Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Logo
இனிய உதயம்
வசீகரப் பாடல் தந்த வல்லபன்!
 ................................................................
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே!
 ................................................................
மு.வ.வின் கடித இலக்கியம்
 ................................................................
சந்திரிகாவின் மாவீரர் நாள் சிறப்புக் கவிதை!
 ................................................................
அகராதி கவிதைகள்
 ................................................................
கருத்துச் சுதந்திரம் எங்கே?
 ................................................................
01-11-2017மிழ்த் திரையிசைப் பாடல்களின் இன்றைய தரம் குறித்து பேசவோ எழுதவோ வருகிறவர்கள், எண்பதுகளில் வெளிவந்த திரைப்பாடல்களைக் குறிப்பிடாமல் இருப்பதில்லை. பெரும்பாலும், எண்பதுகளில் வெளிவந்த பாடல்களில் இருந்துவந்த தமிழ் அடையாளமும் மரபும் இன்றைய திரையிசைப் பாடல்களில் இல்லை என்பதுதான் அவர்கள் சொல்லவருவது. எப்போதும் இப்படிக் குறைப்பட்டுக்கொள்வது சிலருக்கு வியாதி என்று கடந்து சென்றாலும் அக்கருத்தில் பொதிந்துள்ள உண்மையை மறுப்பதற்கில்லை.

எண்பதுகளுக்கு முன்பு வந்த பாடல்களைச் சிலாகித்தவர்களைப் போலவே, எண்பதுகளில் தன் பதின்பருவத்தை அடைந்தவர்கள் அதற்குப் பின்வந்த பாடல்கள் மீதும் அதே மாதிரியான குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். காலத்தின் மாறுதலுக்கேற்ப அளவுகோல்கள் மாறுகின்றனவே தவிர, விமர்சனங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன.

நூறாண்டுகால தமிழ் சினிமாவில் அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட தமிழ்த் திரைப்படங்கள், கருத்தையும் பாட்டையும் இன்னும் கைவிடவில்லை என்பது ஆறுதல். ஆகவே சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எதார்த்த சினிமாவில் எதற்கு பாட்டு என்று அவர்கள் கேட்கிறார்கள். காலந்தோறும் மாறிவரும் சினிமாவில், இன்னும் பாடல்களைக் கட்டிக்கொண்டு அழவேண்டுமா? என்கிறார்கள். சிலர் பாடல்களே இல்லாத திரைப்படங்களை எடுத்து, இதுதான் அசல் சினிமா எனவும் சொல்ல விழைகிறார்கள். ஆனாலும், சினிமாவிலிருந்து பாடல்களை நீக்கும் முயற்சியில் அவர்கள் இன்னுமே வெற்றி பெறவில்லை.

இசையென்பது வார்த்தைகளுக்கு வெளியே இருக்கிறது. ஒரு காலம்வரை நம்முடைய கவிஞர்களும் இசையறிவு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களுடைய பாடல்களில் பயின்றுவரும் ராகத்தின் பெயரைக் குறிப்பிட்டு எழுதும் வழக்கம் இருந்திருக்கிறது. கவிதை எழுதுபவரின் முதல் தகுதியாக இசையை வைத்திருக்கிறார்கள்.

அந்த இசை ஒழுங்குகளுக்கு ஏற்ப யாப்பு அமைந்திருக்கிறது. அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் என்று சொல்லக்கூடிய விருத்தப்பாக்க ளிலும் இசையின் தாளத்திற்கேற்ப கவிதைகளை வடிக்கும் ஆற்றலை அந்த காலத்துப் பாணர்கள் பெற்றிருக்கிறார்கள். பாரதி போன்றோர் நாட்டுப்பாடல்களில் உள்ள இசை ஒழுங்குகளை, தங்கள் கவிதைகளில் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள். குறவஞ்சி முதலான இலக்கிய வகைகளில் உள்ள சந்தங்களை உற்றுணரும் பயிற்சியில்லாமல் ஒருவர் நல்ல கவிஞராக ஆக முடியாது என்னும் எண்ணம் அன்றி ருந்திருக்கிறது.

புதுக்கவிதை என்ற வடிவத்தால் தமிழ்க் கவிஞர்கள் இழந்த முதன்மையான ஒன்று, சந்தத்திற்கு பாடலோ கவிதையோ எழுதும் பயிற்சி. எதுகை மோனையை விடுத்து இயல்பாக எழுதினால் போதுமென்று வந்ததால், மரபுப் பயிற்சி அறவே இல்லாமல் போய்விட்டது. ஒருமை பன்மை மயக்கங்களைக்கூட சரிவர புரிந்துகொள்ளாமல் எழுதிவரும் எத்தனையோ பேர் நவீனக் கவிஞர்களாக வலம் வருகிறார்கள். அவர்களில் சிலர், திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறார்கள். மரபு பயிற்சியில்லாத காரணத்தால் அவர்களால் இசைக்கேற்ப வார்த்தைகளைப் போட முடியாமல் திணறியிருக்கிறார்கள். தனனன்னா தனனன்னா என்ற தத்தகாரத்தை உள்வாங்கி, அதற்கேற்ப வார்த்தைகளை இட்டு நிரப்புவது பெரிய கம்பசித்திரமா என ஒரு சந்தர்ப்பதில் நக்கலாகக் கேட்ட அவர்கள், அந்த தனனன்னா தனனன்னாவுக்கு எப்படி வார்த்தைகளைப் போடுவது என என்னிடமே கேட்ட ஹாஸ்யங்கள் நிறையவே உண்டு.

எண்பதுகளில் திரைப்பாடல் எழுதிக்கொண்டிருந்த அல்லது எழுத வந்த பாடலாசிரியர்கள் பலரும் யாப்புப் பயிற்சி பெற்றிருந்தார்கள். புதுக்கவிதைகளால் அறியப்பட்ட நா. காமராசன், மு. மேத்தா, வைரமுத்து போன்றோர்க்கு திரைப்பாடல் சித்திக்கக் காரணம், அவர்கள் இயல்பாகவே பெற்றிருந்த மரபுப் பயிற்சிதான். இசைப்பயிற்சி இல்லாதபோதும் அதை ஈடுசெய்யக்கூடிய தகுதியாக யாப்பை அவர்கள் கற்றிருந்தார்கள். மேற்கூறிய மூவரும் தமிழிலக்கிய மாணவர்கள். எனவே, அவர்கள் தமிழைக் கற்றிருப்பதில் ஆச்சரியமில்லை.

இளவயதிலிருந்தே பாட்டுடனும் இசையுடனும் புழங்கிய கங்கைஅமரனும் அப்படித்தான். எந்த சந்தத்திற்கும் வார்த்தைகளை இட்டு நிரப்பும் சாகசக் கலையை அவர் தன்னுடைய சகோதரர்களிடமிருந்து பெற்றிருந்தார். ஆனால், ஒரு பாடலாசிரிய ராக என்னை திரும்பத் திரும்ப வியப்பில் ஆழ்த்தியவர் பாடலாசிரியர் எம்.ஜி. வல்லபனே.

பத்திரிகையாளராக பணிபுரிந்துகொண்டே பாடலாசிரியரானதாலோ என்னவோ அவர்மீது எனக்கேற்பட்ட பெருமித உணர்வுகள் குறையவே இல்லை. எண்ணிக்கையில் முந்நூறு பாடல்களுக்குமேல் எழுதியிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆனால், இணையத்தில் காணக் கிடைப்பவை நூறு பாடல்களுக்கும் குறைவே. அவரிடம் நெருங்கியிருந்தவர்களிடம் விசாரிக்கையில் நூற்றுக்கும் குறைவான பாடல்களே அவர் எழுயிருக்கிறார் என்கிறார்கள். அண்ணன் அறிவுமதியின் பெயரை முதலில் திரையில் காட்டிய பெருமை வல்லபனையே சேரும்.

அறிவுமதி மட்டுமல்ல எழுத்தாளர் சுஜாதாவையும் திரையில் காட்டிய பெருமை அவருடையது. எழுத்தாளர் சுஜாதா மீதும் அவர் எழுத்துக்கள் மீதும் அபிமானம் கொண்டிருந்த வல்லபன், அவரை தான் இயக்கிய "தைப்பொங்கல்' திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். வல்லபன், தன்னால் நேசிக்கப்படுபவர்களையும் தன்னை நேசிப்பவர்களையும் பிரித்துப் பார்க்காமல், அவர்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுவதில் குறியாயிருந்தவர்.

""பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்னும் திரைப்படத்தில் முதல் பாடலை எழுதிய எம்.ஜி. வல்லபன், கொஞ்சம் காலம் பள்ளி ஆசிரியராகவும் அதன்பின் பத்திரிகையாசிரியராகவும் இருந்தவர். பாடகி எஸ்.பி. ஷைலஜாவுக்கும் அதுவே முதல் பாடல். ""சோலைக் குயிலே காலைக் கதிரே'' என்று ஆரம்பிக்கும் அப்பாடல் 1979-ல் வெளிவந்தது. வெளிவந்த காலத்திலிருந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படும் பாடலாக அப்பாடல் இருந்து வருகிறது. "கரும்பு வில்' என்னும் படத்தில் அவர் எழுதிய ""மீன்கொடி தேரில் மன்மதராஜன்'' என்னும் பாடலை அவ்வளவு எளிதாக  யாரும் மறந்துவிடமுடியாது. அதன் பாதிப்பில்தான் மன்மதராசா என்னும் பதத்தை என்னையுமறியாமல் பயன் படுத்தினேனோ என்னவோ?

ஒருமுறை எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷிடம் பாடலாசிரியர் வல்லபனைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நவீன இலக்கிய பரிச்சயமுடையவரும் நல்ல நண்பருமான ஜெகதீஷ், எம்.ஜி. வல்லபனை மிக நேர்த்தியான சொற்களால் பகிர்ந்துகொண்டார். அதற்கு முன்புவரை ஜெகதீஷின் வார்த்தைகள் யார் ஒருவரைப் பற்றியும் அத்தனை புளகாங்கிதத்தோடு வெளிப்பட்டதில்லை. அவர் வார்த்தைகளின் சாரம் இதுதான், சினிமா பத்திரிகை என்றால் நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள், கிசுகிசுக்கள் இன்னபிற ஆபாசங்கள் மட்டுமே இடம்பெறும் என்னும் நிலையை மாற்றியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு.

அட்டையிலிருந்து அட்டைவரை பார்க்கக் கூடியதாக மட்டுமே இருந்து வந்த சினிமா பத்திரிகையைப் படிக்கக்கூடிய பத்திரிகையாக அவரே உருவாக்கினார். நவீன சிற்றிதழில்கூட வெளிவராத பல அரிய தகவல்களை உள்ளடக்கி வெளிவந்த பிலிமாலயா, சினிமா பத்திரிகைகளில் முன்மாதிரி யாக அமைந்தது. அதில், எம்.ஜி. வல்லபனால் தொடர்ந்து எழுதப்பட்டுவந்த ""ஜீனியஸ்'' கேள்வி பதில் பகுதி குறிப்பிடத்தக்கது.

ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களில் ஒன்றான கேள்வி எழுப்புதலை அவர் இறுதிவரை செய்து வந்தார். ஆதாயங்களுக்காக பிரபலங்களை தட்டிக்கொடுக்கும் பழக்கம் அவரிடம் அறவே இருந்ததில்லை. அன்றைய சினிமா பிரபலங் கள் பலருடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. என்றாலும், பாடல் வாய்ப்புக்காக அவர் யாரிடமும் போய் நிற்கவில்லை. வைரமுத்துவைத் தவிர வேறு யாருமே பாடலாசிரியர் இல்லை என்று புத்தகம் எழுதிய காவ்யா சண்முகசுந்தரம்கூட வல்லபனை குறைத்து மதிப்பிடவில்லை என்பதிலிருந்தே வல்லபனின் ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம். மாற்றுக்கருத்து உள்ளவர்களாலும் மதிக்கப்படுபவராக வல்லபன் இருந்திருக்கிறார்.

பிலிமாலயா அலுவலகத்திலிருந்து வெளிவந்த பெண்மணி, ஹெல்த் பத்திரிகை களும்கூட வழக்கமான வடிவத்திலிருந்து புதுவகையான வடிவத்தைக் கொண்டிருந்தன. உள்ளடக்கத்திலும் மற்ற பத்திரிகைகளைவிட அவை தனித்து விளங்கின. பழகிய பாதையை மடைமாற்றும் விதத்தில் அப்பத்திரிகைகள் வெளிவந்தன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பத்திரிகை என்னும் கருத்துருவாக்கத்தையே அவர்தான் உருவாக்கினார். இன்று பெரும் பத்திரிகைகள் எல்லாம் அவர் போட்டுத் தந்த தடத்தில்தான் பயணிக்கின்றன. பெண்கள் பத்திரிகை என்றால் சமையல் குறிப்பு, கோலப் போட்டி என்று இருந்துவந்த நிலையை புனரமைத்து பெண்களின் அந்தரங்கத்தை அலசும் அரிய விஷயங்களை அவரே பேசுபொருளாக்கினார். பெண்களே கேட்கத் தயங்கும் கேள்விகளை வெளியிட்டு உரிய நிபுணர்கள் கொண்டு பதிலளிக்க வைத்தார்.

உலகியலின் அடங்கலுக்குத் துறைதோறும் நூல்கள் என்று பாரதிதாசன் எழுதுவார். அதை பத்திரிகை உலகில் சாதித்தவராக எம்.ஜி.வல்லபன் இருந்திருக்கிறார். சினிமா என்பது விஷூவல் மீடியம். ஆனால், ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் பக்கம் பக்கமாக வசனங்களை ஒப்பிக்கின்றன என இயக்குநர் பாலசந்தரிடம் கேட்கும் துணிவு அவருக்கிருந்தது. உலகமே வியக்கக்கூடிய ஒரு சினிமா மட்டும் போதாது. அறிவு வேண்டும். உலக சினிமாவையும் உள்ளூர் சினிமாவையும் கரைத்துக் குடித்திருக்காமல் இப்படி ஒரு கேள்வியை ஒருவர் எழுப்பமாட்டார். கேள்வி எழுப்புவரின் அறிவை பரிசோதிக்காமல், பதில் அளிப்பவரும் இம்மாதிரியான கேள்வியை அனுமதிக்க மாட்டார். ஆனால், பாலச்சந்தர் தன் தரப்பு நியாயங்களை மிக அழகாக வல்லபனிடம் விளக்கியிருக்கிறார்.

பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய அறச்சீற்றமும் போர்க்குணமும் வல்லபனிடம் மிகுந்திருந்தன. "திரிசூலம்' திரைப்பட வெற்றிவிழாவில் அதன் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இது ஏதோ ஒரு பத்திரிகையாளருக்கு நிகழ்ந்த சம்பவம் என்று வல்லபன் விட்டுவிடவில்லை. தன் சகா ஒருவருக்கு நிகழ்ந்த அவமானத்தை தனக்கு நிகழ்ந்த அவமானமாகக் கருதினார். பத்திரிகையாளர்களை சினிமா பிரபலங்கள், கிள்ளுக் கீரைகளாக நினைத்துவிடக் கூடாது என எண்ணினார். இத்தனைக்கும் சிவாஜி கணேசனின் தீவிர விசிறியான வல்லபன், ஆனந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒருவருட காலம் சிவாஜி கணேசனின் புகைப்படங்களையோ செய்திக் கட்டுரைகளையோ பிலிமாலயாவில் வெளியிட மறுத்திருக்கிறார். இதனால் சிவாஜி கணேசனுக்கு எந்த நஷ்டமுமில்லை. பத்திரிகைக்குத்தான் நஷ்டம். நியாயத்திற்காக எந்த நஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள அவர் துணிந்திருக்கிறார். தனக்கு விருப்பமானவரே ஆனாலும், பிழையைக் கண்டிக்க அவர் எடுத்துக்கொண்ட உறுதியை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சுரா எழுதியிருக்கிறார். சுரா, மக்கள் தொடர்பாளராக பல திரைப் படங்களுக்கு இருந்திருக்கிறார். மலையாள நாவல்களை இன்றும் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைக்கதையாளர், வசனகர்த்தா, இயக்குநர் என பல முகங்களை வல்லபன் கொண்டிருந்தாலும் என்னைக் கவர்ந்த முகம், பாடலாசிரியர் முகமே. தைப்பொங்கல், ஒரு இனிய உதயம், பகவதிபுரம் ரயில்வே கேட், எச்சில் இரவுகள், உன்னை நான் சந்தித்தேன், தர்மயுத்தம், நிலவு சுடுவதில்லை, உயிரே உனக்காக, அம்பிகை நேரில் வந்தாள், அகல்விளக்கு, உறங்காத நினைவுகள், உதிரிப்பூக்கள், உதயகீதம் உள்ளிட்ட எத்தனையோ படங்களில் அவர் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பாக, தைப்பொங்கல் திரைப் படத்தில் அவர் எழுதிய "தீர்த்தக் கரைதனிலே' என்னும் பாடல், இலக்கியக் குணமுடைய மிகச் சிறந்த திரைப்பாடல். தீர்த்தக் கரைதனிலே/தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே என்னும் பாரதியின் கவிதை வரிகளை பல்லவியாக்கிருப்பார். தீர்த்தக் கரைதனிலே/செண்பகப் புஷ்பங்களே எனத்தொடங்கும் அப்பாடலில் அவர் நிகழ்த்தியிருக்கும் இலக்கிய வேள்வி, ஆயிரமாயிரம் ஜுவாலைகளை நம்முள் எழுப்புகின்றன. முதல் இரண்டு வரியில் மொத்தச் சூழலின் சாரத்தையும் சொல்லிவிடுவார். பாரதியின் வரிகளை பல்லவியாக்காமல் சுயமாகவே சிந்தித்திருக்கலாமே என்றுதான் நானும் யோசித்தேன். ஆனால், மெட்டையும் சூழலையும் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் அவர் ஏன் பாரதியை எடுத்தாண்டார் எனப்புரிந்தது. அப்பாடல் முழுவதிலும் காவிய ரசமுடைய சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவரே அத்திரைப்படத்தின் இயக்குநராகவும் இருந்தபடியால் காட்சிகளைப் பாடலின் வாயிலாகவும் விளக்க முயன்றிருக்கிறார்.

ஒரு திரைப்பாடலில் அதிகபட்சம் மெட்டுக்கும் சூழலுக்கும் ஏற்ப, சொந்தமாகச் சில சிந்தனைகளை இட்டு நிரப்புவதுதான் இயற்கை. வல்லபனைப் பொறுத்தவரை அதற்கு மேலும் சொல்ல, அவருடைய இலக்கிய அறிவு அவரை வேண்டியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும். கானல் வரி என்னும் பதத்தை மிக அனாயசமாக திரைப்பாடலில் கையாண்டிருக்கிறார். கோவலனும் மாதவியும் காவிரிக் கரையில் ஊடாடிப் பிரிந்ததை தம்முடைய நாயகிக்கும் நாயகனுக்கும் பொருந்திச் சொல்லும் இலக்கிய ஞானம் இயல்பானதில்லை. நாணமேக வானிலே/நானும் நீயும் கூடியே/மோக ராகம் பாடியே/ போடும் சோக நாடகம் என்று சூழலை விவரித்துவிட்டு, காவிரி ஓரமாய்/கோவலன் காதலி/பூவிழி மாதவி/ காதலில் பாடிய/ கானல் வரி சுகம்/தேடிடும் நெஞ்சங்களே/கொஞ்சவா என்று முடித்திருக்கிறார். கானல்வரி சுகம் தேடிடும் நெஞ்சங்கள் என்ற வரியை திரும்பத் திரும்ப கேட்கையில், கானல் வரி என்றால் என்ன? என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டுத்தான் சிலப்பதிகாரத்தை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு திரையிசைப்பாடல்தான் சிலப்பதிகாரத்தை வாசிக்க என்னைத் தூண்டியது. என்னைப்போல எத்தனை பேரை அப்பாடல் வாசிக்கத் தூண்டியிருக்கும் என நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

காற்றில் மிதந்துவரும் பாடல்மூலம் நம்முடைய ஆதி இதிகாசங்களை, இலக்கியங்களை நினைவூட்டக்கூடிய பாடல்கள் இப்போது வருகின்றனவா என்றால் என்னிடம் பதில் இல்லை.

ஒருகாலம்வரை நம்முடைய திரைப்பாடலாசிரியர்களும் திரைக்கதையாசிரியர்களும் காவியக் கதாபாத்திரங்களை எடுத்தாளும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்மி கொத்த சிற்பி எதற்கு என்று திரைப்பாடல் குறித்து யார் யாரோ ஏகடியம் பேசினாலும் தமிழ்த் திரையிசை, நம்முடைய நீண்ட நெடிய இலக்கியத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது. திரைப்பாடல்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று, இன்றும்கூட சில நவீன சிறுபத்திரிகைகள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. அவை ஏன் இன்னும் சிறுபத்திரிகைகளாகவே இருக்கின்றன என்பதற்கான சான்றுகளை இம்மாதிரியான விவாதங்கள் நிரூபிக்கின்றன.

கொடுக்கப்பட்ட சந்தத்திற்குள் இரண்டாயிரமாண்டு கால தமிழ் இலக்கியத்தைத் தொட்டுக்காட்டும் செயலை, அப்பத்திரிகை களாலும் அப்பத்திரிகையில் எழுதுபவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியுமென எனக்குத் தோன்றவில்லை.

ஒரு திரைப்பாடலாசிரியராக எம்.ஜி. வல்லபன் தனித்துத் தெரிகிறார். மிகச்சில பாடல்களே எழுதியிருந்தாலும் அவற்றில் தன்னுடைய முத்திரைகளைப் பதிக்க அவர் தவறவில்லை. மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், தமிழ் இலக்கியத்திற்கு திரைப்பாடல் வாயிலாக செய்திருக்கும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. திரைப்பாடலை ரசித்து, அதன் விரிந்த தளத்தை உள்வாங்கி எழுதுபவர்களால் மட்டுமே திரைப்பாடல் மேல் பதிந்துள்ள கறைகளைத் துடைக்கமுடியும்.

இந்தி ட்யூனுக்கு பாடல் எழுதி புகழ்பெற்றிருந்த ஆசிரியர் மாணிக்கத்தின் பாதிப்பில்தான் வல்லபனும் பாடல் எழுதத் தொடங்கியிருக்கிறார். இள வயதில் தொடங்கிய ஆர்வம் நாளடைவில் திரைப்படங்களுக்கு பாடலும் வசனமும் திரைக்கதையும் எழுதும் ஆற்றலை வழங்கியிருக்கிறது. ஈரவிழி காவியங்கள் என்னும் திரைப்படத்தில் "தென்றலிடை தோரணங்கள்' என்னும் பாடல், இளையராஜாவின் இசை மேதமையை வெளிப்படுத்தும் அதே வேளையில் வல்லபனின் எழுத்துக்களையும் கவனிக்க வைக்கும். அப்பாடலில் வெளிப்படும் ஒரு கற்பனை, வானமுகில் வாகனத்தில்/நானவளை ஏற்றி வைத்து/ வானுலக தேவதைகள்/நாணும்வரை/போய் வரவா என்று எழுதியிருப்பார். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் வரியென்றால் உங்களால் நம்ப முடியாது. நம்ப முடியாத பல சொற்சேர்க்கைகளை வல்லபன் செய்திருக்கிறார். கலாபூர்வ அணுகுமுறையுடைய ஒருவரால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும். ஏதோ மெட்டு ஏதோ சொற்கள் என்று இட்டு நிரப்பாமல் தமிழாய்ந்து பாடலெழுதும் பயிற்சியை அவர் பெற்றிருக்கிறார்.

ஏனைய பாடலாசிரியர்களிடமிருந்து அவர் தன்னை ஏதோ ஒருவிதத்திலாவது மேம்படுத்திக் கொள்ள எண்ணியிருக்கிறார். வானமுகில் வாகனம் என்னும் பதம், கம்பராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் போல் வந்து விழுந்திருக்கிறது.

ஆரம்பகால இளையராஜாவின் பரிசோதனை முயற்சிகளில் அமைந்த பல பாடல்களில் வல்லபனின் பங்களிப்பு இருந்திருக்கிறது. தென்றலிடை தோரணங்கள் பாடலைக் கேட்கையில், வாத்தியக் கருவிகள் அதிகமில்லாமல் மிக மெல்லிய குரலில் ""தென்றலிடை தோரணங்கள், தோளினிலே கூந்தல் அலை'' என்று ஆரம்பிக்கும் இளையராஜாவின் குரல், மாய உலகத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறது. தாளலயம் நெஞ்சினிலே/தாளவில்லை/ தாங்கவில்லை என்று பல்லவி முடியுமிடத்தில் சொல்லமுடியாத சுகானுபவத்தை உணரலாம். வார்த்தைகளுக்கு அப்பால்தான் இசை உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள இப்பாடலில் இருந்து கிளைக்கும் உணர்வெழுச்சிகள் உதாரணம்.

பொதுவாக திரைப்பாடல்கள் பற்றி கருத்துச்சொல்கிறவர்கள், வேகமான துள்ளலிசைப் பாடல்களை மட்டுமே கவனிக்கிறார்கள். மேலோட்டமான ஒவ்வாத சிலேடைகளை வைத்துக்கொண்டு, "பார்த்தீர்களா திரைப்பாடலின் ஆபாசத்தை?' என்று தன் தரப்புக்கு நியாயம் கோருகிறார்கள். அவர்கள் கோருவதும் அவர்கள் எழுப்பு வதும் அதிக ஒலியில் இருப்பதால் வல்லபனைப் போன்ற எத்தனையோ பாடலாசிரியர்கள் கவனிக்கப்படாமலேயே போயிருப்பதுதான் இதிலுள்ள வேதனை.

வல்லபன் திரை தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளையும் இன்னபிற ஆக்கங்களையும் தொகுத்தால் இன்றைய சினிமாக் காரர்களுக்கு ஆச்சர்யமளிக்கும். வெறும் வசனங்களால் நகர்ந்து
கொண்டிருந்த அந்த காலத்தில் தமிழ் சினிமாவை தொழில்நுட்ப ரீதியில் அணுகியவர்கள் மிகச்சிலர். டெக்கினிக்கல் எக்ஸலன்சி நோக்கி தமிழ் சினிமா நகர ஆர்வமுற்றிருந்த அவரை, இரண்டொருமுறை சந்தித்திருக்கிறேன்.

வல்லபனின் பாடல்களை கேட்டிருந்த எனக்கு, அவருடைய குரலும் முகமும் எப்படியிருக்குமென்று அதுவரை தெரிந்திருக்கவில்லை.

ஆனால், என்னை அவர் அடையாளம் கண்டு நிறைய பேசினார். கவிதைகள் குறித்தும் திரைப்பாடல் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை நிறைய, அவருடைய பேச்சிலிருந்த தாய்மை போற்றத்தக்கது. முதல் சந்திப்பிலேயே வெகுநாள் பழக்கமுடையவர்போல அவர் நடந்து கொண்டார். சொல்ல செய்திகளும் அனுபவங்களும் இருப்பவர்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள், இன்றைக்கு முன்னணி பத்திரிகைகளில் ஆசிரியராகவும் நிருபர்களாகவும் இருக்கும் பலபேரை இவ்வாறான உரையாடல்கள் மூலம்தான் அவர் உருவாக்கினார்.

தன்னை சந்திக்க வருபவரின் தேவையறிந்து உதவுவது ஒருவகை. தன்னை சந்திக்க வருபவரின் வாழ்க்கைக்கு உதவுவது இன்னொருவகை. வல்லபன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். இவரால் என்ன ஆகும் அல்லது இவர் நாளை நமக்கு என்னவாக ஆவார் என்பதையெல்லாம் யோசிக்காதவர். முதல்முறை சந்திக்க வந்த என்னுள், அவர் எழுப்பிய அன்புக்கோட்டை இன்னமும் சிதிலமடையாமல் இருக்கிறது. இன்னும் கொஞ்சநாள் அவர் வாழ்ந்திருக்கலாம். பலபேருடைய வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த அவருடைய கட்டுரைகளோ கவிதைகளோ நேர்காணல்களோ தொகுக்கப்படவில்லை. தமிழ்த் திரைப்படங்களை ஆவணமாக்கத் துடித்த அவர், தன்னுடைய படைப்புகளை நூலாக்கவோ தொகுத்து வைக்கவோ எண்ணாமல் இருந்தது வருத்தத்துக்குரியது.

1984-ல் பாடலாசிரியனாக அறியப்படுவதைவிட பத்திரிகையாசிரியனாக பணியாற்றுவதே என் விருப்பம் என வண்ணத் திரைக்குப் பேட்டியளித்தார். அவர் என்னவாக வேண்டும் என விரும்பினாரோ அதுவாகவே ஆனார். ஆனால், அவர் என் போன்றவர்களால் அறியப்படுவது பத்திரிகையாளராக அல்ல. ஆகச்சிறந்த பாடலாசிரியராக. ஒருவரை, எண்ணிக்கையால் மதிப்பிடுவதைவிட எண்ணங்களால் மதிப்பிடுவது முக்கியம். தமிழ் திரையிசை குறித்து எழுதவோ பேசவோ வருகிறவர்கள், இனியாவது வல்லபன் போன்ற பாடலாசிரியர்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : DURAI.NANDAKUMAR Date & Time : 12/9/2017 12:59:06 PM
-----------------------------------------------------------------------------------------------------
நண்பர் யுகபாரதி மிக சிறந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலம் மறக்கப்பட்ட மகத்தான மனிதர்களில் எம்.ஜி.வல்லபனும் ஒருவர். இன்னும் அவர் வாழவார் காலத்தால் அழையா அவர் பாடல்கள் மூலம். துரை.நந்தகுமார், எழுத்தாளர் மற்றும் கவிஞ்சர்.
-----------------------------------------------------------------------------------------------------