் போற்றி மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஞானசூரியனான சுவாமி விவேகானந்தரால் பிரம்மச்சரிய தீட்சை பெற்ற மேற்கத்திய சீமாட்டியான மார்கரெட், இந்து மதத்தின் தத்துவத்தையும், சிறப்பையும், புராண இதிகாசங்களையும், கதைகளையும் அவர்மூலம் கேட்டறிந்து பாரதப் பண்பாட்டையும் இந்துமதச் சடங்கு, சம்பிரதாயங்களையும் மதிக்கத் தொடங்கினார்.

ஆன்மிகத்தின் உயர்ந்த நிலையான துறவு நிலையில் இருந்துகொண்டே தியாகச்சுடராகவும், கல்வியாளராகவும், தேசப்பற்று சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கிய சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த ஆண்டை இந்தியர்கள் தற்சமயம் நன்றியுணர்வுடன் கொண்டாடி வருகிறார்கள். பாரத நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து பல அல்லல்கள் பெற்ற நிலையில் அதைத் தான் அன்றாடம் வழிபடும் காளிதேவியின் தெய்வீக சக்தியாலும், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரிடம் வைத்திருந்த குரு பக்தியாலும் தன்னிலை மாறாமல், கொண்ட கொள்கைகளில்  உறுதி, எடுத்த காரியத்தில் மன தைரியம், எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை கொண்டு வெற்றி பெற்ற திருமகள் ஆவார்.

புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பாடிய, "யாதும் ஊரே யாவரும் கேளிர்'  என்னும் உயர்ந்த பண்பாட்டின் அடிப்படையில், வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தனது குருவின் உத்தரவுக்கிணங்க இந்தியப் பண்பாட்டை மதித்து, "உலகம் ஒன்று; உலகிலுள்ள ஊர்களனைத்தும் தம்முடைய சொந்த ஊர்' என்கிற பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்தார்.அயர்லாந்து நாட்டில் கிறிஸ்துவப் பாதிரியாராக ஊழியம் செய்துகொண்டிருந்த சாமுவேல் ரிச்மண்ட் நோபிள் (Samuel Richmond Noble)- மேரி இசபெல் நோபிள்(Mary Isabel Noble) தம்பதியர்க்கு மகளாக, 28-10-1867-ல் டங்கானன் (Dunganon) நகரில் மார்கரெட் பிறந்தார். தனது பத்தாவது வயதில் தந்தையை இழந்த மார்கரெட், விம்பிள்டன் நகரிலுள்ள பள்ளியில் 17 வயதில் படிப்பை முடித்தார். "மனித குலத்திற்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு நிகர்' என்னும் தத்துவத்தை தனது மகளுக்கு சாமுவேல் நோபிள் அடிக்கடி உபதேசித்தார். இந்த உபதேசமே மார்கரெட் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

படிப்பை முடித்த பின்னர் 1884 முதல் 1894 வரை பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டே சமூக சேவைகளில் முழுமனதுடன் ஈடுபட்டார். மேற்கத்திய மதத் தத்துவம், பொருளாதாரம், அரசியல், கல்வி, சமூக சீர்திருத்தம் போன்ற பல்வேறு அம்சங்களில் புலமை பெற்றிருந்த போதிலும், மார்கரெட்டுக்கு இளம்வயதிலேயே ஆன்மிக தாகமும், இறைவனை உணரும் சிந்தனையில் உலக விஷயங்களில் பற்றற்றவராகவும் வாழ்ந்தார்.

இதற்கிடையில் 1895-ஆம்ஆண்டு நவம்பர் மாதத்தில் லண்டன் நகரில் வசித்த இசபெல் மார்க்கெசன் என்பவரின் இல்லத்திற்கு வருகை தந்த சுவாமி விவேகானந்தரை முதன்முதலில் தரிசனம் செய்தார். அன்று அவரது போதனையைக் கேட்ட பின்னர் இந்துமதத்தின்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஆன்ம அனுபூதியை நாடி இந்து மதத்தின் வேதாந்த நூல்களை விரும்பிப் படிக்க ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷனின் சேவைகளைப் பற்றியும், ராமகிருஷ்ண பரமஹம்சர்- சாரதா தேவி, விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றியும் கேட்டறிந்தார். தனது ஆசிரியைப் பணியை உதறிவிட்டு 1898-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி சென்னை வழியாக கல்கத்தா மாநகருக்கு வருகை தந்தார்.

கல்கத்தா காளிதேவியை முதன்முதலில் தரிசனம் செய்தபோது, மார்கரெட் தனது உடலில் ஓர் ஆன்மிக அதிர்வலை ஏற்பட்டதை உணர்ந்தார். அதே ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ராமகிருஷ்ணரின் துணைவியார் அன்னை சாரதா தேவியை முதன்முதலில் சந்தித்தார். இந்த சந்திப்பைப் பற்றி மார்கரெட் பின்னாளில் குறிப்பிடுகையில், "அன்னையை தரிசனம் செய்த நாள் என் வாழ்வில் மகத்தான நாள்' என பெருமிதத்துடன் கூறியுள்ளார். அவருடனே தங்கியிருந்து அன்னை சாரதா தேவிக்குப் பணிவிடை செய்தார்.

அப்பொழுது அவர்மூலம் இந்துமதத்தின் சடங்கு, சம்பிரதாயங்களைக் கேட்டறிந்தார்.

அதுமட்டுமின்றி ஜெபம், தியானம், பிரார்த்தனை ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அன்னை சாரதாதேவி, மார்கரெட்டை எப்பொழுதும் "குக்கி' (செல்ல மகள்) என அன்புடன் அழைப்பார்.

1898-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் மார்கரெட்டுக்கு பிரம்மச்சரிய தீட்சையளிக்கும்போது, "இந்தியாவின் உதாரணத்திற்காக வந்திருக்கும் நீ ஞானத்தைப் பெறுவதற்கு முன்பாக ஐந்நூறுமுறை பிறந்து உலகிற்கு சேவை செய்த பகவான் புத்தபிரானைப் பின்பற்றுவாயாக' என வாழ்த்தி தீட்சையளித்துவிட்டு, நிவேதிதை (அர்ப்பணிக்கப்பட்டவள்) என்னும் யோகப் பெயரைச் சூட்டினார். அதன்பின் முறையாக ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்து ஆன்மிகப் பணியையும், சமூகப் பணியையும் செய்யத் தொடங்கினார்.இந்தியாவில் முன்பு பெண்கள் கல்வி கற்காமல் இருந்த காலகட்டத்தில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்த சகோதரி நிவேதிதை 1898-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியை அன்னை சாரதா தேவியைக் கொண்டு திறக்கச் செய்தார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு இப்பள்ளியைத் தொடங்கினார். பின்னர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து பள்ளிக்கான நிதியை சேகரித்தார். தொழிற்கல்விக்கு மிகவும் முக்கியத்துவமளிக்கும் வகையில் பாடத்திட்டங்களை சகோதரி நிவேதிதை தீட்டினார்.

இளம் விதவைகள் மற்றும் திருமணமான பெண்களின் முன்னேற்றத்திற்காக "புரஸ்த்ரீ விபாக்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் பல பெண்கள் சேர்ந்து பயனடைந்தார்கள். கிழக்கு வங்காளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், கல்கத்தாவில் பிளேக் நோய் பரவி பலர் பாதிக்கப்பட்டபோதும் சகோதரி நிவேதிதை சிறப்புற களப்பணி ஆற்றினார்.

கர்மயோகி சுவாமி விவேகானந்தர் மூலம் தியானப்பயிற்சிப் பெற்ற இவர், அடிக்கடி ஆழ்நிலை  தியானத்தில் ஈடுபடுவதுண்டு. "தியானம் முதிரும் போதுதான் சமாதிநிலை ஏற்படுகிறது' என பதஞ்சலி முனிவர் கூறியதுபோல் சமாதிநிலையில் திளைத்திருப்பார். கண்மூடித்தனமாக மேலை நாட்டுக் கலாச்சாரத்தை விரும்பிய மக்களிடம் பாரதப் பண்பாட்டை எடுத்துரைக்கும் வண்ணம் கட்டுரைகளை எழுதியும், சொற்பொழிவாற்றியும் நல்வழிப்படுத்தத் தூண்டினார். இந்தியர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்.

"யுகாந்தர்', "வந்தே மாதரம்' போன்ற பத்திரிகைகளை 1906-ஆம் ஆண்டு தொடங்கினார். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்' பாடலை தனது பள்ளியில் தினமும் குழந்தைகளைப் பாடச் சொன்னார்.

தாவரவியல் விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தர் ஆகியோரிடம் நாட்டின் விடுதலையைப் பற்றியும், ஆன்மிக விஷயங்களைப் பற்றியும் அடிக்கடி விவாதிப்பார். 1906-ஆம் ஆண்டு சுப்ரமணிய பாரதியை சந்தித்தார். சகோதரி நிவேதிதையின் தேசபக்தி, பாரதியை மிகவும் கவர்ந்தது.

டார்ஜிலிங்கில் உள்ள "ராய் வில்லா' என்னும் பாரம்பரிய கட்டடத்தில் தனது கடைசிக் காலத்தைக் கழித்தார். 1911-ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இந்து முறைப்படி நடந்தன. "பாரதத்திற்காகத் தன்னுடைய அனைத்தையும் அளித்த சகோதரி நிவேதிதை இங்கு உறைகிறார்' என அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் விம்பிள்டன் நகரில் மார்கரெட் (சகோதரி நிவேதிதை) வாழ்ந்த இல்லத்திற்கு  நீலப்பட்டய உயரிய சிறப்பை பிரிட்டிஷ் அரசு அளித்து கௌரவித்தது.

அதேபோன்று இந்திய அரசாங்கம் சகோதரி நிவேதிதையின் படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட சகோதரி நிவேதிதையின் தூய தொண்டுகளைப் போற்றுவோம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :