Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஓம்
சனியின் துயர் தணிக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
டிசம்பர் மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதியும் முருகனே!
 ................................................................
பிரம்மிப்பூட்டும் அவதாரம்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
பார்வைகள் பலவிதம்!
 ................................................................
சிவஜோதி தரிசனம்!
 ................................................................
தவயோகத் திருவிழா!
 ................................................................
டிசம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
மங்குசனியை பொங்கு சனியாக்கும் சங்ககிரி
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
அர்ப்பணிப்பின் அன்னை!
 ................................................................
அஞ்சனை மைந்தனின் அவதாரம்
 ................................................................
01-12-17


அனுமன் ஜெயந்தி- 17-12-2017

மார்கழி மைந்தன், வாயு புத்திரன், மாருதி, சுந்தரன், அனுமன் என பல பெயர்கள் பெற்ற அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சனேயர் அன்னையின் வயிற்றில் இருக்கும்போதே பேசியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கௌதம முனிவருக்கும் அகலிகைக்கும் பிறந்தவள் அஞ்சனாதேவி. இவளை கேசரி என்ற வானரவீரனுக்கு மணம் செய்து வைத்தனர்.

இல்லறம் இனிதே கழிந்தது.

ஆனால் பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் வாய்க்காததால் கவலையுற்ற அஞ்சனாதேவி, "பராக்கிரமசாலியான மைந்தன் வேண்டும்' என்று வேண்டி கடும் தவத்தில் ஆழ்ந்தாள். தவத்தின் பயனாகவும், வாயுதேவனின் அருளாலும் அஞ்சனாதேவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. (அஞ்சனாதேவி குறித்துப் புராணங்களில் பல தகவல்கள் உண்டு.)அஞ்சனாதேவியின் கர்ப்பத்தில் அழகிய முகத்துடனும், நீண்ட வாலுடனும் ருத்ராம்சம் பொருந்திய குழந்தை உருவாகியிருந்தது.

இந்த நிலையில் ஒருநாள், பிரசவ வலியில் துடித்தாள் அஞ்சனாதேவி.

இதையறிந்த வாயுதேவன் மும்மூர்த்திகளையும் பிரார்த்தித்தான். அதற்கிசைந்து அங்கு வந்த மும்மூர்த்திகள், அஞ்சனாதேவிக்கு சுகப்பிரசவம் நடந்தேற விஸ்வகர்மாவே ஏற்றவர் என்பதையறிந்து, அவரை அழைத்து விவரம் தெரிவித்தனர்.

தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா, மனோவசியம் மற்றும் மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்கின்றன புராணங்கள்.

விஸ்வகர்மா அஞ்சனையின் வயிற்றிலிருந்த குழந்தையிடம், ""குழந்தாய், உன் தாயின் கர்ப்பத்தில் இன்னும் ஏன் சிறைப்பட்டிருக்கிறாய்? பராக்கிரமனாகத் திகழப்போகும் நீ, இந்த உலகுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. ஆகவே, தாயாருக்குத் துன்பம் தராமல் வெளியே வா'' என்று அன்புடன் சொன்னார்.

இதைக்கேட்ட கருவிலிருந்த குழந்தை, ""தேவலோக சிற்பியே! நான் ஆடையின்றி இருக்கிறேன். மேலும், பருமனான என் உடல் வெளியே வரத் தடையாக உள்ளது. எனவே, என் உடலை சிறுகச் செய்து, என் அன்னைக்கு சிறிதும் துன்பம் நேராமல் நான் வெளியேற அருளவேண்டும். எனக்கு பொற்கோவணம், பொன் பூணூல், குண்டலம் ஆகியவற்றையும் வழங்கி உதவுங்கள்'' என்றது. அதன்படியே செய்தார் விஸ்வகர்மா. அவரது மனோவசியக் கலையால் அஞ்சனைக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது. சுபவேளையில் அஞ்சனைக்குப் பிறந்த அந்தக் குழந்தையே ஆஞ்சனேயர் என்கிறது புராணம்.

ஆஞ்சனேயர் அவதாரம் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன.

தமிழகத்தில் மார்கழிமாத அமாவாசையன்று மூல நட்சத்திர நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் சில மாநிலங்களில் வேறு மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதப் பௌர்ணமியன்று அனுமனின் பெற்றோரான கேசரியும், அஞ்சனையும் மலை உச்சியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் பிரம்மதேவனின் கட்டளைப்படி வாயுதேவன், அஞ்சனைக்கு புத்திரன் பிறப்பதற்கு அருள்புரிந்தார் என்பதால், வாயுவின் அவதாரமாக அனுமன் தோன்றினார் என்றும் புராணம் கூறுகிறது. இந்தக் கூற்றின்படி அனுமன் தோன்றிய நாள் சித்திரைப் பௌர்ணமி. ஆந்திர மாநிலத்தில் இந்த நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வடநாட்டில் வைகாசிப் பௌர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு வடகிழக்கே சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கும்லா டவுனிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது அஞ்சன் கிராமம். இங்கு அஞ்சனாதேவி தவமியற்றியதாகச் சொல்லப்படும் குகை உள்ளது.

அது தற்போது கோவிலாக மாறியிருக்கிறது. இத்திருக்கோவிலில் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அனுமனை தரிசிக்கலாம். இங்குதான் அஞ்சனை அனுமனைப் பெற்றாள் என்பது புராணச் செய்தி. அந்த நாள் வைகாசிப் பௌர்ணமியாகும்.

ஜார்க்கண்ட் தலைநகரில் வைகாசிப் பௌர்ணமியில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மேலும், லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்னும் இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசிப் பௌர்ணமியன்று விசேஷமாக வழிபடுவர். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் தலத்திலுள்ள அனுமன் கோவில் வரை, ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கியபடி சென்று வழிபடுவார்கள். முதலில் கைகளை நீட்டி வணங்கியபோது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு எழுந்து, அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்த வணக்கத்தைச் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து செய்து கோவிலை அடைவார்கள். இதற்கு சயனதபஸ் என்று பெயர்.

பீகார் மாநிலத்திலும் வைகாசிப் பௌர்ணமியில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அன்னை அஞ்சனாதேவியுடன் அனுமன் குழந்தைவடிவில் அருள்புரியும் கோவில்களும் உள்ளன.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் ஒன்றான நாசிக் திரயம்பகேஷ்வர் ஆலயத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அஞ்சநேரிமலை. இதுவும் ஓர் அவதாரத்தலமாகப் போற்றப்படுகிறது. இங்கும் ஒரு குகையில் அஞ்சனையும் குழந்தை அனுமனும் அருள்புரிகிறார்கள். மேலும், அங்கு அவர்களுக்கு இன்னொரு தனிக்கோவிலும் உள்ளது. தாயின்மடியில் அனுமன் அமர்ந்திருக்கும் காட்சியையும் தரிசிக்கலாம்.

கர்நாடக மாநிலம், ஹாஸ்பெட் அருகே, ஹம்பி என்ற இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், துங்கபத்ரா நதியின் வடகரையோரத்தில் உள்ள ஆஞ்சனேயர் மலையில் ஓர் அனுமன் கோவில் உள்ளது. இங்கும் அஞ்சனாதேவி, அனுமன் இருவரையும் குகைபோன்ற கோவிலில் தரிசிக்கலாம். மேலும், துங்கபத்ரா கரையோரம் கோகர்ணம் உள்ளிட்ட சில இடங்களையும் அனுமன் அவதாரத்தலமாகச் சொல்கிறார்கள்.

ஆஞ்சனேயரின் அவதாரத்தலங்கள் பல சொல்லப்படுவதுபோல அவரது திருக்கோலங்களும் பல உள்ளன.

திருச்சி- கல்லுக்குழி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் சுமார் ஓரடி உயரத்தில் உள்ளார். இடதுபாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும், இடக்கையில் பாரிஜாத மலரும், வலக்கையை அபய ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகிறார். இவர் ரயிலில் வந்தவர். சில காலம் நடைமேடையில் அருள்புரிந்தார். ஆங்கிலேயர் காலத்தில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக இவரை அகற்ற முயன்றபோது, தலைமையேற்ற அதிகாரிக்கு பல துன்பங்கள் நேர்ந்ததாம். எனவே ஆஞ்சனேயரை வேண்டிக்கொண்டு, ரயில் நிலையத் தெற்குப் பகுதியில் பெரிதாகக் கோவில் கட்டினார்கள். அதற்குப்பின் துயரங்கள் தீர்ந்தன. இவரை கல்லுக்குழி ரயில் ஆஞ்சனேயர் என்று போற்றுவர்.

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை சீனிவாசப்பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சனேயர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் உள்ளார். அவருக்கு வலப்புறத்தில் இன்னொரு ஆஞ்சனேயர் வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.

திருப்பத்தூரில் சுந்தரவீர ஆஞ்சனேயர் கோவிலில் மூன்றடி உயரமே இருந்த ஆஞ்சனேயர் தற்போது ஆறடி உயரத்தில் வளர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடியிலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் உள்ள திருத்தலம் தெய்வச்செயல்புரம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சனேயர் கோவிலில் ஐந்தடி உயரத்தில் சாளக்கிராமக்கல் மேனியாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மேலும், இங்கு திறந்தவெளியில் 77 அடி உயர ஆஞ்சனேயரும் காட்சி தருகிறார்.

கோவை தாராபுரத்திலுள்ள கோவிலில் எட்டடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார் ஆஞ்சனேயர். இவரது வால் வலக்கரத்தின் வழியாக சிரசைச் சுற்றி இடக்கரத்தில் முடிகிறது. வால்நுனியில் மூன்றுமணிகள் உள்ளன.

ஈரோடு ஸ்ரீகாடு அனுமந்தராய சுவாமி கோவிலில் சுமார் ஏழடி உயரம், மூன்றடி அகலத்துடன் காட்சி தரும் ஸ்ரீஆஞ்சனேயரின் இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்பின் வலப்புறத்தில் கத்தியுடனும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலையுடனும் காட்சி தரும் இவரின் வலக்கை அபயஹஸ்தமாகவும், இடக்கை சௌகந்திகா மலர் ஏந்தியும், முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின்புறத்தில் பட்டாக்கத்தியும் உள்ளது. சங்கு, சக்கரமும் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் சுமார் 29 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அழியாநிலை எனும் கிராமத்திலுள்ள கோவிலில் சுமார் 12 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு மேற்கூரை இல்லை. மேலும், இந்தக் கோவிலில் சுமார் 33 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயரும் எழுந்தருளியுள்ளார்.

நாமக்கல் திருத்தலத்தில் அருள்புரியும் அனுமனின் உயரம் சுமார் 18 அடி. கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன், மேற்கூரையின்றி எழுந்தருளியுள்ளார். இவர் வளர்ந்துகொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் 22 அடி உயரத்தில் நின்ற நிலையில் அருள்புரியும் ஆஞ்சனேயரின் வாலின் நுனிப்பகுதி தலைக்குமேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், இவரை வழிபட செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

ஆந்திர மாநிலம் பால நாராயண சுவாமி ஆலயத்தில், தசாவதார சந்நிதி எதிரில் 25 அடி உயரம், பத்தடி அகலம்கொண்டு திகழ்கிறார் ஆஞ்சனேயர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மகாரண்யம் ஜெய அனுமன் கோவிலில் 24 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் யோகநிலையில் காட்சி தருகிறார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஞானபுரி தலத்தில் 32 அடி உயரத்தில் காட்சி தரும் ஸ்ரீஆஞ்சனேயரை "சங்கடஹர ஆஞ்சனேயர்' என்று போற்றுவர்.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி ஹில்வியூ ஸ்டேடியத்தின் அருகிலுள்ள மலையின்மீது, சஞ்சீவி மலையினைத் தனது இடக்கரத்தில் தாங்கியபடி நிற்கும் விஸ்வரூப ஆஞ்சனேயரின் உயரம் 63 அடி. இந்த ஸ்ரீஆஞ்சனேயர் திருமேனி காங்கிரீட்டால் உருவானது என்று கூறப்படுகிறது. இந்தத் திருமேனி எப்படி அமையவேண்டும் என்று கூறியவர் புட்டபர்த்தி சாய்பாபா. இந்த ஆஞ்சனேயரின் கையிலுள்ள சஞ்சீவிமலை மட்டும் 300 டன்னுக்கும்மேல் எடையுள்ளது. சிலையின் மொத்த எடை 750 டன் ஆகும்.

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தலமான சிம்லா நகரில், ஜக்கு மலைப்பகுதியில் உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் சஞ்சீவிமலையை அனுமன் தூக்கிவந்த பின்னர் ஜக்குமலையில்தான் ஓய்வெடுத்தாராம். அதன் நினைவாக ஒரு கோவில் அமைக்கப்பட்டது. இந்தக் கோவில் அருகில்தான் வலது கையில் கதாயுதத்துடன் நின்ற கோலத்தில், 108 அடி உயரமுள்ள அனுமன் திறந்த வெளியில் காட்சி தருகிறார்.

ஒரு அடியிலிருந்து 108 அடி வரை உயரமுள்ள அனுமன் பல திருத்தலங்களில் அருள்புரிவதைக் கண்டோம். விஸ்வரூபம் எடுக்கும் சக்தி கொண்ட அனுமன் வானில் நினைத்த மாத்திரத்தில் பறந்துசெல்லும் ஆற்றல் படைத்தவர். இதற்குக் காரணம் அவரது நீண்டவாலிலுள்ள சக்திதான் என்கிறது புராணம். இந்த வாலினை இயக்குவதற்கென்றே அனுமனின் மூளை தனித்திறனைப் பெற்றிருப்பதாகவும், வானில் பறக்கும்போது இவரது வால், கடலில் படகு செல்லும்போது துடுப்பு போடுவதுபோல் இயங்கும் சக்தி கொண்டது என்றும் கூறப்படுகிறது. வாலில் அதிக பலம்கொண்ட அனுமனை வழிபடும்போது, அவரது வாலினைக் கூர்ந்து பார்த்து தனிகவனம் செலுத்தி வழிபட, நம் உடல் வளம் பெறும். நினைத்த காரியம் வெற்றி பெறும். அதனால்தான் வால் இருக்கும் இடத்திலிருந்து சந்தனம், குங்குமம் சாற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்குமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த வழிபாட்டினை வீட்டில் அனுமன் படத்திற்கு மேற்கொள்ளலாம் என்பர்.

"ஓம் நமோ பகவதே
ஹனுமதே மம மதந க்ஷோபம்
ஸம்ஹர ஸம்ஹர ஆத்மதத்வம்
ப்ரகாஸய ப்ரகாஸய ஹும் பட் ஸ்வாஹா!

என்னும் அனுமன் துதியை தினமும் பாராயணம் செய்து, அனுமன் திருவுருவப் படத்திற்கு வெண்ணை சமர்ப்பித்து வாலில் சந்தனம், குங்குமம் இட்டு, வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபட அனைத்து பாக்கியங்களும் கிட்டும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :