Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை -7
 ................................................................
தஞ்சை பிரகாஷ் விருதுவிழா
 ................................................................
கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் மதவாதம்!
 ................................................................
ஆற்றுப் படையும் பழந்தமிழர் வாழ்வும்
 ................................................................
தரிசனம்! -சந்திரிகா
 ................................................................
கவிக்கோ
 ................................................................
பழநிபாரதி கவிதைகள்
 ................................................................
வெட்கக்கேடு!
 ................................................................
01-10-2017மொழி சமுதாயத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையையும் தன்னிடத்தே கொண்டதொரு ஊடகம். சமுதாயத்தின் வளர்ச்சி மாற்றத்திற்கேற்ப மொழியும் மாறி மாறி வளர்ச்சியுறுகின்றது. அம்மொழியுள், சமுதாயத்தின் பரிணாமங்களையும், சிந்தனைப் போக்குகளையும் பிற இயல்புகளையும் காணமுடியும். இவ்வடிப்படையில் இலக்கியமோ, இலக்கணமோ தோற்றம் பெற்ற நிலையில் அவற்றின் மொழி அவை உருவான கால மொழியாகப் பரிணமிப்பதும், படைப்பு கள் அச்சமுதாயத்தின் ஆவணமாகயிருப்பதும் இயல்பானதொன்று.

இவ்வாறு, ஆவணப்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பல படித்தரநிலைகளை, அவ்வக்காலப் படைப்புகளை மொழியே ஊடகமாயிருந்து வழிநடத்திச் செல்கிறது. ஒரு படைப்பென்பது மொழியின் பயனாக, படைப்பாளனின் ஆக்கமாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. அவகையில், சங்க இலக்கியம் எனும் படைப்புக்குள் நிரவிக்கிடக்கும் மொழி வெளிப்படுத்தும் சமுதாயத்தின் பல படித்தர நிலைகளை முன்வைப்பதும், நோக்குவதும் அவசியமாகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானில வாழ்க்கைச் செயற்பாட்டுள் அகம், புறம் எனும் இரு குறியீடுகளைக் கொண்டு படைப்புகள் கட்டமைக் கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இவை குறிப்பிட்ட ஒரே காலத்தைச் சார்ந்ததல்லாமல் பன்னூற்றாண்டு கால வரலாற்றின் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இக்கால வேறுபாட்டு உணர்வுடன் சங்க இலக்கியத்தை அணுகும் பொழுது அவற்றின் ஊடாக குறிப்பிட்ட கால சமுதாயத்தையும், சமுதாயவேறுபாடுகளையும் அறிந்துகொள்ள ஏதுவாகின்றது. இது, சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்களில் காணலாகின்றது. குறிப்பாக, மொழிநடை, சமயம், வாழ்க்கை நடைமுறைகள், பண்பாட்டு மாற்றங்கள், வழிபாட்டு மரபுகள், தொன்மக் கூறுகள் போன்றவை பெருமளவில் அறியப்பட முடிகிறது.

ஆற்றுப்படை என்பது பழந்தமிழ் இலக்கியப் பொருள் வகைகளில் ஒன்றெனப்படும். பொதுவாக, மக்கள் தம் வாழ்வை உணவு, உடை, பழக்கவழக்கம், வாழ்க்கைச்சூழல், நம்பிக்கை என்பனவற்றில் ஒன்றுபட்டும், வேறுபட்டும் வாழத் தலைப்பட்டனர். அச்சூழலானது, ஒரு சமூக அமைப்பினைக் கொண்டு விளங்கியது. அச்சமூகம் தமக்குள் வாழ முற்பட்ட சூழலில் தம்மைத் தாமே வழிநடத்திக் கொள்ள விழைந்தனர்.

இதனை ஆற்றுப்படை எனலாம். இது வழிகாட்டுதல் என்ற பொருளில் அமையும்.

இன்றையசூழலில் இயன்றளவும் இல்லாத ஒருவர்க்கு இயன்றோர் வழிகாட்டல் என்பது காண்பதற்குரியதொன்று. இது நடைமுறை. அவ்வாறு நோக்கின், அங்கு தான் பெற்றதையும், தன்னிடமிருப்பதைப் பகிர்வதையும் இல்லாதோர் அடைய வேண்டுமென்பதை, மக்கள் கூட்டம் விரும்பினர். அதனால், அங்கு இல்லாமை என்ற சொல் மறைந்து அனைத்தும் இருத்தமை என்ற சொல் ஆளப்படுகின்றது. இதை, அன்றைய ஆற்றுப் படை இலக்கியங்கள் எடுத்துக்காட்டின.

மேலும், அந்நூல்கள் பழந்தமிழர் வாழ்வை அனைவரும் விரும்பும் பொதுநிலைச் சமூகமாக மாற்ற முற்பட்டதையும் உணரமுடிகின்றது. மக்கள் வாழ்வுக்கு அடிப்படையான உண்ணும் உணவு, உடுத்த ஆடை, தங்குவதற்கு இடம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய வாழ்வியலில் பல திறப்பட்ட பகுப்புகள் உள்ளன. விருந்தோம்பல், தொழில், கொடை, வாழ்வு முறை, ஆடை அணிகலம், அறம், பெண்கள் போன்றவை வாழ்வியலின் நிலையாகக் கருதப்படுகின்றன. இவை, ஆற்றுப்படைக்குள் அடித்தளமிட்டு அனைத்து நிகழ்வுகளிலும் அமர்ந்திருக்கும் போக்கினை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. அதனுள், முதலாவதாக திருமுருகாற்றுப்படையில் காணப்படும் இறைமையைக் காணலாம்.

திருமுருகாற்றுப்படையில் பழந்தமிழர்களின் பெருங்கடவுள் முருகன் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இறைவழிபாட்டுக்குரிய கடவுளாகவும், தமிழ்க் கடவுளாகவும், குறிஞ்சி நிலக்கடவுளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளமை அறியத்தக்கது. எச்செயலையும் தொடங்கும் முன்பு முருகனை வழிபட்டால் அச்செயல் நல்லமுறையில் நடக்குமென்ற நம்பிக்கையையும் மக்கள் பதிவிட்டுள்ள
னர். எவ்வொரு துன்பச் சூழலிலும் நம்மை மீறிய புறசக்தியை நாடுதல் மனித இயல்பு. அதேபோல் எந்நிலையிலும் துன்பம் வந்தடையும் பொழுது தம்மை முருகன் காத்து அருள்புரிவான். காட்சியளிப்பான். அறியாமையைத் தகர்ப்பான். தீங்கினை நீக்குவான். புற இருளைப் போக்கி அக ஒளியைப் பரப்புவான் என்பதில் உறுதிகொண்டனர். அதனைக் கண்ணுறும்படியாக இந்நூலில்,

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டா அங்கு
. . . . . . . . . . . . . .
செறுநர்த் தேய்ந்த செல்உறழ் தடக்கை
மறுஇல் கற்பின் வாணுதல் கணவன்
(திருமுருகாற்றுப்படை 1-6)

எனச் சுட்டப்பட்டுள்ளது. பழந்தமிழர் முருகனை ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய உருவக்கடவுளாக ஆக்கி வழிபாடு நிகழ்த்தியமையும் அறிதல் நன்று.

அதனுள், ஒரு ஆழச்செய்தி பொதிந்துள்ளது. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு நிலையில் மக்கட்கு வரம் கொடுத்து மகிழ்கின்றது. வேள்விகளைப் பாதுகாக்கின்றது. உண்மையை உணர்த்துகின்றது. வெற்றியைத் தருகின்றது. நற்சொல்லைப் பேசுகின்றது. இதைக் காணுற்ற நிலை எத்தகைய இன்பம் தரும் நிலை? இறைவனோடு பேசுதலும், ஒன்றுபடலும், மகிழ்தலும் மக்கட்கு மன மகிழ்வு தரும் செயல். இதனை,

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
. . . . . . . . . . . . . .
ஆங்கு, அம்மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின்
(திருமுருகாற்றுப்படை 83-103)
என இந்நூல் வழிகாட்டுகின்றது.

அடுத்து, அன்றைய தமிழர்களின் பெருமிதச் செயலாக தலையாய அறமாக விருந்தோம்பும் பண்பு காணப்பட்டது. அதிதான் மனிதப் பிறவியின் பயன் தாம் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்தல் என்ற கொள்கை தான் என்பது திண்ணம். இதற்கு, அடுத்தவர்க்கு உணவிட்டு மகிழ்தல் என்பது ஒரு காரணமாகின்றது. அவரவர், தத்தம் நிலைக்கேற்ப விருந்தினரை உபசரித்தலால் மனம் மகிழ்ந்தனர். அன்பில் திளைத்தனர்.

மனிதம் வளர்த்தனர்.

ஒற்றுமைவிரும்பினர். அறம்போற்றினர். இச்செயல்களனைத்தும் ஒருவரின் வயிற்றுப் பசியை நீக்குதலால் மட்டுமே என்பதை, சிறுபாணாற்றுப்படையில் பரதவர் தம் இல்லம் நோக்கி வரும் பாணர்களுக்குத் தீஞ்சுவை நீரையும் சுவை மிக்க குழல் மீனையும் அளித்து உவந்ததை,

பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளை மலர்ப் படப்பை கிடங்கிற் கோமான்
. . . . . . . . . . . .
அறற்குழல் பாணி தூங்கி யவரொடு
வறற்குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்
(சிறுபாணாற்றுப்படை, 159-163)
என்ற வரி காட்டுகின்றது.

இந்நூலில், ஒரு மருதநிலக் காட்சி கண்முன் விரிகின்றது. வயல்சார்ந்த இக்குளிர்நிலப் பரப்பில் காஞ்சி மரங்களும், வெண்தாமரை மலர்களும், கரிய வண்டுகளும், காட்சிக்கு இனிதாயின. அவையன்றி, சான்றோர், அரிய காவல், அகன்ற வீடு, அகழியையுடைய ஆமூர் எனப் படும் நகரைச் சென்றடைந்தால் அங்குள்ள பெண்கள் அமலை வெண்சோற்றினை நண்டினது கலவையோடு உணவு வழங்கும் செயலானது, ஒரு உழவு விருந்தாக, நெற்சோறு உண்ணும் முறையாக, இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்
(சிறுபாணாற்றுப்படை 193-195)

எனச் சித்தரிக்கப்பட்டுள்ளதில் நிலச்செழுமையும், அந்தந்த இடத்தில் கிடைப்பனவற்றைக் கொண்டே விருந்தினரைப் பசியாற்றினர் என்ற பண்பும் காணமுடிகின்றது.

அறமே வாழ்விற்கு அடிப்படை என்று தமிழர்கள் வாழ்ந்தனர். தன்னிடம் மிகுதியாக உள்ள செல்வவளத் தினை இல்லாதோர்க்கு அளிப்பதே அறப்பண்பெனலாம். இப்பண்பு கொண்டு விளங்கியதே ஆற்றுப்படை நூல்களின் சிறப்பாகும். இதனை, பொருநராற்றுப்படைச் செய்தியைக் கொண்டு உணரமுடியும். வறுமையென்பது கொடிது. அதிலும் பசிக்கொடுமை மிகவும் துயரமான வறுமையாம். அத்தகையதொரு கலைஞனைப் பார்த்த ஒரு பொருநன் தான் அரசனிடமோ, வள்ளலிடமோ பரிசு பெற்று வறுமை நீங்கி வளமையுற்றதை அக்கலைஞனுக்கு வழிப்படுத்துகிறான்.

இக்காட்சி மிக அரியதொரு அறக்காட்சி. தான் பெற்ற வளத்தைப் பிறரும் பெறவேண்டும் என்பது எத்தகையதொரு உயர்நோக்காக அக்காலத் தமிழர் மனதில் பதிந்திருந்தது என்பதை இச்செய்தி உணர்த்துகின்றது. இது ஓர் உயர் எண்ணம். நல்லெண்ணம். மக்களை நல்வழிப்படுத்தும் அறமெனும் நற்சொல்லும், இனி தெனும் இன்சொல்லும் இணைந்த செம்மாந்த எண்ணம். ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்’ (தொல். பொருள். புறம்.37) என்ற தொடரின் உண்மையைப் பொருநராற்றுப்படை இதன்மூலம் எடுத்துரைக்கிறது. மேலும், அறிவுறுத்தல் என்பது நல்லதை மட்டுமே என்ற உயர்ந்த பண்பும் இங்கு சமூகத்திற்கு விதைக்கப்படுகிறது. அது, காலத்திற்கும் பொருந்தும் அறிவுரை. ஏற்புரை. நல்லுரை. பின்பற்றி நடக்கும் வழிகாட்டுரை. இதனை, பழந்தமிழர் கொண்டிருந்ததனை,

ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி வாழி         (பொருநராற்றுப்படை 61-63)
என உரைக்கின்றது.

இக்கலைஞர்கள், உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்தனர். பாணர்கள் யாழினை மீட்டிக் கொண்டு கல்லும், முள்ளும் நிறைந்த காடும், மலையும் கடந்து வள்ளல்களைத் தேடி வளம் அடையச் சென்றனர். அச்சமயத்தில், ஆடற்கலையில் வல்ல விறலியரையும் அழைத்துச் சென்று, வறுமையால் வாடித் துயருற்ற பொழுதும் வாழ்வின் அருமையைக் கணக்கில் கொண்டு அறவாழ்வு மேற்கொண்டதை,

மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நல்மென் சீறடி
(சிறுபாணாற்றுப்படை 31-32)

என்னும் அடிகள் பொருள் வளம் காண பன்னாட் கள் நடந்து சென்றதை உணர்த்துகிறது. இவ்வாழ்வுத் தமிழரின் அறவாழ்விலும் சிறப்பு வாழ்வு. பெருந்தவ வாழ்வு. பேரின்பம் நல்கும் வீடுபேற்று பெருவாழ்வு என்பதில் மாற்றமில்லை.

மக்களின் வாழ்தடங்களில் ஒன்றான உணவு ஒரு நிலைத்த சொல்லாகும். வந்தோரை வரவேற்று பசி நீக்கும் இச்சமூகத்தில் தமிழர்தம் உணவானது பல சுவைகளில் வேறுபட்டு நில அமைப்பிற்கேற்ப அமைந்திருந்தது. அக்காலத்தில் வேடர்குலப் பெண்கள், முற்றத்தில் நிலத்தில் பதிக்கப்பட்ட உரலில் உலக்கையால் புல்லரிசியைக் குற்றி எடுத்து ஆழ்கிணற்றின் உவர்ப்பு நீரை உலை நீராக்கி சோறு சமைக்கின்ற காட்சி தற்போதைய உணவு சமைத்தலின் தொடக்கமாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி, அச்சோற்றுக்கு இணையாக காய வைத்த இறைச்சித் துண்டைச் சேர்த்து சுற்றத்திற்கு உண்ண அளிப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரவல்லது. உணவு சமைத்தலே ஒரு நிறைவைத் தரக்கூடியது. தாம் சமைத்த உணவை பிறர் உண்ணும்பொழுது ஏற்படுகின்ற இன்பத்தை என்னென் பது? அது உணர்பவர்களால் மட்டுமே முடியும். இப்படி ஒரு நெற்சோற்று உணவினைப் படைத்தது பற்றி,

பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நிலஉரல் பெய்து,
குறுங்காழ் உலக்கை ஒச்சி, நெடுங்கிணறு
. . . . . . . . . . . . .
முரவுவாய்க் குழிசி முதி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு வளன் புழுக்கல்
(பெரும்பாணாற்றுப்படை 95-100)

எனப் பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகின்றது. மேலும், இந்நூலில், எயினர்கள் உடும்பு என்ற விலங்கின் கறியை உண்டனரென்பதும், உழவர்கள் அரிசி சோறுண்டனரென்பதும், செல்வ வளத்திலே திளைத்தவர்களும் அரிசி சோறு கொண்டனரென்பதும் அறியமுடிகின்றது.

குறிப்பாக, ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த குடும்பத்தினர் அளித்த உணவின் தன்மை ஆற்றுப்படை நூல்களில் மிகையான செய்திகளாக அமைந்துள்ளன. கூத்தராற்றுப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலப்பகுதிகளின் இயற்கை வளத்தில் விதைகள் விரும்பிய வண்ணம் விளைந்தது. எள், தினை,அவரை, வரகு, மூங்கில் நெல், வெண்சிறு கடுகு, இஞ்சி, கவலைக்கிழங்கு, மலைவாழை, பெருமூங்கில்நெல், கூவைக்கிழங்கு, தேமா, ஆசினிப்பலா, ஐவனம், வெண்ணெல், கரும்பு போன்றவைகள் வளம்கொழித்து பயன் தந்தன. காண்போரை மகிழ்வித்தன. இயற்கையைப் போற்றத் தலைப்பட்டன. வயிற்றுப் பசி தீர்த்தன. வாயார வாழ்த்தச் செய்தன. இத்தகையதொரு இன்பம் நல்கும் காட்சி,

மிகுவளம் பழுநிய பாணர் வைப்பின்
. . . . . . . . . . . . .
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய
. . . . . . . . . . . . .
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை
. . . . . . . . . . . . .
வாலிதின் விளைந்தன, ஐவன வெண்ணெல்
(கூத்தராற்றுப்படை 95-144)

என்ற வரிகளில் பாடப்பட்டு பழந்தமிழர்களின் பல உணவுகள் பட்டியலிட்டு பதியப்பட்டுள்ளன.

மக்களினம் நிலையாக வாழ முற்பட்டபோது பல்வேறுவிதமான தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்தினர். தம்மைப் பாதுகாக்கவும், குடும்பத்தை வழிநடத்திச் செல்லவும் மேற்கொள்ளக்கூடிய தொழில்கள் காலச்சூழலுக்கேற்ப மாறுபட்டு வருகின்றன. ஆனால், என்றென்றும் மாறாத உழவுத்தொழில், முதன்மை பெற்றிருந்ததனையும், நன்கு விவசாயத் தொழிலைப் பண்பட்டு செய்ததையும் பெரும்பாணாற்றுப்படை,

குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைறவில் பெரும்பகடு புதவில் பூட்டி
. . . . . . . . . . . . .
வன்புலம் இருந்த பின்றை
(பெரும்பாணாற்றுப்படை 196-205)

எனத் தெரிவிக்கின்றது. இங்கு செஞ்சால் உழவரென்பது பலமுறை உழுதலைச் செய்யும் உழவரைக் குறிக்கும். அதிகமாக உழவுத்தொழில் மேற்கொண்டு சிறந்ததையே குறிக்க செஞ்சால்உழவு என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. இது, உழவுத் தொழிலின் பழமையையும் மருதநில மக்களின் வளமையையும் அறிவிக்கின்றது. மேலும், காட்டில் வாழ்ந்த எயினர்,

எயிற்றியர் வேட்டையாடி விலங்குகளை இறைச்சியோடு சோற்றினைக் கலந்து வழங்கினரென்பதன் வழி வேட்டையாடுதல் தொழிலிலினை,

எயிற்றியர் அட்ட இன்புறி வெஞ்சோறு
. . . . . . . . . . . .
ஆமான் சூட்டின் அமை வரப் பெறுகுவீர்
(சிறுபாணாற்றுப்படை 175-177)

எனக் குறிக்கின்றது. மற்றும், இந்நூலில் மீன் பிடித்து வாழ்ந்த பரதவர்களையும், உப்புவணிகர்களையும், மரத்தொழில் புரிந்தவர்களையும், இரும்புத்தொழில் செய்தவர்களையும் பற்றி பேசப்பட்டுள்ளமை தமிழர்களின் உடல் உழைப்பிற்கும், மனத்திண்மைக்கும் சான்றாகும். காலங்காலமாய் செய்த தொழில் மட்டுமன்றி எவற்றிலெல்லாம் பயன் அடைய முடியுமோ அதில் தம் மனத்தைச் செலுத்தி புது உத்தியைக் கையாண்டமையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

மக்களின் அவசியமான தேவைகளுள் ஆடையும் ஒன்று. நல்ல ஆடை அணிதலால் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே. அது ஒரு உளவியல் கூறு என்று கூட சொல்லலாம். ஒருவரின் தோற்ற அமைப்பினையும், செயல்பாட்டையும் அன்றன்று தேர்ந்தெடுத்து அணியும் ஆடை நிர்ணயிக்கின்றது. மனதில் உற்சாகமூட்டுகின்றது. பழந்தமிழர்களின் ஆடை பற்றி பார்க்கும்பொழுது தத்தம் நிலைக்கேற்ப ஆடையணிந்தனர். அக்காலத்திய ஆடைகளின் அழகு, துணியின் மென்மை பற்றி பல குறிப்புகள் கிடைக்கின்றன. மக்கள் அவற்றை விரும்பி அணிந்துள்ளனர். துகில் என்பது ஆடை என்ற பொருளில் வழங்கியமையை பெரும்பாணாற்றுப்படை துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவை போல்’ (235) என்ற வரி குறிக்கிறது. மேலும், பொருநராற்றுப்படையில் அழகுமிக்க பூ வேலைப்பாடு செய்யப்பட்டு பாம்பின் தோல் போல் மெல்லிலிதாகயிருந்ததை,

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்களித்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
(பொருநராற்றுப்படை 82-83)

என்கிறது. திருமுருகாற்றுப்படையில் மலைவாழ் மகளிர் தழை ஆடையினை, அசோகு, வெள்ளாம்பல், குவளை, பிடவம், ஆம்பல், கொழுங்கொடி போன்ற இலை, மலர் கொண்டு செய்து அணிந்தமையினை,

குடித்த முல்லை இலையுடை நறும்பூ
. . . . . . . . . . .
கரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
(திருமுருகாற்றுப்படை 201-203)
எனச் சுட்டுகிறது.

பழம் மகளிர் இயற்கை அணிகலன்கள் பல அணிந்து தம்மை அழகுபடுத்தியுள்ளனர். தொடக்கத்தில் மரத்தண்டினாலும், மலர் இதழ்களினாலும் கோர்க்கப்பட்ட அணிகலனை அணிந்துள்ளனர். மலர்களால் ஆன மாலை அணிதலும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குவளை, செங்காந்தள், சண்பகம், மருத மர பூங்கொத்துக்கள் போன்ற மலர்கள் பயன்படுத்தப் பட்டன. திருமுருகாற்றுப்படையில் சூரர மகளிர் அசோக மரத்தளிர்களை காதுகளில் செருகியுள்ளதை, வண்காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்’ (திருமுருகு.31) எனக் குறிக்கின்றது. மேலும், விறலிலியர்கள் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் பொன்னாலான மாலையைச் சூட்டி யுள்ளதை, பெரும்பாணாற்றுப்படை,

புனை இருள்கதுப்பகம் பொலிலிய பொன்னின்
தொடைஅமை மாலை விறலிலியர் மலைய
(பெரும்பாணாற்றுப்படை 485-486)

என்கிறது. இது கூந்தல் அழகிற்கு அழகு சேர்ப்ப தன் அணிகலனாகப் பார்க்கப்படுகிறது. மகளிரின் அணிகலன்களில் பொதுவாக மாலை, தொய்யகம், வயந்தகம், சுரிதகம், மகரவலயம் போன்றவை இடம்பெற்றிருந்தன. சகலவிதமான காதணிகள் மலர்களின் இதழைக் கொண்டும், மர இலைகளைக் கொண்டும் அமைந்திருந்தது. இன்று, இக்காலத்தில் இம்முறை நடைமுறையிலிலிருப்பது அறிய வேண்டிய ஒன்று. திலகம் எனப்பட்ட நெற்றிப் பொட்டைக் குறிக்கும் வகையில் பொன்னால் செய்யப்பட்ட ஓர் அணிகலன் திருமுருகாற்றுப்படையில் “திலகம் தைஇய தேம் கமழ் திருநுதலென சுட்டுகிறது. சாம்புநதம் என்றொரு பொன்னாலான அணிகலன் பொலம்புனை அவிர் இழை என்ற பெயரால் குறிக்கப்படுகின்றது.

முத்தமிழில் ஒன்றான இசை பற்றிய எண்ணற்ற குறிப்புகளையும் ஆற்றுப்படை நூல்களில் பார்க்க முடிகின்றது. நரம்புக்கருவி, துளைக்கருவி, தோற்கருவி போன்றவையும், சங்கத்தமிழர்களின் தலையான இசைக்கருவியாக யாழ் இடம்பெற்றிருந்தமையும் அறியமுடிகிறது. பொருநராற்றுப்படை யாழின் உறுப்புக்களை குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் என பல வரிகளில் விவரித்துச் செல்கிறது. யாழ் பற்றிய மற்றுமொரு கூற்று பெரும்பாணாற்றில், இடனுடைப் போல் யாழ் முறையுளிக் கழிப்பி (பெரும்பாணாற்றுப்படை-462) என்று வருகிறது. கூத்தராற்றுப்படையிலும் யாழின் வருணனை வருணிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கையோடு ஒன்றுபட்ட நிலையில் மரத்தில் வசிக்கும் பறவைகள் எழுப்பும் ஒலிலி கூட கூத்தர்களின் இசைபோல் முழக்கமிட்டதை கோடு பல முரஞ்சிய கோளியாலத்து என்ற வரி காட்டுகின்றது.

இதுகாறும் காண்பவையைக் கொண்டு ஆற்றுப் படை நூல்களில் தமிழினத்தின் பண்பட்ட வளர்ச்சி நிலை பழங்காலத்திலிலிருந்தே இருந்தமையை அறியமுடிகின்றது. இன்றைய சமூக வளர்ச்சியின் தொடக்கமாக, மிகப்பெரிய வழிகாட்டுதலாக இவை வித்திட்டமையும் உண்மை. ஒவ்வொரு காலச்சூழலிலிலும் அது உணர்த்தப்பட்டும் வந்துள்ளது. இன்றைய வாழ்வியல் நவீனத்துவத்தின் முதற்கட்டமாக இந்நூல்களின் பாடுபொருள்கள் தனித்துவத்தோடு அமைந்துள்ளமையால் வழிநடத்தும் மொழிக்கூற்றாகத்தான் பார்க்கப்பட்டு வருகின்றது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :